திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கொத்தப்புள்ளி கிராமத்தில், திண்டுக்கல் - பழநி சாலை அருகே அமைந்து உள்ளது பிரசித்திபெற்ற கதிர்நரசிங்கப் பெருமாள் கோயில். இதன் கருவறையில் நரசிங்கப் பெருமாளும், வலதுபுறம் கமலவள்ளி தாயாரும், இடதுபுறம் லட்சுமியும் பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றனர். நரசிங்கப் பெருமாள் சிம்ம முகத்துடன் இல்லாமல் சாந்த சொரூபியாக இந்த கோயிலில் காட்சியளிக்கிறார்.
கோயிலின் அமைப்பு: சந்நிதியின் எதிரில் கருடாழ்வார் உள்ளார். கோயிலின் அக்னி மூலையில் ஆறடி உயர ஆஞ்சநேயர் இருப்பது இந்த கோயிலில்தான். ராமநவமி, சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. எலு மிச்சை, துளசிமாலை, நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர்.
கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். இவரை சுற்றி தேவர்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. சக்கரத்தாழ்வார் பின்புறம் யோகநரசிம்மர் சிலை உள்ளது. இக்கோயிலில் பைரவர் எழுந்தருளி, இரு நாய் வாகனத்தில் அனுகிரஹ பைரவராக காட்சியளிக்கிறார். தேய்பிறை அஷ்டமி நாளில் பக்தர்கள் பைரவரை வழிபடுகின்றனர். கோயிலுக்குள் செங்கமலவள்ளிதாயார் சந்நிதி, லட்சுமி ஹயக்ரீவர் சந்நிதி, வராகமூர்த்தி சந்நிதிகள் உள்ளன. இந்த கோயிலில் சிவன் வீற்றிருப்பது சிறப்பு.
விழா நாட்கள்: கோயில் நடை காலை 7 முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும். முக்கிய விழாக்களாக நரசிம்ம ஜெயந்தி திருவிழா, வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பு ஆகியவை நடைபெறுகின்றன. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஆண்டுதோறும் கொத்தப்புள்ளி அருகேயுள்ள மலையில் வீற்றிருக்கும் கோபிநாதசுவாமி, மலையில் இருந்து இறங்கி கதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலுக்கு வருகை தந்து பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார். இதைத் தொடர்ந்து, வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெறும்.
திண்டுக்கல் வழியாக பழநிக்கு பாதயாத்தி ரையாகச் செல்லும் பக்தர்கள், கொத்தப்புள்ளியில் உள்ள கதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில் தங்கி ஓய்வெடுத்து, பெருமாளை வழிபட்டு, தங்கள் பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகின்றனர். தற்போது, கதிர்நரசிங்கப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கோயில் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், கோயில் வளாகம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிவடைந்தவுடன் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.