ஆனந்த ஜோதி

காற்றில் கீதங்கள் 27: தூரனின் தமிழ்த் தூறல்!

செய்திப்பிரிவு

வா.ரவிக்குமார்

தமிழையும் அறிவியலையும் இணைக்கும் புள்ளியாக இலக்கியத்தில் தன்னுடைய பங்களிப்பைச் செலுத்தியவர் பெரியசாமி தூரன். அறிவியல் கலைக் களஞ்சியம், குழந்தைகள் கலைக் களஞ்சியம் ஆகியவற்றைத் தமிழில் உண்டாக்கிய பெருமைக்கு உரியவர். பாரதியாரின் படைப்புகளைக் குறித்த ஆய்வு நூல்களையும் எழுதியிருக்கும் பெரியசாமி தூரன், இசை உலகத்துக்கும் பெரும் பங்களிப்பை செலுத்தியவர். முரளிதர கோபாலா, கலியுக வரதன், தாயே திரிபுரசுந்தரி போன்ற இவரின் புகழ்பெற்ற பாடல்களை கர்னாடக இசை உலகில் எம்.எஸ்.சுப்புலட்சுமி தொடங்கிப் பலரும் பாடிப் பிரபலப்படுத்தியிருக்கின்றனர்.

பெரியசாமி தூரனின் தமிழ், காலதேச வர்த்தமானங்களைக் கடந்து மேற்குலகில் வசிப்பவர்களையும் வசீகரிக்க வைப்பதற்கான சாட்சி, அவருடைய `நீ நினைந்தால் ஆகாததும் உண்டோ... நிரஜதல நயனி மகாலட்சுமி’ பாடலுக்கு பிரபல கிளாரினெட் கலைஞர் ஷங்கர் துக்கர் இசையமைத்திருப்பது.

அந்தப் பாடல் அமைந்த தர்பாரி கானடா ராகத்திலேயே வித்யா வாக்ஸும் வந்தனா அய்யரும் பாடியிருக்கின்றனர். கிளாரினெட்டில் ராகத்தின் ஆதார ஸ்ருதிகளை குறிப்பால் உணர்த்திவிட்டு பாடும் குரலோடு உறுத்தாமல் தொடர்கிறது இசை. தாளத்துக்கு மெலிதாக டிரம்ஸ், தபேலா, இடையிடையே கஞ்சிராவையும் சேர்த்துக் கொள்கின்றனர்.

‘சாதனைகளும் சோதனைகளும் வாழ்க்கையில் மாறி மாறி வந்தாலும் உன் அருள் இல்லாமல் வாழ்வதற்கு வழி ஏது?’ என்று அன்னை மகாலஷ்மியிடம் கேள்வியாலேயே ஒரு அருள் கோரிக்கையை முன்வைக்கும் இந்தப் பாடலைப் பாடிய இரண்டு பெண்களின் குரலும், பெ.தூரனின் தமிழ்த் தூறலும் கேட்பவர்களின் காதுகளுக்கு இனிமை சேர்க்கின்றன.

நீ நினைந்தால் ஆகாததும் உண்டோ பாடலைக் காண:

SCROLL FOR NEXT