ஆனந்த ஜோதி

81 ரத்தினங்கள் 12: பிஞ்சாய் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே

செய்திப்பிரிவு

உஷாதேவி

வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள், வடபெருங்கோவிலுடைய எம்பெருமானே தனக்குக் கணவன் என்று ஞான வைராக்கியத்துடன் இருந்தவள்.
“மானிடவெர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்று தன் தந்தையாகிய பெரியாழ்வாரிடத்தில் அவள் உறுதியாக உரைத்தாள். தனது மனம், இந்திரியங்கள், கர்மா, வாழ்க்கை, உடம்பு, ஆத்மா அனைத்துமே கண்ணனுக்கே உரியவை என்கிறாள்.

இவள் சூடிக் கொடுத்த மாலையை இறைவன் ஆனந்தமாக அணி்ந்து கொண்டான். அதனால் சூடிக் கொடுத்த சுடர்க் கொடி எனப்பட்டாள். இவளது அழகுத் தமிழால் பாடியதால் ‘பாடவல்ல நாச்சியார்’ எனவும் போற்றப்பட்டாள். பெரியாழ்வாரின் நந்தவனத்தில் திருத்துழாய் மாடத்தின் அருகில் ஆடிப்பூரத்தில் பிறந்தாள். கண்ணனையே தன் மணாளனாகப் பாவித்து பாவை நோன்பு வைத்தாள். அவள் இயற்றிய திருப்பாவை, நான்கு வேதங்களின் சாரமாகத் திகழ்கிறது.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்,
வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்,
ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.

சிறு வயதிலேயே கண்ணணின் பெருமைகளைப் பெரியாழ்வாரும் ஆண்டாளுக்குக் கூறுவார். குழந்தை ஆண்டாளும் அதை கேட்டு கிருஷ்ண பிரேமையி்ல் மகிழ்ந்திருந்தாள். பெரியாழ்வாரே கண்ணணுக்கு கலியுக யசோதாவாக பாலூட்டிச் சீராட்டி வர்ணித்து பல்லாண்டு பாடினார், அவரின் மகள், அவரையும் வி்ஞ்சிக் கண்ணணை திருமணம் புரி்ந்துகொண்டாள்.

வல்லபதேவ மகாராஜன் ஸ்ரீரங்கத்துக்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் தோரணம் கட்டி பாலை கமுகு பந்தல் போட்டு, முத்துப் பந்தலினடியில் ஆண்டாள், ஸ்ரீரங்கனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.
“பிஞ்சிலே பழுத்தால் கனி ருசிக்காது”, வெம்பல் என்று அதற்கு பெயர். ஆனால், நம் ஆண்டாளோ பி்ஞ்சிலே பழுத்தாலும் தெவிட்டாத கனி போன்றவள்.

ஆண்டாளைப் போல் தான் சிறுவயதிலேயே பக்தி பண்ணவில்லையே சுவாமி என்று ராமானுஜரிடத்தில் நம் திருக்கோளூர் பெண்பிள்ளை வலியுடன் புலம்புகிறாள்.

(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

SCROLL FOR NEXT