ஆனந்த ஜோதி

இதய நோய் தீர்க்கும் பழங்காநத்தம் வீரபத்திரர்!

சுப.ஜனநாயகச் செல்வம்

மாதுளம் பழமும், செம்பருத்தி பூவும் வைத்து மதுரை பழங்காநத்தத்திலுள்ள வீரபத்திரர் கோயிலில் வழிபட்டால் இதய நோய் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மதுரையை ஆட்சி செய்த மன்னர் மலையத்துவச பாண்டியனின் மனைவி காஞ்சனமாலைக்கு குழந்தை இல்லை. நீண்ட வேண்டுதலுக்குப் பின், இவர்களுக்கு அம்பிகையின் வடிவமாக மீனாட்சி அவதரித்தார். வீர தீரத்துடன் பல படைகளை வென்ற மீனாட்சி, கைலாயத்தில் சிவனை கண்டதும் தனது மனதுக்கேற்ற மணாளன் என உணர்ந்தார்.

மீனாட்சியை திருமணம் முடிக்க சிவபெருமான் கைலாயத்திலிருந்து மதுரைக்கு வந்தார். அனைத்து தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், மகரிஷிகள் அனைவரும் மதுரை வந்தனர்.

திருமணத்துக்கு பாதுகாப்பாக ஜடாமுனி, முனீஸ்வரர் ஆகிய காவல் தெய்வங்களை திசைக்கு ஒருவராக நிறுத்தினார். தென்திசையில் தன் அம்சமான வீரபத்திரரை நிறுத்தினார்.
பின்னர், மதுரை வந்த கர்நாடகாவில் வசித்த வீரபத்திரரின் பக்தர்கள் சிலர், இங்கு அக்னி வீரபத்திரர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

இக்கோயிலில் உள்ள வீரபத்திரர் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி ருத்ரபாலகராக அருள்பாலிக்கிறார். மார்பில் ருத்ராட்ச மாலை அணிந்துள்ளார். வீரபத்திரன் அருகில் ஆட்டுத்தலையுடன் வணங்கிய நிலையில் உள்ள தட்சனை காணலாம். காலுக்கு கீழே தட்சனை சம்ஹாரம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார்.

வீரபத்திரர் கையில் உள்ள சூலம் தர்ஷனின் கழுத்தில் பாய்ந்த நிலையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கையில் தட்சன் நடத்திய யாகத்தில் அவிர்பாகம் பெற்ற தேவர் ஒருவரை பிடித்திருக்கிறார். மற்றொரு கையில் யாகத்தில் பயன்படுத்திய மணியை வைத்துள்ளார்.

இத்தகைய கோலத்தில் வீரபத்திரரை தரிசிப்பது அரிது. சிறிய கோயிலில் அம்பாளுக்கு சந்நிதி இல்லை. சுவாமி எதிரில் நந்தி முன்மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர், நாகர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

பிரதோஷ நாட்களில் நந்திக்கும், செவ்வாய்க்கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில் சுவாமிக்கும் விசேஷ பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் நடை பெறுகிறது. சிவராத்திரியன்று ஆறுகால பூஜை நடைபெறும்.

இடப்பிரச்சினை, வில்லங்கம், நிலப் பிரச்சினை, விளைச்சல் பாதிப்பு தீர இங்கு வந்து வேண்டுகின்றனர். செவ்வாய் கிரகம் நிலத்துக்கு அதிபதி என்பதால், செவ்வாய்க்கிழமை களில் நிலப்பிரச்சினை உள்ளவர்கள் வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் கேசரி நைவேத்தியம் படைத்து, வெற்றிலை, எலுமிச்சை, வில்வமாலை சாற்றுகின்றனர். மேலும், குலதெய்வம் தெரியாதவர்கள் வீரபத்திரரை குலதெய்வமாக வழி படுகின்றனர். வில்வம் தல விருட்சம்.

இக்கோயிலில் மாதுளம் பழம் வைத்து வழிபட்டால் ரத்த தொடர்புடைய நோய்கள், இதயம் சம்பந்தமான நோய்கள் தீரும். இடப்பிரச்சினை, வில்லங்கம், பிரச்சினையில் பாதியில் நிற்கும் கட்டிடத்தை முழுமையாகக் கட்டி முடிக்க செவ்வாழைப்பழம், செவ்வரளியும் வைத்து வழிபட்டால் பிரச்சினை தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

இசைஞானி இளையராஜா மதுரைக்கு வரும்போதெல்லாம் வீரபத்திரரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காலை 6.30 முதல் 9 மணி வரையிலும், மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

SCROLL FOR NEXT