தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மாவட்ட எல்லையான கணவாய் பகுதியில் தர்மசாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. ஊர்க்காவல் தெய்வமாக போற்றப்படும் இந்த அய்யனார் கோயில் வழிபாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
ஆரம்பத்தில் ஒத்தையடிப் பாதையாகவும், ஒருவழிப் பாதையாகவும் இச்சாலை இருந்தது. பளு ஏற்றிய வண்டிகளை இழுப்பதில் மாடுகளுக்கு பெரும் சிரமம் இருந்தது. எனவே, இக்கோயில் பகுதிக்கு வந்ததும் மாடுகளுக்கு ஓய்வு அளிப்பர். தாங்களும் களைப்பாறிய பிறகே மீண்டும் பயணத்தைத் தொடர்வர். இதனால், இக்கோயில் ஆரம்பத்தில் வண்டி சாஸ்தா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்க பலரும் நாணயங்களை காணிக்கையாக வழங்கி விட்டுச் சென்றனர்.
காலப்போக்கில் வண்டிசாஸ்தா என்ற பெயர் தர்மசாஸ்தா என்ற பெயராக மாற்றம் கண்டது. 1957-ல் சிறிய கோயிலாக இருந்த நிலையில், 1978-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இப்பகுதியைக் கடந்து செல்லும் வாகனங்களின் ‘காப்பானாக’ சாஸ்தா விளங்குகிறார் என்பது பலரது நம்பிக்கை. பேருந்துகளில் செல்பவர்கள் பலரும் காசுகளை காணிக்கையாக வீசிவிட்டுச் செல்கின்றனர். தெரிந்தவர்கள் யாராவது இக்கோயிலை கடந்து செல்கிறார்கள் என்று கேள்விப்பட்டால், எறிகாசுகளை அவர்களிடம் கொடுக்கும் பழக்கம் இன்றும் உண்டு.
இந்த நாணயங்கள் இரண்டு ஊழியர்கள் காந்த குச்சிகள் மூலம் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர். இக்கோயில் திருவிழா ஆடி 18 அன்று விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்நாளில் கிடா,சேவல் பலியிடப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். பலரும் முடிக்காணிக்கை, காது குத்துதல் உள்ளிட்ட தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளையும் இத்தலத்திலேயே மேற்கொண்டு வருகின்றனர். தேனிக்கு வரும் அரசியல்வாதிகள் இந்த தர்மசாஸ்தாவை வணங்கி விட்டே மாவட்டத்துக்குள் சென்று தங்கள் பணியை தொடங்குகின்றனர்.