ஆனந்த ஜோதி

காசிக்கு செல்ல முடியாதவர்கள் விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் வழிபடலாம்!

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை அருகே உள்ள விளாச்சேரியில், சுமார் 600 ஆண்டுகள் பழமையான காசிவிஸ்வநாதர்- காசி விசாலாட்சி கோயில் அமைந்துள்ளது. புண்ணியம் தேடி காசிக்குச் செல்ல முடியாதவர்கள், இங்கு வந்து வழிபட்டால் புண்ணியமும், முக்தியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் விளா பூஜைக்கு விளாமரங்கள் நிறைந்த இந்த ஊரில் இருந்துதான் நெல் கொண்டு சென்றதால், விளாச்சேரி என்ற பெயர் பெற்றது. இந்த ஊரில்தான் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்தார். தமிழக அரசு சார்பில் அவருக்கு நினைவு இல்லமும் அமைக்கப்பட்டுள்ளது.

விளாச்சேரி மக்களால் ஈஸ்வரன் கோயில் என அழைக்கப்படும் காசி விஸ்வநாதர்-காசி விசாலாட்சி கோயில், சுமார் 600 ஆண்டுகள் பழமையானது என இக்கோயில் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. கோயிலில் உள்ள நான்கு தூண்கள் நான்கு வேதத்தை குறிப்பதாக உள்ளது. தல விருட்சமாக வில்வமரம் திகழ்கிறது.

மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கும் முகூர்த்த நாளன்று இங்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். கார்த்திகை மாத சோமவாரங்களில் சங்காபிஷேகம், மாதந்தோறும் பிரதோஷ வழிபாடுகள் என சிறப்புற அனைத்து வைபவங்களும் நடைபெறுகின்றன. இக்கோயிலில் இரட்டை விநாயகர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்கை, சண்டீகேசுவரர் சந்நிதி, வேலோடு கூடிய முருகன் சந்நிதி ஆகியன தனித்தனியே அமைந்துள்ளன.

குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறாதவர்கள் வேண்டினால், குழந்தை பாக்கியம் கிட்டும். சுவாமிக்கு பூஜிக்கப்பட்ட வில்வ இலைகளை தொடர்ந்து 5 வாரம் சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் பசுஞ்சாணத்தில் தயாரான சுத்தமான விபூதி அபிஷேகம் செய்ததை பயன்படுத்தினால், தோல் நோய்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை. காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் புண்ணியமும், முக்தியும் கிடைக்கும்.

அதே ஆடி மாதம் 7-ம் தேதியிலிருந்து 5 நாட்களுக்கு சூரியனே வந்து சிவனை பூஜிக்கிறார். (சூரிய ஒளி சிவலிங்கம் மீது படர்கிறது). இக்கோயிலுக்கு சிருங்கேரி சுவாமிகள் வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திருப்பணிக்குழு செயலாளர் கண்ணன் கூறுகையில், ‘சுமார் 600 ஆண்டுகள் பழமையான கோயில் என கல்வெட்டுகளில் தகவல் உள்ளது. காசியைப்போல் மூலவர் சந்நிதி அமைந்துள்ளது. சிதிலமடைந்த கோயிலை புனரமைத்து மூலவருக்கும், காசி விசாலாட்சிக்கும் சந்நிதி, எழுப்பி, தனித்தனி கோபுரம் அமைக்கப்பட்டது. இதற்கான திருப்பணிகளை கருமுத்து கண்ணன் செய்து தந்தார். அதனையொட்டி, கடந்த 2016-ல் கும்பாபிஷேகம் நடந்தது. கால பைரவர், நவக்கிரக சந்நிதி அமைக்க முயற்சி எடுத்து வருகிறோம்’ என்றார்.

SCROLL FOR NEXT