ஆனந்த ஜோதி

களர்நிலத்தை விளைநிலமாக்கும் காருண்யன் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 29 

நிரஞ்சன் பாரதி

என்ன தான் அன்பு கொண்டவராக இருந்தாலும் எதையும் எதிர்பார்க்காத மனிதர் என இந்த உலகத்தில் யாருமில்லை. செய்த உதவிக்கு 'நன்றி' என்ற சொல்லையாவது மனதாரச் சொல்ல வேண்டும் என்று தான் ஒரு மனித மனம் எதிர்பார்க்கும். ஆனால், அது ஒரு பொய் என்று மதுரகவியாழ்வார் சாதிக்கிறார்.

பயனன்றாகிலும் பாங்கலர் ஆகிலும்

செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்

குயில் நின்றார்ப் பொழில் சூழ் குருகூர் நம்பி

முயல்கின்றேன் உன்றன் மொய்கழற்கு அன்பையே

மதிப்புக்குரிய ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுமைக்கும் உரையெழுதியிருக்கிறார். இந்தப் பாசுரத்துக்கு அவர் எழுதிய உரையில் 'அனுவ்ருத்தி பிரசன்ன ஆசாரியர், க்ருபாமாத்ர பிரசன்ன ஆசாரியர்' என குருநாதர்கள் இரண்டு வகை என்கிறார்.

கடைப்பிடிக்க வேண்டிய முறைமைகளைத் தவறாமல் பின்பற்றினாலும் சீடர்களைக் கடுமையாகச் சோதித்து பின்னர் அருள் பாலிக்கும் குருநாதர்கள் அனுவ்ருத்தி பிரசன்ன ஆசாரியர்கள். இராமனுஜரைப் பதினெட்டு முறை திருக்கோட்டியூருக்கு வரவழைத்து பின்னர் அவரைச் சீடராக ஏற்றுக்கொண்ட திருக்கோட்டியூர் நம்பி இதற்கொரு சிறந்த உதாரணம்.

முறைமைகளைச் சரிவரப் பின்பற்றாமல் தறிகெட்டுத் திரியும் ஒழுங்கற்ற சீடர்களைக் கூட தாமே வலியச் சென்று திருத்தி நல்வழிப்படுத்தும் குருநாதர்கள் க்ருபாமாத்ர பிரசன்ன ஆசாரியர்கள். எம்பெருமானார், நம்பிள்ளை போன்றோர் இதற்குச் சிறந்த உதாரணங்கள். இந்த வரிசையில் நம்மாழ்வாரையும் சேர்க்க வேண்டும் என்பதுதான் மதுரகவியாழ்வாரின் கட்சி.

'களர்நிலம் போன்ற என்னை விளைநிலம் ஆக்கினார் என் ஆசான் நம்மாழ்வார்' என்னும் பூரிப்பின் வெளிப்பாடே

பயனன்றாகிலும் பாங்கலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்

என்னும் இரண்டு வரிகள்.

பணிகொள்ளுதல் என்பதற்கு ஒருவரைத் திருத்தி தொண்டராக ஏற்றுக்கொள்ளுதல் எனப் பொருள். ஆனால், இந்தச் சொல்லில் ஒரு நுட்பம் உண்டு. பணிகொள்வான் என்பது எதிர்காலம். எனில், மதுரகவியாழ்வாரை இனிமேல் தான் திருத்தி நம்மாழ்வார் ஆட்கொள்ளப்போகிறாரா என்ற ஐயம் எழும்.

எங்கோ வடதேசத்தில் இருந்த மதுரகவிகளைத் திருக்குருகூருக்கு ஆற்றுப்படுத்தி ஆட்கொண்ட மகான் நம்மாழ்வார். ஆனால், ஒருவேளை மதுரகவியாழ்வார் வழி தவறி மீண்டும் பழைய நிலைக்குப் போனாலும் கூட நம்மாழ்வார் சிறிதும் சலிப்புறாமல் அவரை மீண்டும் ஒழுங்கு செய்து நல்வழிப்படுத்துவார். இதைக் கருத்தில் கொண்டு தான் 'பணிகொள்வான்' என்ற சொல்லை மதுரகவிகள் தேர்வு செய்கிறார். தன் குருவுக்குத் தான் ஒருபோதும் நிகராக முடியாது என்பதை 'முயல்கின்றேன்' என்ற ஒற்றைச் சொல்லால் தெரிவித்தும் விடுகிறார்.

முந்தைய அத்தியாயம்: கல்லைப் பொன்னாக்கும் கனிந்த திருவுளம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 28

SCROLL FOR NEXT