சவுந்திரராஜப்பெருமாள் கோயில் வளாகம். படங்கள்: நா.தங்கரத்தினம் 
ஆனந்த ஜோதி

16-ம் நூற்றாண்டை சேர்ந்த தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் உள்ள சிற்பங்கள் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாண்டிய, நாயக்கர் மன்னர்களால் இந்த கோயில் திருப்பணி செய்யப்பட்டது.

முதன்முதலாக பாண்டிய மன்னர் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டு திருப்பணி நடந்துள்ளது. தொடர்ந்து வந்த நாயக்க மன்னர்களும் கோயிலை மேலும் சீரமைத்து திருப் பணிகளை செய்துள்ளனர். தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயில் குடகனாறு அருகே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கோயிலில் கலைநயமிக்க சிற்பங்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை 16 -ம் நூற்றாண்டு கோயில் என்பதற்கு ஆதாரமாக உள்ளன.

கோயில் முன்பு கொடிமரத்தை தொடர்ந்து ராஜ கோபுரம் உள்ளது. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் எட்டு கால் மண்டபம், நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளன. விஸ்வக்சேனர், தும்பிக் கையாழ்வார், ஹயக்கிரீவர், தன்வந்திரி, லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், ருக்மணி. சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி, ஆஞ்சநேயர், சொர்ண ஆகர்ஷண பைரவர், கருடாழ்வார் சந்நிதிகள் அடுத்தடுத்து கோயிலின் உள்ளே அமைந்துள்ளன. கோயில் உள்பிரகாரத்தில் நான்கு மூலைகளிலும் மகாவிஷ்ணு, யோகநரசிம்மர், மண வாள மாமுனிவர், ராமானுஜர் சந்நிதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் விநாயகர், விஷ்ணு துர்க்கை நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.

கோயில் கருவறை முன் ஜெய, விஜய துவாரபாலகர்கள் காவல் காக்க உள்ளே சவுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சங்கநிதி, பத்மநிதியுடன், கருவறைக்குள் இறைவி கல்யாண சவுந்தரவல்லி தாயார் காட்சி அளிக்கிறார். கோயிலில் உள்ள ஏழு தூண்கள் ஒவ்வொன்றிலும் அகோர வீரபத்திரர், உலகளந்த பெருமாள், தில்லைக் காளி, மகாவிஷ்ணு என சிலைகள் கலை நயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. இவை அப்போதைய சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபங்களுக்கு இடையே இரண்டு இசைத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவையும் 16-ம் நூற்றாண்டு பழமையை உணர்த்துகின்றன.

மன்மதன் ரதி பூஜை: திருமணம் தடைபடுபவர்கள், கோயிலில் உள்ள மன்மதன், ரதி சிலைகளுக்கு வியாழக்கிழமைகளில் வந்து பிரார்த்தனை செய்தால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேய்பிறைஅஷ்டமி அன்று ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட மக்கள் திரண்டு வருகின்றனர். கோயிலில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சந்நிதி திறந்திருக்கும்.

SCROLL FOR NEXT