சனியாஸ்னைன் கான்
குரைஷ் குழுவினர் தோல்வியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அதனால், மீண்டும் அவர்கள் அரசர் நெகஸின் மாளிகைக்கு வந்தனர். இஸ்லாமியர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி கடுமையாகப் பேசியதாக அவர்கள் அரசரிடம் பொய் சொன்னார்கள். இதைப் பற்றி அவர்களிடம் விசாரிக்க வேண்டுமென்று அரசரிடம் கோரிக்கை வைத்தனர்.
மீண்டும் இஸ்லாமியர்களை அழைத்து, அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி என்னச் சொன்னார்கள் என்று விசாரித்தார் அரசர்.
“எங்களிடம் எங்கள் இறைத்தூதர் என்னச் சொன்னாரோ அதைத்தான் நாங்கள் சொன்னோம். இயேசு, இறைவனின் சேவகர், இறைத்தூதர். அவர் இறைவனின் ஆன்மா, வாக்கு என்று எங்கள் இறைத்தூதர் சொல்லியிருக்கிறார்” என்றார் ஜாஃபர்.
அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றிச் சொன்னது அனைத்தும் உண்மைதான் என்று சொன்னார் அரசர் நெகஸ்.
அரசரின் கூற்றைக் கேட்ட அமைச்சர்கள் பலரும் எரிச்சலடைந்தனர். ஆனால், அவர்களையெல்லாம் அரசர் பொருட்படுத்தவில்லை.
அடைக்கலம் அளித்த அரசர்
இஸ்லாமியர்கள் எத்தியோப்பியாவில் அமைதியாக, பாதுகாப்பாக வாழலாம் என்று தெரிவித்தார் அரசர். மலைகள், தங்கம் என எதைக் கொடுத்தாலும் அவர்களுக்கு எந்தத் தீங்கும் வருவதற்குத் தான் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னார் அரசர்.
குரைஷ் குழுவினர் அளித்த அனைத்துப் பரிசுகளையும் திருப்பி அளிக்கும்படி அரசர் உத்தரவிட்டார். அரசவை கலைந்து சென்றவுடன் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாகத் தங்கள் இருப்பிடத்துக்குச் சென்றனர். ஆனால், குரைஷ் குழுவினர் இந்த நிகழ்ச்சியை அவமானமாகக் கருதினர்.
எத்தியோப்பியாவில் இஸ்லாமியர்கள் அமைதியாக வாழ ஆரம்பித்தனர். அப்போது, மக்காவில் இருந்து மதினாவுக்கு இறைத்தூதர் முஹம்மது குடிபெயர்ந்தார். அவருடன் பெரும்பாலோர் மதினாவுக்குக் குடிபெயர்ந்தனர். இறைத்தூதர் குடிபெயர்ந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, எத்தியோப்பியாவில் வசித்துவந்த ஜாஃபர் இபின் அலி தாலிப் உள்ளிட்ட இஸ்லாமியர்களும் மதினாவுக்குக் குடிபெயர்ந்தனர்.
எத்தியோப்பியாவுக்குக் குடிபெயர்ந்த இஸ்லாமியர்களை மக்காவுக்குத் திரும்பி அழைத்துவரும் முயற்சியில் தோல்வியடைந்ததால் குரைஷ் தலைவர்கள் கடுமையான கோபத்தில் இருந்தனர். அவர்கள் தங்கள் கோபத்தை மக்காவில் எஞ்சியிருந்த சில இஸ்லாமியர்களிடம் காட்டிவந்தனர். இஸ்லாமியர்களை எதிர்க்கும் இந்த முயற்சிக்கு அபு ஜாஹ்ல் தலைமை வகித்திருந்தார்.
இறைத்தூதரின் பணிகளைத் தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் குரைஷ் இனத்தவர் எடுத்தனர். ஆனால், அவை அனைத்திலும் தோல்வியடைந்ததால், அவர்கள் இறைத்தூதரின் குடும்பத்தை முற்றிலும் புறக்கணிக்க முடிவெடுத்தனர்.
- பயணம் தொடரும்
தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’, குட்வர்ட்)