ஆனந்த ஜோதி

முல்லா கதைகள்: இன்னும் கொஞ்சம் அவகாசம்

செய்திப்பிரிவு

முல்லா ஒரு கழுதையை வாங்கினார். அதற்கு அன்றாடம் முறையான உணவு வழங்க வேண்டும் என்று நண்பர் ஒருவர் முல்லாவிடம் கூறியிருந்தார். ஆனால், இந்த ஏற்பாடு முல்லாவுக்கு அதீதமான விஷயமாகத் தெரிந்தது.
தான் வளர்க்கும் கழுதைக்குக் குறைவான உணவைக் கொடுத்துப் பழக்கப்படுத்தலாம் என்று முடிவெடுத்தார். அதனால், ஒவ்வொரு நாளும் தன் கழுதைக்கு வழங்கும் உணவைக் குறைத்து கொண்டே வந்தார்.
ஒரு கட்டத்தில், உணவே கொடுக்க வேண்டிய தேவையில்லை என்ற நிலையையே உருவாக்கிவிட்டார். துரதிர்ஷ்டமாக கழுதை இறந்து போனது.
‘அய்யோ, பாவம். அது இறப்பதற்குமுன், எனக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்திருந்தால், ஒன்றுமே சாப்பிடாமல் வாழும் நிலைக்கு என் கழுதையைப் பழக்கப்படுத்தியிருப்பேன்’ என்று வருத்தப்பட்டார் முல்லா.

தலைப்பாகை

முல்லா ஒருநாள் வித்தியாசமான தலைப்பாகையை அணிந்துகொண்டு அரசவைக்கு வந்திருந்தார்.
ராஜாவுக்கு அந்தத் தலைப்பாகை பிடிக்கும்; அவருக்குப் பிடித்துவிட்டால், அரசருக்கு அதை விற்றுவிடலாம் என்று தெரிந்துதான் அதை அணிந்துவந்திருந்தார்.

‘இந்த அற்புதமான தலைப்பாகையை எவ்வளவு கொடுத்து வாங்கினீர்கள், முல்லா?’ என்று கேட்டார் ராஜா.
‘ஆயிரம் பொற்காசுகள், அரசே,’ என்றார் முல்லா.

முல்லா என்ன செய்ய முயற்சிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட பிரதம மந்திரி, ராஜாவின் காதுகளில் கிசுகிசுத்தார். ‘ஒரு முட்டாளால்தான் இந்தத் தலைப்பாகையை இவ்வளவு பொற்காசுகள் கொடுத்து வாங்கமுடியும்’.
‘ஏன் இவ்வளவு காசுகள் கொடுத்து வாங்கினீர்கள். ஆயிரம் பொற்காசுகள் விலை கொண்ட தலைப்பாகையைப் பற்றி நான் கேள்விபட்டதேயில்லை’ என்றார் ராஜா.

‘அதுதான் ஆச்சரியம். இந்த உலகத்திலேயே ஒரேயொரு அரசரால்தான் இப்படியொரு தலைப்பாகையை வாங்க முடியும் என்று எனக்குத் தெரிந்ததால்தான் அதை வாங்கினேன்,’ என்றார் முல்லா.
முல்லாவின் புகழுரையால் அகமகிழ்ந்து போனார் ராஜா. இரண்டாயிரம் பொற்காசுகள் கொடுத்து அந்தத் தலைப்பாகையை வாங்கிக்கொண்டார்.

பிறகு, பிரதம மந்திரியிடம், ‘உங்களுக்கு வேண்டுமானால் தலைப்பாகைகளின் மதிப்பு தெரிந்திருக்கலாம். ஆனால், எனக்கு ராஜாக்களின் பலவீனங்கள் தெரியும்’ என்று சொன்னார் முல்லா.

- யாழினி

SCROLL FOR NEXT