மக்காவில் வசித்துவந்த பெரியோர்களில் ஒருவரான வாலித் இபின் அல்-முகிராவை, குரைஷ் தலைவர்கள் சந்தித்தனர்.
ஹஜ் யாத்திரைக்கான காலம் வெகு தொலைவில் இல்லை. “ஹஜ் காலம் விரைவில் தொடங்கவிருக்கிறது. பல அரேபியர்கள் ஹஜ் யாத்திரைக்காக மக்காவுக்கு வருவார்கள். அவர்களில் பலர் ஏற்கெனவே இறைத்தூதர் பற்றி கேள்விபட்டிருப்பார்கள். அதனால், நீங்கள் அவரைப் பற்றி உங்களுக்குள் ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியம். ஹஜ் யாத்திரைக்காக வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்களிடம் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளைப் பேசுவது சரியாக இருக்காது” என்று அவர் கூறினார்.
“நீங்களே கருத்துகளை எங்களுக்குத் தெரிவிக்கலாம் இல்லையா? அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,” என்றனர் குரைஷ் தலைவர்கள்.
“இல்லை, நீங்கள் கூறுங்கள். நான் கவனிக்கிறேன்,” என்று சொன்னார் வாலித்.
“நாங்கள் முஹம்மத்தை எதிர்காலத்தைக் கணிப்பவர் என்று சொல்லிவிடுகிறோம்” என்றனர் குரைஷ் தலைவர்கள்.
“இல்லை, நான் இறைவனின் மீது ஆணையாகச் சொல்கிறேன்! நான் குறி சொல்பவர்களைப் பார்த்திருக்கிறேன். முஹம்மது குறி சொல்பவர் இல்லை. அவர் குறி சொல்பவர் போலப் பேசவில்லை” என்று விளக்கினார் வாலித்.
“அப்படியென்றால், அவரைப் பைத்தியம் என்று சொல்லிவிடலாம்” என்றனர் குரைஷ் தலைவர்கள்.
“இல்லை, அவர் பைத்தியம் இல்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். இறைத்தூதர் உறுதியாக அப்படிப்பட்டவர் இல்லை” என்று சொன்னார் வாலித்.
“சரி, நாங்கள் அவரைக் கவிஞர் என்று சொல்லிவிடுகிறோம்” என்றனர் குரைஷ் தலைவர்கள்.
“ஆனால், அவர் கவிஞரும் கிடையாதே!” என்று பதிலளித்தார் வாலித். அவருக்கு பல வகையான கவிதைகளைப் பற்றி தெரிந்திருந்தது. இறைத்தூதரின் உரைகள் கவிதையில்லை என்பதும் அவருக்குப் புரிந்தது.
“நல்லதாகப் போயிற்று, அவரை மந்திரவாதி என்று சொல்லிவிடலாம்” என்றனர் அவர்கள்.
“நான் மந்திரவாதிகளைப் பார்த்திருக்கிறேன். அவர் மந்திரவாதிகள் செய்யும் தந்திரங்களைச் செய்வதில்லை!” என்றார் வாலித்.
குரைஷ் தலைவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
இறுதியாக, அவர்கள், “அப்படியென்றால், அவரை எப்படி அழைக்க வேண்டுமென்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்!” என்றனர். “நான் இறைவனின் மீது ஆணையாகச் சொல்கிறேன். அவர் மிகவும் கனிவுடன் பேசுகிறார். அதிகபட்சமாக, அவரை நீங்கள் மந்திரவாதி என்று சொல்ல முடியும். ஆனால், அவரின் மாயப்பேச்சால் தந்தை - மகன், சகோதரர்கள், கணவன்-மனைவி எனக் குடும்பங்களுக்குள்ளேயே முரண்பாடுகளை உருவாக்கிவிடுகிறார்.”
வாலித்தின் ஆலோசனையை குரைஷ் தலைவர்கள் ஏற்றுகொண்டு, அவர்கள் வீடுகளுக்குச் சென்றனர்.
அரேபியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஹஜ் காலத்தில் மக்காவுக்கு மக்கள் வரத்தொடங்கினர். அவர்களை வரும் வழியிலேயே நிறுத்தி, இறைத்தூதரைப் பற்றிய தவறான கருத்துகளைத் தெரிவித்தனர் குரைஷ் இனத்தவர்.
ஹஜ் பயணத்துக்கு வந்த அனைவரும் இறைத்தூதரைப் பற்றிய செய்தியுடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். இந்த வழியில், அரேபிய மக்கள் அனைவரும் இறைத்தூதரைப் பற்றி தெரிந்துகொண்டனர். இறைத்தூதர் போதித்துவந்த மதத்தைப் பற்றி, அதுவரை மக்காவின் மக்கள் மட்டுமே அறிந்திருந்தனர். ஆனால், தற்போது அரேபியா முழுவதும் அது பற்றித் தெரிந்துவிட்டது.
- பயணம் தொடரும்
தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’ குட்வர்ட்)
ஓவியம்: குர்மீத்