படம்: மெட்டா ஏஐ 
ஆனந்த ஜோதி

வீடு வேண்டுமா? வீடுபேறு வேண்டுமா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 34  

நிரஞ்சன் பாரதி

திருவாய்மொழியின் முதற்பத்தில் இடம்பெற்றிருக்கும் முதல் பாசுரத்தில் குணங்களால் திருமால் பெரியவன் என்று நம்மாழ்வார் பாடினார். இறைவன் ஞானானந்த வடிவினன் அதாவது ஆனந்தத்தால் பெரியவன் என்று இரண்டாம் பாசுரத்தில் அழகுறச் சொன்னார். செல்வத்தால் பெரியவன் என்றும் மூன்றாம் பாசுரத்திலும், அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் பெரியவன் என்று நான்காம் பாசுரத்திலும் அருளிச்செய்தார்.

ஐந்தாம் பாசுரத்தில்

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.

என்று நம்மாழ்வார் எழுதுகிறார்.

'உலக மாந்தர்கள் அனைவரும் சத்துவம், ராஜசம், தாமசம் என்னும் முக்குணங்களால் ஆனவர்கள். ஆனால் ஒவ்வொரு மானிடருக்கும் இந்தக் குணங்களின் கலவை விகிதம் மாறுபடும். அதற்கேற்ப அவரவர் வழிபாட்டு முறைகளும் வேறுபடும். மேலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும். எனவே, தங்களின் இயல்புக்கும் தேவைக்கும் ஏற்ற தேவுக்களை இறைவர் எனத் தேர்ந்து அந்தந்த தேவர்களின் பாதங்களைப் பக்தர்கள் பற்றிக்கொள்வார்கள். அந்தத் தேவுக்கள் எந்தக்குறையும் இல்லாதவர்கள். ஏனென்றால் ஆகம விதிமுறைகளின் படி தங்களை வணங்குகின்ற மக்கள் விரும்பும் பலனைப் பெறுவதற்கு ஏதுவாக அவர்களின் உயிருக்குள் உயிராய் நின்று அருள் பாலிப்பவன் அந்தப் பரந்தாமன்' என இந்தப் பாசுரத்துக்கு ஒரு சம்பிரதாயமான பொருள் கூறப்படுவதுண்டு.

ஆனால், இன்னொரு கோணத்திலும் இந்தப் பாசுரத்தை அணுகலாம்.

இறைவன் தூய சத்துவ குணமே வடிவானவன். ஆனால் அவனை வழிபடுகின்ற மனிதர்கள் முக்குணங்களின் வெவ்வேறு விதமான கலவைகளால் ஆனவர்கள். சுருங்கச் சொன்னால் குணபேதமும் ஞானபேதமும் கொண்டவர்கள். இந்த வேறுபாடுகளால் ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கேற்ற வழிபாட்டு முறையைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். அதனால்தான் பற்பல பற்பல வழிபாட்டு முறைகள் உருவாயின. இந்த மனிதர்கள் எக்குணம் கொண்டவர்களாக இருப்பினும் எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றுபவர்களாக இருப்பினும் இறைவன் அவர்களுக்கு அருள்புரிவான்.

அதேபோல என்ன பலன் கிடைக்க வேண்டும் என்று உளமார வேண்டிக்கொண்டு பக்தர்கள் வழிபடுகிறார்களோ அந்தப் பலனை அவர்கள் விரும்பிய வண்ணம் அச்சுதன் அளித்து விடுகிறான். வீடுபேறு வேண்டும் என்று வேண்டுவோர்க்கு அவன் அந்த உயரிய பேற்றினையே அளிக்கிறான். வெறுமனே வீடு வேண்டும் என்று வேண்டுவோர்க்கும் அவன் ஒரு வீட்டைத் தருகிறான்.

மனிதர்களிடத்தில் தான் பேதமுண்டு. இறைவனிடத்தில் பேதங்களில்லை. வகை வகையான பக்தி மார்க்கங்கள் இருந்தாலும் அவற்றைப் புறக்கணிக்காமல் ஒவ்வொன்றுக்கும் சரிநிகர் சமானமான மதிப்பு கொடுக்கும் கனிவார்ந்த கருணை அந்த இறைவனுக்குண்டு.

இந்தப் பாசுரத்தில் இறையவர் என்ற சொல் மூன்று முறை வருகிறது. இறைவன் என்ற சொல்லுக்கு எப்பொருளிலும் இருப்பவன் என்று பொருள். அந்தப் பொருள் எப்போதும் ஒரு சடப்பொருளாகத் தான் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. பக்தர்கள் தன்னை எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்கிறார்களோ அந்தப் பொருளாகவே அவர்களுக்கு இறைவன் நினைவில் நிற்பான்.
அவரவருக்கு உகந்த வழிபாட்டு முறையை மனதார ஏற்றுக்கொண்டு அதைப் 'பொருள்' கொண்ட நெறியாக அங்கீகாரமும் செய்வான்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவரவர் விருப்புணர்வுக்கு ( Will) முன்னுரிமை கொடுத்து அதை ஈடேற்றித் தருவான். அந்த விருப்புணர்வு அழிகின்ற சடப்பொருள் பால் உள்ளதா அல்லது அழியாத விழுப்பொருளின் பால் உள்ளதா என்பது தான் நம் வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிக்கிறது.

முந்தைய அத்தியாயம் > ‘அவரே’ என்னும் சின்னஞ்சிறிய பிரம்மாண்டம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 33

SCROLL FOR NEXT