எல்லாமே பெருமாளின் சொத்து என்று திருவாய்மொழியின் முதற்பத்தின் மூன்றாம் பாசுரத்தில் (1.1.3) கூறிய நம்மாழ்வார், தன் சொத்துகளை எவ்வாறு பெருமாள் பராமரிக்கிறார் என்பதை நான்காம் பாசுரத்தில் கூறுகிறார் (1.1.4)
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கவை
ஆம் அவை ஆயவை ஆய் நின்ற அவரே
தமிழ் இலக்கணத்தில் அண்மைச்சுட்டு, சேய்மைச்சுட்டு என இரு வகை சுட்டுகள் உள்ளன. அண்மை என்றால் அருகில் இருப்பது. சேய்மை என்றால் தொலைவில் இருப்பது. அருகில் இருக்கும் மனிதர்களையோ பொருள்களையோ சுட்டும் எழுத்து அண்மைச் சுட்டெழுத்து. தொலைவில் இருக்கும் மனிதர்களையோ பொருள்களையோ சுட்டும் எழுத்து சேய்மைச் சுட்டெழுத்து.
நம் மொழியில் 'இ' என்பது அண்மைச் சுட்டெழுத்து. 'அ' என்பது சேய்மைச் சுட்டெழுத்து. ஆதலால், இவன், இவள், இவர் ஆகியவை அருகில் உள்ள மனிதர்களையும் இது, இவை ஆகியவை அருகில் உள்ள பொருள்களையும் மனிதர் அல்லாத ஜீவராசிகளையும் குறிக்கும். அதே போல அவன், அவள், அவர் ஆகியவை தொலைவில் உள்ள மனிதர்களையும், அது, அவை ஆகியவை தொலைவில் உள்ள பொருள்களையும் மனிதர் அல்லாது ஜீவராசிகளையும் குறிக்கும்.
அருகிலும் இல்லாமல் தொலைவிலும் இல்லாமல் நடுவில் இருக்கும் மனிதர்களையோ பொருள்களையோ சுட்டப் பயன்படும் எழுத்து 'உ'. இந்த எழுத்தில் தொடங்கும் சுட்டுச்சொற்களான உவன், உவள், உவர், உது, உவை ஆகியவை இன்று வழக்கில் இல்லை.
ஆனால், ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவை பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. அதனால் தான் நம்மாழ்வார் அவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்றை எடுத்துக் கூறி இறைவனின் சிறப்பை எடுத்துக் கூறும் விந்தையை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.
நாமாகவும் நாம் காணக்கூடிய ஆண்மக்களாகவும் பெண்மக்களாகவும் ஏனைய உயிரிகளாகவும் அழிகின்ற சடப்பொருள்களாகவும் அவற்றில் நல்ல பொருள்களாகவும் தீய பொருள்களாகவும் முன்னர் உண்டான பொருள்களாகவும் பின்னர் உண்டாகும் பொருள்களாவும் தற்போது ஆகி நிற்கின்ற எல்லாப்பொருள்களாகவும் இருப்பவர் இறைவராகிய பெரிய பெருமாள்தான் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
இந்தப் பாசுரத்தின் இறுதிச் சொல்லாகிய 'அவரே' என்பது மிகவும் முக்கியமானது. உடல் (பொருள்), அவ்வுடலைப் பற்றி நிற்கும் உயிர், அவ்வுயிருக்கு உயிராய் இருக்கும் இறைவன் ஆகிய மூன்று பொருள்களையும் உள்ளடக்கிய சொல் 'அவரே' என உரையாசிரியர்கள் விளக்கியுள்ளனர். தமிழ் எழுத்துகளில் முதலாவது அகரம். அதுவே முதன்மையானதும் கூட. இந்தப் பாசுரத்தில் இறைவனைச் சுட்டும் சொல்லாகப் பயன்படுத்தப்படுவதால் அகரத்தில் தொடங்கும் 'அவரே' ஒரு சின்னஞ்சிறிய பிரம்மாண்டமாகும்.
பிரபஞ்சத்தையும் அதிலுள்ள கோள்களையும் அதிலிருக்கும் உயிர்ப்பொருள்களையும் உயிரல் பொருள்களையும் படைத்து காத்து ஒடுக்கிப் பின்னர் தான் மட்டும் தனி நிற்பவன் அந்தப் பரந்தாமன். ஆதலின், இந்த உலகில் காணப்படும் பொருள்கள் அனைத்தையும் தனக்கே உரித்தாகக் கொண்டவன் அவன் ஒருவனே. அதைத் தான் நம்மாழ்வார் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என எல்லாமுமாகவும் இருந்து அதற்கு அப்பாலும் இருப்பவன் எம்பிரான் ஸ்ரீ மந் நாராயணன் என்று மிக அழகாகப் பாடுகிறார்.
சொத்துகளுக்கு அடிமையாயிராமல் அந்தச் சொத்துகளாய் தானே மாறிவிடுவது தானே அவற்றைப் பேணிக் காக்கும் சிறந்த வழி? !
> முந்தைய அத்தியாயம்: பெருமாளே அபகரிக்க விரும்பும் சொத்து | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 32