தமிழ்நாட்டிலேயே மும்மூர்த்திகளைக் கொண்ட ஒரே ஸ்தலம் என்ற பெருமையை கொண்டது ஈரோடு மாவட்டத்திலுள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயில். இக்கோயிலில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோர் ஒரே பகுதியில் வீற்றிருக்கின்றனர்.
திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருக்கிறார் என்று சொல்லப்படுவது போன்று, இங்கு மலையின் முடியாக சிவன் இருக்கிறார் எனபதால் இது ‘கொடுமுடி’ என்ற பெயரைப் பெற்றுள்ளது. இங்கு சிவன் மகுடேஸ்வரராகவும், அம்பிகை வடிவுடைய நாயகியாகவும் காட்சி தருகின்றனர். இத்தலத்தின் லிங்கம் மிகச் சிறியது. அகத்திய மாமுனிவர் இந்த லிங்கத்தை தழுவியதால் உண்டான கைவிரல் தடயங்களை இன்றும் தரிசிக்கலாம்.
இக்கோயில் காவிரி ஆற்றின் மேற்கு கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 640 அடி நீளமும், 484 அடி அகலமும் உடையது. மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக 3 கோபுரங்களும், தனித்தனியாக 3 சந்நிதிகளும், 3 வாயில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் 3 மடங்கு ஆசீர்வாத பலன்கள் கிடைக்கும். பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.
மகுடேஸ்வரரான சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்பு கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவும் இத்தலத்துக்கு வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இக்கோயிலில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வன்னிமரம் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பாகும். இம்மரத்தில் பூ பூக்கும், ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும், மற்றொரு பக்கம் முள் இருக்காது. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால், எவ்வளவு நாள் ஆனாலும் தண்ணீர் கெட்டுப்போகாது. 3 முகம் கொண்ட பிரம்மதேவன் இந்த வன்னி மரத்தின் அடியில் எழுந்தருளியுள்ளார். மேலும், பழநி பங்குனி உத்திரம் திருவிழாவுக்கு தீர்த்தக்காவடி எடுக்கும் பக்தர்கள் இந்த வன்னிமர இலையை காவிரி நீரில் போட்டுத்தான் காவடி சுமந்து இன்றைக்கும் பாதயாத்திரை செல்கின்றனர்.
இக்கோயிலில் வேப்ப மரமும், அரச மரமும் இணைந்திருக்கும் இடத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார். விநாயகரை காவிரி நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால், திருமணத்தடை விலகும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு விரைவில் மகப்பேறு வாய்க்கும் எனக் கூறப்படுகிறது.
வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி, கொடுமுடி சிவஸ்தலத்திலிருந்து கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடிய பின் கோயிலுக்குச் செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது.
இங்கு மூலவர் வீரநாராயணப் பெருமாளை பார்த்தபடி கருடாழ்வார் எழுந்தருளியுள்ளார். மூலவர் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். மேலும், 12 ஆழ்வார்கள், பரமபதநாதர், ராமானுஜர், நாகர், வேங்கடாசலபதி, ஆஞ்சநேயர் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலின் ஆஞ்சநேயர் சற்று வித்தியாசமாக கோர பற்களோடு காட்சியளிக்கிறார். இங்கு மஹாலட்சுமி தாயாருக்கு தனி சந்நிதி உள்ளது. கோயிலின் மேற்கூரையில் ராசி சக்கரங்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. ஈரோட்டில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் கொடுமுடி என்ற ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.