மதுரை எல்லீஸ் நகரிலுள்ள ஆனந்தேஸ்வர விநாயகர் பக்தர்கள் வேண்டும் வரங்களை அருள்பாலித்து வருகிறார். எல்லீஸ் நகர் யமுனா வீதியில் ஆனந்தேஸ்வர விநாயகர் கோயில் 1988-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி ஸ்தாபிக்கப்பட்டது. முதலில் விநாயகருடன் மட்டும் ஸ்தாபிக்கப்பட்ட இக்கோயில், பின்னர் முருகப்பெருமான், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியோருக்கு தனி சன்னதியுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு விநாயகரின் உருவம் சற்று சுதை சிற்பம் போன்று சுயம்புவாக தோன்றிய தோற்றத்தில் அமைந்துள்ளது.
விநாயகரின் உருவம் அவ்வளவாக தீக்ஷண்யமாக இல்லாமல் அமைந்துள்ளது. இது ‘உருவமற்ற ஒரு பொருள் உருவத்தை அடைகிறது; அதே பொருள் அருவமாகவும் திகழ்கிறது’ என்ற விநாயகரின் அடிப்படைத் தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. ஆலயத்தில் பிரதான முர்த்திகளாக ஆனந்தேஸ்வர விநாயகர், மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் உள்ளனர்.
பொதுவாக ஆலயங்களில் பிரதான மூர்த்திகள் கிழக்கு முகமாக இருப்பார்கள், ஆனால், இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பாகும். தல விருட்சம் அரசமரம், அதற்கு நடுவில் வேம்பு மரமும் ஒன்றாக இணைந்துள்ளது. மேலும் மரத்தடியில் சர்ப்ப கிரகங்கள் உள்ளன.
மேலும், ஆஞ்சநேயர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றார். இவரை வழிபடுவதால் சனீஸ்வர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். வியாழன், சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபடலாம். இங்குள்ள மஹாலெட்சுமியை வழிபடுவதால் நீங்காத செல்வம் கிடைக்கப் பெறலாம்.
இங்கு துர்க்கை அம்மன் வடகிழக்கு திசையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். லிங்கோத்பவர் கிழக்கு முகமாக இருக்கும். தட்க்ஷிணாமுர்த்தி, ஐயப்பன், சரஸ்வதி, பைரவர், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. ஆனேந் தேஸ்வர விநாயகர் ஆஸ்தீக சபாவினரால் நடத்தப்படுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, கார்த்திகை திருவிழா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கார்த்திகை சோமவாரம் சங்காபிஷேகம், வைகாசி விசாகம், ஆடிப்பூர விழா, அன்ன அபிஷேகம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி உற்சவம், கந்த சஷ்டி, அனுமன் ஜெயந்தி, முருகன் திருக்கல்யாணம், ஐயப்பன் மண்டல பூஜை உள்பட மாதந்தோறும் விழாக்கள் நடைபெறுகிறது.