பழநி மலைக்கு அருகிலேயே இன்னொரு பிரம்மாண்டமான மலை கண்ணில் தென்படும், அதுதான் இடும்பன் மலை. பழநியின் வரலாற்றில் இடும்பனுக்கு தனிச்சிறப்பு உண்டு. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலையில், கடந்த 2000-ல் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டது.
இடும்பனுக்குரிய பெரிய கோயில் பழநியில் மட்டுமே உள்ளது. இக்கோயிலில் 13 அடி உயரத்துக்கு இடும்பன் காவடி தூக்கி வருவது போன்ற பிரம்மாண்ட சிலை உள்ளது. பழநி மலை போல் 540 படிகள் ஏறிச் சென்றால் இடும்பனை தரிசிக்கலாம்.
இடும்பனிடம், ‘என்னை தரிசிக்க வரும் பக்தர்கள் வேண்டுதலை கேட்டு என்னிடம் சொல்வாய், உன்னைப் போல் காவடி கட்டிக்கொண்டு வந்து முதலில் உன்னை வணங்கி வழிபட்டு, என்னை வந்து வழிபட்ட பிறகே பக்தர்களுக்கு பூரண பலன் கிடைக்கும்’ என்று கூறி முருகன் அருள் பாலித்திருக்கிறார்.
இக்கோயிலில் திருவிழாக்கள் என்று எதுவும் இல்லை. காலை 6 முதல் மாலை 7 மணி வரை நடை திறந்திருக்கும். பங்குனி உத்திரம், தைப்பூசத் திருவிழாவின்போது அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.
செவ்வாய், வெள்ளிக்கிழமையில் உள்ளூர் மக்கள் சென்று தரிசிக்கின்றனர். மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் குளத்தில் புனித நீராடி விட்டு, பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.
இனி பழநி செல்பவர்கள் இடும்பனையும் அவசியம் வழிபட வேண்டும். அப்போதுதான் முருகனை வழிபட்ட முழு பலனும் கிடைக்கும். பக்தர்கள் வசதிக்காக படிப்பாதையில் கூடுதல் நிழல் மண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பழநி மலைக்கோயிலில் இருந்து இடும்பன் மலைக்குச் சென்று வர, விரைவில் ரோப் கார் அமைக்கப்பட உள்ளது.