ஆனந்த ஜோதி

இறைத்தூதர் சரிதம் 13: உறுதுணையாக இருந்த கதீஜா

செய்திப்பிரிவு

இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கச் சொல்லும் புறக்கணிப்புப் பிரகடனம் ஒன்றைத் தயார்செய்து காபாவின் சுவரில் குரைஷ் தலைவர்கள் தொங்கவிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். குரைஷ் தலைவர்களில் ஒருவரான அபூ லஹப், இறைத்தூதருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தொல்லைகள் கொடுக்கத் தொடங்கினார். இறைத்தூதர் குடும்பத்தினரிடம் யாரும் எந்தப் பொருட்களும் வாங்கக் கூடாது, விற்கக் கூடாது, அவர்களைச் சந்திக்கக் கூடாது என்று அவர் உத்தரவிட்டார்.

தாங்கள் சார்ந்த இனத்தினரின் ஆதரவில்லாமல் வாழ்வதென்பது அக்காலத்தில் மிகவும் கடினமானது. அவர்களின் பாதுகாப்பில்லாமல் வாழ்வதில் அடிப்படைச் சிக்கல்கள் இருந்தன. குழுவின் மூத்தவர்கள் யாராவது ஒருவருக்கு எதிராகத் திரும்பிவிட்டால், யாராலும் அந்த நபரிடம் பேசவோ பழகவோ முடியாது. மூத்தத் தலைவர்கள் சொல்லுக்குக் கீழ்படியும்வரை அவர் சுற்றத்தாரால் புறக்கணிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.

இறைத்தூதரின் மீதும், அவர் குடும்பத்தினரின் மீதும் குரைஷ் இனத்தவரின் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது. அதன்காரணமாக, இறைத்தூதர், அவருடைய மனைவி கதீஜா, குழந்தைகள், அபு தாலிப், அவருடைய குடும்பத் தினர் மக்காவை விட்டு வெளியேற முடிவுசெய்தனர். அவர்கள் ஊருக்கு வெளியே கூடாரம் அமைத்து வசிக்கத் தொடங்கினார்கள்.

பசி நோய் ஏழ்மை

வசதிகள் ஏதுமற்ற அந்தக் கூடாரங்களில், இறைத் தூதர் குடும்பம் மூன்று ஆண்டுகள் வசிக்க நேர்ந்தது. பசி, நோய்கள், ஏழ்மை என அனைத்தையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சில நேரம், அவர்கள் பசியைப் போக்க வேறுவழியில்லாமல் மரங்களின் இலைகளை உண்ணும் நிலைகூட இருந்தது.

முகம்மதுவின் பனு ஹாஷிம் குழுவைச் சேராதவர் என்பதால், கதீஜா நினைத்திருந்தால் மக்காவில் தங்கியிருந்திருக்கலாம். ஆனால், அவர் இறைத்தூதரின் கடினமான காலத்தில் அவருடன் இருக்கவேண்டு மென்று முடிவெடுத்தார். மக்காவில் செல்வச் செழிப் போடு வாழ்ந்துவந்த குடும்பத்தைச் சேர்ந்த கதீஜா, போதிய உணவும் நீரும் இல்லாமல் கூடாரத்தில் வாழத்தொடங்கினார்.

ஒருநாள் இரவு, கதீஜாவின் சகோதரர் மகனான ஹகீம் இபின் ஹிஷாம், உணவு எடுத்துக்கொண்டு கதீஜாவைப் பார்க்கச் சென்றார். குரைஷ் தலைவர்களில் ஒருவரான அபூ ஜாஹ்ல், ஹகீம் ஊரைவிட்டுச் செல்வதைப் பார்த்து, “எங்கே செல்கிறாய்?” என்று கேட்டார்.

“நான் கதீஜாவுக்கு உணவு எடுத்துச்செல்கிறேன்” என்று ஹகீம் உண்மையைச் சொன்னார்.

இதைக் கேட்ட அபூ ஜாஹ்ல் கோபமடைந்தார். அவர் ஹகீம் கைகளில் இருந்து உணவைப் பறித்துக்கொண்டார். “நீ அவர்களுக்கு உணவு எடுத்துச் செல்லக்கூடாது. அவர்களைப் பார்க்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது!” என்று கத்தினார்.

அப்போது, அந்தப் பக்கமாக அபூல் பக்தரீ என்பவர் அவர்களைக் கடந்துசென்றுகொண்டிருந்தார். அங்கு நடந்ததைப் பார்த்த அவர், “அவரை ஏன் தடுக்கிறீர்கள்? அவர் தன் அத்தைக்கு உணவு எடுத்துச் செல்கிறார். அதில் என்னத் தவறு இருக்கிறது?” என்று கேட்டார்.

இந்த நிகழ்ச்சி ஊரில் பெரிய சலசலப்பையும் விவாதங்களையும் உருவாக்கியது. பலரும் அபூல் பக்தரீ மாதிரியே கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். இறுதியாக, காபாவில் ஒட்டப்பட்டிருந்த இறைத்தூதர் குடும்பத்தினர் மீதான புறக்கணிப்புப் பிரகடனம் அகற்றப்பட்டது.

- பயணம் தொடரும்
சனியாஸ்னைன் கான் | தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’ குட்வர்ட்)

SCROLL FOR NEXT