ஆனந்த ஜோதி

1008 லிங்கங்களுடன் ராஜராஜ லிங்கேஸ்வரர் ஆலயம்

இ.மணிகண்டன்

விருதுநகர் அருகே 1008 லிங்கங்களுடன் அமைக்கப் பட்டுள்ளது ராஜராஜ லிங்கேஸ்வரர் ஆலயம். விருதுநகர் அருகே மல்லாங்கிணறு சாலையில் உள்ளது சித்தல்குடில். இதோடு இணைந்த கோயிலாக கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயில் 6 சக்கரங்களுடன் கூடிய ரதம் போன்ற அமைப்பில், தாமரை நடுவே 36 அடி உயரத்துக்கு 38 டன் எடையுள்ள கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. லிங்கத்தின் வெளிப்பகுதியில் 1008 லிங்கம், 108 நந்தி, 63 நாயன்மார்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 நவக்கிரகங்கள், 10 தசாவதாரங்கள், 8 அஷ்ட லட்சுமிகள், 5 பஞ்ச பூதங்கள், சூரிய பகவான், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, கன்னி விநாயகரும், லிங்கத்தின் மேல் பகுதியில் 8 திசைகளை நோக்கி 8 அஷ்ட நந்திகளும் அமைக்கப்பட்டுள்ளன.

லிங்கத்தின் உள்பகுதியில் 18 சித்தர்களும், சித்தர்களின் அன்னையாகிய ஸ்ரீ வாலைகுமாரி அம்மன் மூலவராகவும் இங்கு காட்சியளிக்கின்றனர். மேல் பகுதியில் உள்ள லிங்கத்தின் நடுவில் 9 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட கும்பம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கும்பத்தின் உள்ளே 500 கிலோ வரகு, கருங்காலி மற்றும் நாயணமும் வைக்கப்பட்டுள்ளன. லிங்கத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள ஐந்து தலை நாகம் 5 டன் எடை உள்ள ஒரே கல்லாலானது. லிங்கத்தின் முன்வாசலில் ராஜராஜ அம்மன் ராஜநிலையில் மேல் அமர்ந்து, அதன் கீழ் இருபுறமும் இரு யானைகளின் மேல் 33 தேவர்களும் அமர்ந்து காட்சியளிக்கின்றனர்.

ஆலய வாசலில் எமதர்மர், சித்திர குப்தர், ஸ்ரீ பிரம்மன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ முருகன், ராகு, கேதுவும், ஆலயத்தின் கோட்டைச் சுவர் மத்தியில் சப்த சக்கரங்களைக் கொண்ட பராமி, சப்த வண்ணங்களைக் கொண்ட ஸ்ரீ இந்திராணி, சப்த ஸ்வரங்களைக் கொண்ட ஸ்ரீ கவுமாரி, சப்த கிழமைகள் கொண்ட ஸ்ரீ மகேஸ்வரி, சப்த மலைகளைக் கொண்ட ஸ்ரீ வைஷ்ணவி, சப்த ஜென்மங்களைக் கொண்ட ஸ்ரீ சாமுண்டீஸ்வரி, சப்த ரிஷிகளுடன் ஸ்ரீ வராகி ஆகிய 7 சப்த கன்னி சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கோயில் படிக்கட்டுகளில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள 8 அஷ்ட நந்தி சிலைகளும் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அனைத்து தெய்வங்களுக்கும் காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட 5 ஆயிரம் லிட்டர் காசி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதை ஒட்டி அமைந்துள்ள சித்தர்கள் குடில் 2013-ல் கட்டப்பட்டது. 52 சித்தர்களின் ஜீவ சமாதியிலிருந்து பிடிமண் எடுத்து வந்து இந்த ஆலயம் அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT