ஆனந்த ஜோதி

81 ரத்தினங்கள் 16: ஏதேனும் என்றேனோ குலேசேகரரைப் போலே

செய்திப்பிரிவு

உஷாதேவி

சேரநாட்டில் திருவஞ்சிக்களம் என்னும் ஊரில் ‘திடவிரதர்’ என்கிற அரசனுக்கு கௌஸ்துப ரத்தினத்தின் அம்சமாக பராபவ ஆண்டு மாசி மாதம் புனர்வசு நட்சத்திரம் கூடிய நன்னாளில் குலசேகரர் அவதரித்தார்.
விஷ்ணுவின் மீது மிகுந்த பக்தி கொண்ட குலசேகரர், அரச சபையில் நடந்த ஒரு திருட்டு வழக்கில், விஷ்ணு பக்தர்களின் சார்பாக பாம்பிட்ட குடத்துக்குள் கையைவிட்டு, கடிபடாமல் தனது பக்தியை நிரூபித்த மன்னர் அவர். ஒருகட்டத்தில் அரசாட்சியின் மீது சலிப்பும் விலக்கமும் ஏற்பட்டு விஷ்ணு உறையும் திருத்தலங்களுக்குப் பயணிக்கத் தொடங்கினார்.

திருமலையப்பனைக் குறித்து பாசுரங்கள் பாடினார். திருமலையில் வாழக்கூடிய சேதன, அசேதன, தாவர சங்கம வஸ்துக்கள் அனைத்தும் பாக்கியம் பெற்றவை என்று கருதினார். அப்படிப்பட்ட திருமலையில் தான் ஒரு பட்சியாகவோ மீனாகவோ பொன்வட்டில் தாங்கி கைங்கரியம் செய்யும் பட்டராகவோ செண்பக மரமாகவோ இருப்பதற்கு ஆசைப்பட்டார்.

பக்தர்கள் பாதம்படும் பாதையாகவோ திருமலையில் ஓடும் காட்டாறாகவோ மலைச்சிகரமாகவோ தான் இருக்கவேண்டுமென்று விரும்பிப் பிரார்த்தித்தார். பெருமாளின் சன்னிதியின் படிக்கட்டாக இருந்து அவனது திருப்பவளவாய் காணும் பேறுவேண்டுமென்றார். ‘எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே’ உன் திருவுள்ள உகப்புக்குப் பாத்திரமாக வேண்டுமென்று திருவேங்கடவனிடம் அடைக்கலம் புகுகிறார்.
இன்றும் வேங்கடமலை வேங்கடேசப் பெருமாளின் கருவறையில் குலசேகரன் படி என்னும் அமைப்பு உள்ளது. குலசேகரரைப் போல், தான் இறைவனை வணங்கவில்லையே சுவாமி என்கிறாள் திருக்கோளூர் பெண் பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

SCROLL FOR NEXT