கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மாம்பழத்துறையில் இருந்து மணமகள் அழைப்பு ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. இது அம்மனை ஜோதி ரூபமாக ஆரியங்காவுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியாகும்.
ஆரியங்காவில் பாரம்பரிய முறைப்படி ஜோதி ரூப தரிசனம், `பாண்டியன் முடிப்பு' எனும் நிச்சயதார்த்த விழா, ஊஞ்சல் உற்சவம், திருக்கல்யாணம், மண்டலாபிஷேகம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த புஷ்கலாதேவியின் ஆத்ம பக்தியை மெச்சி, அவரை ஐயப்பன் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டதாக ஐதீகம்.
ஆரியங்காவில் அன்னதானப் பிரபுவாக தர்மசாஸ்தா வீற்றிருக்கிறார். ஸ்ரீபுஷ்கலாதேவி சௌராஷ்டிர சமூக குல தேவி என்பதால், சௌராஷ்டிரா சமூகத்தினரை சம்பந்தி முறையாக திருவாங்கூர் மன்னர் வம்சத்தினர் மற்றும் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகள் கருதுகின்றனர். மதுரையில் செயல்படும் ஆரியங்காவு தேவஸ்தான சௌராஷ்டிரா மகாஜன சங்கம், கேரள தேவசம் போர்டு கோயில் அதிகாரிகள் மற்றும் ஊர்மக்கள் இணைந்து இந்த விழாக்களை நடத்துகின்றனர்.
ஜோதி ரூப ஐக்கியம்: மாம்பழத்துறையில் பகவதி அம்மன் எனும் நாமத்தில் வீற்றிருக்கும் புஷ்கலாதேவி சமீபத்தில் மணமகள் அலங்காரத்தில் எழுந்தருளினார். மாம்பழத்துறை ஊர் மக்கள் சார்பில், சவுராஷ்டிரா சமூகத்தினருக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. சந்நிதியில் திருமேனி எனப்படும் தலைமை பூஜாரி, அம்மனின் சான்னித்தியத்தை திருவிளக்கில் ஆவாஹனம் செய்தார்.
அந்த தீபத்தை அனைவரது சரண கோஷத்துக்கு நடுவில் ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிர மஹாஜன சங்க நிர்வாகஸ்தர்களிடம் வழங்கினார். சங்க தலைவர் டி.கே.சுப்பிரமணியன் ஜோதி ரூபத்தை ஏந்திச் சென்றார். ஜோதியை ஊர்வலமாக அலங்கார வாகனத்தில் வைத்து ஆரியங்காவுக்கு புறப்பட்டார்.
சாஸ்தாவுடன் ஐக்கியம்: ஆரியங்காவு ஊர் எல்லையில் அம்மனின் ஜோதியை கோயில் தந்திரி, அதிகாரிகள், அட்வைசரி கமிட்டி நிர்வாகஸ்தர்கள் மற்றும் ஊர்மக்கள் வரவேற்றனர். மாலை 6.45 மணியளவில் மங்கள குலவை முழங்க, சரண கோஷம் பக்தர்கள் எழுப்ப, கருவறையில் ஐயனின் ஜோதியுடன் அம்பாளின் ஜோதி ரூபம் ஐக்கியமாக்கும் நிகழ்ச்சியை தந்திரி நடத்தினார். இந்நிகழ்ச்சிக்கு வந்த பக்தர்களுக்கு மாம்பழத்துறை புஷ்கலாதேவி சவுராஷ்ட்ரா சபையின் தலைவர் ஜே.ஜே.மோகன் , சபையின் நிர்வாகஸ்தர்கள் அன்னதானம் வழங்கினர்.
பாண்டியன் முடிப்பு: டிசம்பர் 24 பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடந்தது. திருவாங்கூர் தேவசம் போர்டு கோயில் நிர்வாக அதிகாரி எ.விஜேஷ் பகவான் பிரதிநிதியாகவும், ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்க தலைவர் டி.கே.சுப்பிரமணியன் அம்பாள் பிரதிநிதியாகவும் இருந்து பரஸ்பரம் வெற்றிலை - பாக்கு, சொர்ண புஷ்பம் மாற்றிக் கொள்ளும் நிச்சயதார்த்த வைபவம் நடந்தது. சங்கத்தின் பொதுக் காரியதரிசி எஸ்.ஜெ.ராஜன் நிச்சயதார்த்த உரையாற்றி சடங்குகளை நடத்தி வைத்தார்.