தவயோக ஆற்றலால் அணிமா, மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசுத்தவம், பிரகாமியம், ஈசத்துவம் எனப்படும் அட்டமா சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள். மருத்துவம், மந்திரம், ஜோதிடம், மெய்யுணர்வு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினர். நவநாத சித்தர்கள், பதினெண் சித்தர்கள் எனப் பெறும் இவர்கள், தமிழ்நாட்டில் வாழ்ந்தனர்.
திருநந்தி தேவரே பல்வகைப் பிறப்புற்று, பின்பு போகராக பூமியில் தோன்றினார் என்பர். இவரது காலம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கூறப்படுகிறது. போகர் ஏழாயிரம், போகர் எழுநூறு எனப்பெறும் மருத்துவ, ஜால நூல்கள் போகரால் எழுதப்பட்டவை.
வான்வழியில் சீனா, உரோமாபுரி, மக்கா, மதீனா ஆகிய இடங்களுக்குச் சென்று, தன் சீடர் புலிப்பாணியுடன் தாயகம் திரும்பினார். போகர் சித்தர் யோகம், மருத்துவம், ரசவாதம், காயகற்பம், கணிதம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார். தன் சீடருன் இறுதிக் காலத்தில் பழநி மலையில் தங்கினார்.
பழநி மலைக் கோயிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது. போகர் சித்தர் இந்த மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். பழனியாண்டவர் என்று அழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமியின் திருமேனியில் பட்டு வரும் விபூதி, பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் முதலிய பொருட்கள் அனைத்தும் மக்களின் உடற்பிணி, உளப்பிணி, பிறவிப்பிணி தீர்க்கும் அருமருந்தாய் விளங்குகின்றன.
பழநி தண்டாயு தபாணி சுவாமி மலைக்கோயில் உட்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் போகர் சித்தர் சந்நிதி உள்ளது. இதுவே போகர் ஜீவசமாதி அடைந்த இடம். போகர் வழிபட்ட புவனேஸ்வரி அம்மன், மரகதலிங்கம் இன்றும் பூஜையில் உள்ளன. மலைக்கோயில் வரும் பக்தர்கள் தரிசனம் செய்து பலனை பெறுகின்றனர். போகர் சந்நிதி அருகே அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்தால், எதிர்மறை எண்ணங்கள் விலகி புதுநம்பிக்கை கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
போகர் சந்நி தியில் இருந்து தண்டாயுதபாணி சுவாமி திருவடி நிலைக்கு ஒரு சுரங்க வழி உள்ளது. கடைசியாக இதனுள் சென்ற போகர் திரும்பாமல் அதனுள் அமர்ந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. போகர் சித்தர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார்.
ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி விழாவையொட்டி, மலைக்கோயிலில் உள்ள போகர் சந்நிதியில் உச்சிக்கால பூஜையின்போது, போகர் வணங்கிய புவனேஸ்வரி அம்மன், மரகத லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.
போகர் சித்தரின் சீடரான புலிப்பாணி சித்தரின் ஜீவசமாதி மற்றும் ஆசிரமம், பழநி மலைக்கோயில் அடிவாரத்தில் பாத விநாயகர் கோயில் அருகே உள்ளது. இந்த ஆசிரமத்தில் பல ஆண்டுகளாக பாதுகாத்து வழிபட்டு வரக்கூடிய போகர், புலிப்பாணி சித்தர்கள் எழுதிய ஓலைச்சுவடிகள், நவபாஷாணத்துக்கு ஆடிப்பெருக்கில் மலர் வழிபாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.