ஆனந்த ஜோதி

தீவினைகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் காவல் தெய்வம் கருப்பசாமி

செய்திப்பிரிவு

கிராம தெய்வங்களில் முதன்மையானவர் கருப்பசாமி. தலைப்பாகை அணிந்து, உக்கிர விழிகளுடன் ஏந்திய வீச்சரிவாளுமாக இவரின் தோற்றமே அத்தனை கம்பீரமானது.

கல்வி, செல்வம், ஆரோக்கியம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தெய்வங்கள் இருந்து வரும் நிலையில், இவை அத்தனையையும் உள்ளடக்கி காவல் தெய்வமாக பரிணமித்து வருகிறார் கருப்பசாமி. எளிமைக்கு பெயர் பெற்ற ஸ்தலம் இவருடையது. கோபுரம் இன்றி பல இடங்களில் வெட்டவெளியில் நின்று அருள்பாலிக்கிறார். இவரை தரிசிக்க நடைதிறப்பு என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பெரிய அளவிலான துதிப்பாடல்களோ, வழிபாட்டு முறைகளையோ இவர் எதிர்பார்ப்பதில்லை. மக்களின் மனோநிலைக்கு ஏற்ப படையலிட்டு இவரை வழிபட்டுச் செல்கின்றனர்.

சலங்கையும், சாட்டையும் இவருக்கான பிரத்யேக அடையாளங்கள். கிராமக் கோயில்கள் அனைத்திலும் இவரின் அருள்பாலிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மாயாஜால ஆயுதங்கள், கூடுதல் அங்கங்கள் எதுவும் இன்றி ‘இயல்பாக’ காட்சியளிக்கிறார். இதனால், இவர் ‘நம்மவர்’ என்று பக்தர்களுக்கு சட்டென்று ஒரு நெருக்கம் ஏற்பட்டு விடுகிறது.

தீவினைகளுக்கு எதிரான சக்திவாய்ந்த பாதுகாவலரான இவர், மனக்குழப்பங்களை விரட்டுவதில் வல்லவர். இதனால் துக்கம், கடன் பிரச்சினை, கவலை, உறவுகளின் துரோகம் போன்ற நேரங்களில் இவரிடம் சரணாகதி அடைந்து வழிபடுவது வழக்கம். பல இடங்களில் இவருக்கு தனிக்கோயில்களும் உள்ளன. வயல்வெளிகள் போன்ற திறந்தவெளிகளிலும் இவருக்கு சிலை வைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது.

சங்கிலி கருப்பன், நொண்டி கருப்பசாமி, கொம்படி கருப்பண்ணசாமி, கோட்டை கருப்பசாமி, சோணை கருப்பசாமி என்று பல்வேறு ஊர்களில் பல்வேறு பெயர்களில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். சலங்கையும், சாட்டையும், ஆக்ரோஷ முகபாவமும் தீவினையை விரட்டுகின்றன. இருப்பினும், தன்னிடம் சரணடைந்த பக்தர்களின் மனதுக்குள் இவர் பாந்தமான தோற்றத்துடன் தோழமை தெய்வமாகவே இருந்து வருகிறார்.

SCROLL FOR NEXT