உஷாதேவி
சுயாம்பு மன்னரின் மகன் உத்தானபாதன், இவனுக்கு சுமிதி, சுருசி என்று இரண்டு மனைவிகள் இருந்தனர். மன்னன் உத்தானபாதன் எப்போதும் சுருசியான இளையவளிடம் மட்டுமே அன்பு காட்டுவான். மூத்தவளான சுமிதியைக் கண்டுகொள்வதேயில்லை. சுமிதியின் மகன் துருவன் ஆவான்.
துருவன் ஒருநாள் தன் தந்தையான மன்னனிடம் ஆசையோடு சென்றான். அதனைக் கண்டு சுருசி தடுத்தாள். என் குழந்தைகளுக்கு மட்டுமே மன்னர் சொந்தம். உனக்குத் தந்தை இல்லை என்று சிற்றன்னையின் குணத்தை காண்பித்தாள்.
அழுதுகொண்டே துருவன் தன் தாய் சுமிதியிடம் சென்றான். சுமிதி அவனிடம், “அழாதே மகனே, நம் அனைவருக்கும் தந்தை ஒருவர் உண்டு. அவர் பரம்பொருளான பகவான் தான். தாய், தந்தை, உற்றார், உறவினர், நண்பர் என அனைத்து வித சொந்தங்களாகவும் அவரே விளங்குவார்.” என்று ஆறுதல் கூறினாள்.
மண்ணில் பிறந்த அனைவருக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, சிறப்புர வாழவைப்பவன் இறைவன் ஒருவனே.
“இறைவனால் கொடுக்கப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது, இறைவனால் மறுக்கப்பட்டதை யாராலும் பெற முடியாது. அதனால் நீ கவலைப்பட வேண்டாம். உன் தந்தையை இறைவனிடத்தில் தேடு” என்றாள் சுமிதி. தந்தையைத் தேடி துருவனும், தந்தையைத் தேடி காடு, மலைகளில் திரிந்தான். வழியில் நாரத மகரிஷி வந்தார். “துருவா எங்கே செல்கிறாய். நீ சிறு குழந்தை; இளவரசனான நீ, இப்படிக் காட்டில் தனியாக வந்துள்ளாயே வா திரும்பிப் போகலாம்” என்றார். துருவனோ, தான் வருவதற்கில்லையென்றும் தன் தந்தையைத் தேடிச் செல்வதாகவும் பதிலளித்தான்.
நாரதர், துருவனுக்கு “ஓம் நமோ பகவதே வாசுதேவாயநம” என தியானிப்பதற்குச் சொல்லிக் கொடுத்தார். துருவனும் அம்மந்திரத்தை இடைவிடாது கூறினான். முதலில் ஒரு வேளை உணவு மட்டும் உண்டான்; பிறகு அதையும் நிறுத்தித் தண்ணீர் மட்டும் பருகினான். அடுத்து காற்றை மட்டும் சுவாசித்தான். ஐந்து மாத கால தவம் செய்தான். இருதயத்தில் இறைவனை வைத்து நாமஜெபம் செய்தான். இறைவன் தோன்றி, துருவனை அழைக்க, கண்விழித்த துருவனிடம், “உன் தந்தை உன்னிடம் விருப்பமாக இருப்பார்” என்று வரமளித்தார்.
துருவனும் நாடு திரும்பினான். முப்பத்தி ஆறாயிரம் ஆண்டுகள் பூலோகத்தில் நல்லாட்சி புரிந்து பிறகு அவனுக்கென்று வானில் ஒரு நட்சத்திர மண்டலத்தையும் இறைவன் கொடுத்தார்.
“இக்கலியுகத்தில் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் இடைவிடாத இறைநாமம் சொல்வது மட்டுமே போதும். நம் பாவங்கள் தீர, வாழ்வில் மகிழ்ச்சி பெறுக, அப்படி ஒரு நாமத்தை நான், துருவனைப் போலச் சொல்லவேயில்லை சுவாமி” என்று ராமானுஜரிடம் நம் திருக்கோளுர் பெண் பிள்ளை புலம்பி அரற்றினாள்.
(தொடரும்) கட்டுரையாளர் :
uyirullavaraiusha@gmail.com