ஆனந்த ஜோதி

கோடுகளாலான கடவுள்

செய்திப்பிரிவு

 என். கௌரி 

கண்ணப்ப நாயனார், ஏகலைவன் என்று எண்ணற்ற புராணக் கதைகளை தன் அம்மாவிடம் கேட்டு வளர்ந்ததன் தாக்கம் தனது ஓவியங்களில் உண்டு என்கிறார் ஓவியர் ஜெ. சங்கர நாராயணன். ‘பெரும்பாரக் கோடும்’ என்னும் தலைப்பில் இவரின் முதல் ஓவியக் காட்சி சென்னை தக்ஷிண சித்ராவில் தற்போது நடைபெற்று வருகிறது. முழுமுதற் கடவுள் விநாயகரைப் போற்றும் விதமாக, தன் முதல் ஓவியக்காட்சிக்கு விநாயகர் அகவலிலிருந்து ‘பெரும்பாரக் கோடும்’ என்று தலைப்பு வைத்திருப்பதாகச் சொல்கிறார் அவர்.

இந்த ஓவியக் காட்சியில், தொன்மக் கதைகள், விவசாயிகளின் வாழ்க்கை என இரண்டு கருப்பொருள்களில் இவரது பதினேழு ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.
‘குறிஞ்சி முருகன்’, ‘காசி அன்னப்பூரணி’ ‘தெய்விகப் பரிசு’, ‘நன்மங்கலம் பழன்டியம்மன்’, ‘ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட நாள்’ ‘ஆதிசங்கரரின் போதனைகள்’, ‘ஜடாயு மோட்சம்’ ஆகிய இவரின் ஓவியங்கள் இந்தக் காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த ஓவியங்களையெல்லாம் இயல்பான எளிமையான, பின்னணிக் காரணங்களுடன் உருவாக்கியிருக்கிறார் சங்கர நாராயணன். “சிறுவயதிலிருந்தே முருகன்தான் உன்னைக் காப்பாற்றுவார்’ என்று என் அம்மா என்னிடம் சொல்லிக்கொண்டேயிருப்பார். அந்தத் தாக்கத்தில் உருவானதுதான் குறிஞ்சி முருகன். இந்த ஓவியத்தை மூன்றாவது முறையாக வரைந்திருக்கிறேன். வரும்காலத்திலும் இன்னும் பல முறை இந்த ஓவியத்தைத் தொடர்ந்து வரைவேன்” என்று சொல்கிறார்.

குமார சம்பவத்தில் பார்வதி, சிவனுக்குத் தாமரை வழங்குவதை ‘தெய்விகப் பரிசு’ என்றும், விவேக சூடாமணியிலிருந்து ஆதிசங்கரர் உடலையும் ஆன்மாவையும் விளக்கும் காட்சியை ‘ஆதிசங்கரரின் போதனைகள்’ என்றும் ஓவியங்களாக உருவாக்கியிருக்கிறார் இவர். ‘எளிமையான இறைவன் ஆலயம்’ என்ற ஒரு திரைப்படப் பாடல் வரிப்பிடித்துபோனதால், தன் ஊரில் இருக்கும் ஓர் எளிமையான ஆலயத்தை ‘நன்மங்கலம் பழன்டியம்மன்’ என்ற ஓவியமாக மாற்றியிருக்கிறார் இவர்.

“குறிஞ்சி முருகனைப் போல, காசி அன்னப்பூரணி ஓவியத்தையும் தொடர்ந்து என் வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு விதங்களில் வரைந்துகொண்டுதான் இருப்பேன். உணவில் எனக்குப் பிரியம் அதிகம். எனக்கும் உணவுக்கும் இருக்கும் தொடர்பைத்தான் இந்தக் ‘காசி அன்னப்பூரணி’ ஓவியத்தில் விளக்கியிருக்கிறேன்” என்று சொல்கிறார் சங்கர நாராயணன். இப்படி இவரது பெரும்பாலான ஓவியங்களைத் தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே உருவாக்கியிருக்கிறார் இவர்.

சென்னை கவின்கலைக் கல்லூரியில் படித்த இவர், ஓவியர் ஏ.பி. சந்தானராஜின் ஓவிய பாணியைப் பின்பற்றி தன் படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். கல்லூரி காலத்தில், சந்தானராஜின் ஓவியங்கள் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கமே இதற்குக் காரணம் என்று சொல்கிறார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். சென்னை தக்ஷிண சித்ராவில், இவரது ஓவியக் காட்சி வரும் ஜூலை 28 வரை நடைபெறும்.

ஓவியக் காட்சிப் பற்றிய மேலும் விவரங்களுக்கு: 044 2747 2603

SCROLL FOR NEXT