கோயிலின் முகப்புத் தோற்றம் 
ஆனந்த ஜோதி

முனை மழுங்கிய வேலாக வந்து உருப்பெற்ற முருகன் திருத்தலம்

செய்திப்பிரிவு

தேனி - போடி சாலையில் 7 கி.மீ. தொலைவில் தீர்த்தத் தொட்டி எனும் இடத்தில் விருப்பாட்சி ஆறுமுகநாயனார் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முக்கிய அம்சமாக விளங்குவது முன்பகுதியில் உள்ள தீர்த்தத் தொட்டிதான். இப்பகுதியில் எவ்வளவு வறட்சி நிலவினாலும், இந்த சுனையில் மட்டும் நீர் வற்றாமல் வந்துகொண்டே இருக்கும். இது முருக தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.

இதில் நீராடி முருகனிடம் வேண்டினால், நாகதோஷம், செவ்வாய் தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங் கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால், இதன் சிறப்பை உணர்ந்த மக்கள் ‘தீர்த்தத் தொட்டி முருகன் கோயில்’ என்றே அழைக்கின்றனர்.

சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி, தைப்பூசம், உத்திரம் உள்ளிட்ட நாட்களில் உற்சவருக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரையும், பின்னர் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

தல வரலாறு: அசுரன் ஒருவனை அழிக்கச் சென்ற சப்தகன்னியர் தவறுதலாக ஒரு மகரிஷியை அழித்துவிட்டனர். இத்தோஷம் நீங்க இங்கு தீர்த்தம் உருவாக்கி முருகனை வழிபட்டனர். தவறை உணர்ந்து பிராயச்சித்தம் தேடியதால், முருகன் அவர்களின் தோஷத்தைப் போக்கினார். அன்றைய காலக்கட்டத்தில் இந்த தீர்த்தம் மட்டுமே இருந்தது.

இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பழநி அருகே விருப்பாட்சி எனும் இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, தொடர்ந்து வரமுடியாமல் பரிதவித்தார். அப் போது, ஒரு சிறுவன் முனை மழுங்கிய வேலைக் கொடுத்து தைரியமாகச் செல்லுங்கள் என்றான். முருகனும் அந்த வேல் ரூபத்திலேயே அவருடன் பயணித்தார். வழியில் இங்கிருந்த தீர்த்தத் தொட்டியில் நீராட வேலை ஊன்றி வைத்துவிட்டுச் சென்றார். நீராடி வந்ததும் வேலை எடுக்க முயன்றார். எவ்வளவு முயன்றும் முடியவில்லை. தகவல் அப்பகுதியில் பரவியது. உடனே, முருகனுக்கு அதே இடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

வேலுடன் வந்து இங்கு உருப்பெற்றதால், வள்ளி -தெய்வானை இன்றி முருகன் தனித்தே அருள் பாலித்து வருகிறார். இதனால், இக்கோயிலில் சூரசம்ஹாரம், திருக் கல்யாணம் போன்ற வைபவங்கள் நடைபெறுவது இல்லை. திருமணம், குழந்தைப்பேறு, ஐஸ்வர்யம், ஆரோக்கியம் என்று பல வேண்டுதல்களையும் நிறைவேற்றும் ஸ்தலமாக இருந்து வருகிறது

SCROLL FOR NEXT