ஆனந்த ஜோதி

முருகப்பெருமானுக்கு மட்டும் ஏன் படை வீடு?

செய்திப்பிரிவு

முருகப்பெருமானுக்கு மட்டும் ஏன் ஆறுபடை வீடுகள். இது ஆறுபடை வீடா, ஆற்றுப்படை வீடா? ஆற்றுப்படை வீடுதான் ஆறுபடை வீடானது என்பதை அறிய முடிகிறது.

முருகப்பெருமானுக்கு படை வீடுகள் ஆறு. படைவீடு என்பது பகைவரோடு போர் புரியும் வகையில், ஒருவன் தன் படைகளுடன் தங்கியிருக்கும் இடத்துக்கு படை வீடு என்பது பெயர். முருகப்பெருமான் சூரபத்மனோடு போர் புரியச் செல்லும்முன் தங்கியிருந்த படைவீடுகள் பல உள்ளன.

பொருள் பெற்ற ஒருவன், பொருளின்றி தவிக்கும் வறியவன் ஒருவனிடம், பொருளுடைய இன்னாரிடத்திலே சென்றால் பொருள் பெறலாம் என்று ஆற்றுப்படுத்துவதை (வழிப்படுத்துவதை) ஆற்றுப்படை என்பர். அதன்படி, பொருளைப் பெறுவதுபோல், அருளைப் பெறவும் நம் முன்னோர் ஆற்றுப்படுத்தினர். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை இதற்கு சான்றாகும்.

சில தலங்களை குறிப்பிட்டு, அங்கெல்லாம் எழுந்தருளியுள்ள முருகனிடம் ஆற்றுப்படுத்துவதாகத் திருமுருகாற்று ப்படை அமைந்துள்ளது. ஆற்றுப்படை வீடுகள் என்பதுதான் பின்னாளில் ஆறுபடை வீடுகள் என்றானது எனலாம். அவற்றுள் ஆறுதல்கள் சிறந்தன என்று முன்னோர் கூறினர்.

அத்தகு ஆறுபடை வீடுகள் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச் செந்தூர்), திருவாவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமி மலை), குன்று தோறாடல் (திருத்தணிகை) மற் றும் பழமுதிர்சோலை ஆகும். ஆறு முகங்களைக் கொண்ட முருகன் தொடர்புடைய பொருள்கள் பலவற்றை ஆறு என்று முடியும் எண்ணில் இருப்பதையே விரும்பினர். நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்படையில் முருகன் உறையும் இடங்களாக ஆறு இடங்களை குறிப்பிடுகிறார். அவர் கூறியதிலிருந்து ஆறுபடை வீடுகள் என்பது வழக்கில் வந்தது.

‘ஆறுதிருப் பதியில் வளர் பெருமானே
சகலமும் முதலாகிய அறுபதி நிலைமேவிய
தடமயில் தனிலேறிய பெருமானே’

என்று திருப்புகழில் அருணகிரிநாதரும், ஆறு திருப்பதி கண்டு ஆறெழுத்தும் அன்பினுடன் கூறுபவர் சிந்தை குடி கொண்டேனே என்று கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபரரும், ஆறுபடை வீடுகளை ஆறு திருப்பதி என்றே கூறியுள்ளனர். இத்தகைய காரணங்களால் ஆற்றுப்படை வீடுகள், ஆறுபடை வீடுகளானது.

இதில் முதல்படை வீடான திருப்பரங்குன்றமும், கடைசி படை வீடான பழமுதிர்சோலையும் மதுரையிலேயே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சிவன் நடனம் புரிந்த 5 அம்பலங்கள்: சிவன் நடனமாடிய சபைகளையே அம்பலங்கள் என்று கூறுகிறோம். அவை - திருவாலங்காடு - ரத்தினசபை, சிதம்பரம் - கனகசபை அல்லது பொன்னம்பலம், மதுரை - வெள்ளி சபை அல்லது வெள்ளியம்பலம், திருநெல்வேலி - தாமிரசபை, திருக்குற்றாலம் - சித்திரசபை. இவை பஞ்ச சபைகள் அல்லது ஐம்பெரும் சபைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

மற்ற நான்கு சபைகளில் வலதுகாலை ஊன்றி இடதுகாலை தூக்கி ஆடும் சிவபெருமான், மதுரையில் மட்டும் இடதுகாலை ஊன்றி வலதுகாலை தூக்கி ஆடுகிறார். ஒரே காலை ஊன்றி ஆடினால் பெருமானுக்கு வலிக்குமே என்று கருதிய பாண்டிய மன்னன், சிவனை கால் மாறி ஆட பணிக்கிறார்.

SCROLL FOR NEXT