நிலக்கோட்டை அருகே மன்னவராதி கிராமத்தில் உள்ள பழமையான மல்லீஸ்வரர் கோயில் | படங்கள்: நா.தங்கரத்தினம் 
ஆனந்த ஜோதி

பாண்டியர் காலத்து மன்னவராதி மல்லீஸ்வரர் கோயில்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மன்னவராதி கிராமத்தில் அமைந்துள்ளது மல்லீஸ்வரர் கோயில். பாண்டிய மன்னர் காலத்தில் சிறிய கோயிலாகக் கட்டப்பட்டு, நிலக்கோட்டை சுற்றுப்புற கிராம மக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இந்த கோயில் கட்டப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. பாழடைந்த நிலையில் இருந்த கோயிலை, மன்னவராதி கிராம மக்கள் சீரமைத்து, இன்றளவும் பழமை மாறாமல் பராமரித்து தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோயிலில் மங்களநாயகி சமேத மல்லீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோயில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி, வராஹி அம்மன் சந்நிதிகள் உள்ளன. கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பாக நந்தி சிலை உள்ளது. கோயிலுக்குள் முதல் அறையில் விநாயகர், சுப்பிரமணியர் காட்சி யளிக்கின்றனர். இதையடுத்து, கருவறையில் மல்லீஸ்வரர் லிங்க வடிவத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பிரதோஷ நாட்களில் மல்லீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

வராஹி அம்மனுக்கு விசேஷ நாட் களில் சிறப்பு பூஜைகள் நடை பெறுகின்றன. பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலை விரிவுபடுத்தாமல் உள்ளனர். பழமைமாறாமல் இருந்த நிலையிலேயே மன்னவராதி கிராம மக்கள் பராமரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. விசேஷ நாட்களில் உபயதாரர்கள் சார்பில் அன்னதானமும் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT