ஆனந்த ஜோதி

புனித பிரான்சிஸ் வாழ்வில்: வீட்டைப் பழுதுசெய்ய அழைத்த கிறிஸ்து

செய்திப்பிரிவு

டேவிட் பொன்னுசாமி 

கிறிஸ்தவ சமய வரலாற்றில் புனித பிரான்சிஸின் பெயர் முக்கியத்துவம் வாய்ந்தது. 12-ம் நூற்றாண்டில் பிறந்து தனது 45 வயதிலேயே இறந்த பிரான்சிஸ், சிறுவயதில் தந்தையின் வியாபாரத்திலும் பின்னர் சின்னச் சின்னப் போர்களிலும் ஈடுபட்டவர். இத்தாலி நாட்டில் உள்ள பெருகியாவுக்குப் போருக்குச் சென்று, ஒரு வருடம் சிறைப்பட்ட நாட்களில் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அப்போதுதான், தான் வாழும் வாழ்க்கையின் பொருளின்மையை உணர்ந்தார்.
சொந்த ஊரான அசிசிக்கு மீண்டும் திரும்பிய அவர், புனித டேமியன் தேவாலயத்துக்குப் போகும் வழியில் உள்ள புராதனச் சிலுவையின் முன் நின்று பிரார்த்தனை செய்தார். அப்போது ஒரு குரல் கேட்டது. “போ, பிரான்சிஸ். பழுதாக உள்ள என் வீட்டைச் சென்று சரிபார்” என்று அந்தக் குரல் சொன்னது.

அந்தக் குரலை அப்படியே எடுத்துக்கொண்ட பிரான்சிஸ், தனது தந்தையின் கடைக்கு நேரடியாகச் சென்று தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, தேவைப்படும் பணத்துக்காகத் தனது குதிரையைச் சந்தையில் விற்று புனித டேமியன் தேவாலயத்தைப் பழுதுபார்ப்பதற்காக ஓடிப்போனார். ஆனால், அங்கிருந்த பாதிரியாரோ, அவர் கொடுத்த பணம், தங்கத்தை எடுத்துக்கொள்ளவில்லை. பிரான்சிஸின் தந்தையான பெர்னார்டோன், மிகவும் கஞ்சத்தனமானவர். தன் மகனின் நடத்தையைப் பார்த்து மிகுந்த கோபம் கொண்டார். தந்தையின் பார்வையிலிருந்து தப்புவதற்காக, புனித டேமியன் ஆலயத்துக்கு அருகிலுள்ள மலைக்குகையில் பிரான்சிஸ் ஒரு மாதம் மறைந்திருந்தார்.

ஒரு கட்டத்தில் மலைக் குகையிலிருந்து பசியோடு அழுக்காக வெளியே வந்த பிரான்சிஸ், தனது வீட்டுக்கு வந்தார். வழியில் அவரைப் பைத்தியக்காரன் என்று நினைத்து மக்கள் கற்களை எறிந்தனர். இதைப் பார்த்த தந்தையார், வீட்டில் ஒரு நிலவறையில் தன் மகனைப் பூட்டிவைத்தார். தந்தையார் பெர்னார்டோன் இல்லாதபோது, பிரான்சிஸை அவரது அன்னை திறந்துவிட்டார். சிறுவயதிலிருந்து ஏழ்மையில் கடவுளைக் கண்ட பிரான்சிஸ், அங்குள்ள குடியானவர்கள் அணியும் அங்கியை அணிந்து அதைச் சுற்றி ஒரு நாடாவைக் கட்டி, கிராமங்களில் தவ வாழ்வையும் சேவையையும் மேற்கொண்டார்.

1224-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 அன்று நடந்த திருச்சிலுவை வழிபாட்டில் மலையில் புனித பிரான்சிஸ் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, நெருப்பு தேவதையைத் தரிசித்தார். அதைத் தொடர்ந்து அவரது உடலில் சிலுவைக் காயங்கள் ஏற்பட்டன. புனித பிரான்சிஸின் வலப் பக்கத்தில் கடலில் உள்ள பெரிய மீன்களைத் தாக்கும் வேலால் காயப்படுத்திய தடயம் இருந்தது. கைகளிலும் பாதங்களிலும் ஆணிகள் அடித்த தடயங்கள் இருந்தன. இந்தக் காயங்களால் பிரான்சிஸ் அளவற்ற வலியையும் துயரத்தையும் எதிர்கொண்டார்.

1226-ம் ஆண்டு தனது 44 வயதில் பிரான்சிஸ் மரணத்தைத் தழுவினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்பதாம் போப் கிரிகரி அவருக்கு புனிதர் பட்டத்தை அளித்தார். கிறிஸ்துவத் திருச்சபை மிகவும் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த காலகட்டத்தில், கிறிஸ்துவின் எளிய வாழ்க்கையைப் பின்பற்றி ஏழைகளையும் ஏழ்மையையும் அரவணைத்தவர் பிரான்சிஸ்.

SCROLL FOR NEXT