ஆனந்த ஜோதி

உயிருக்கு நிறமுண்டு | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 3

நிரஞ்சன் பாரதி

சத்துவ குணம், ரஜோகுணம் , தமோகுணம் ஆகிய மூன்று குணங்களால் ஆனவர்கள் தாம் மனிதர்கள். இவற்றை சாத்வீகம், ராஜசம், தாமசம் என்றும் அழைப்பர். என்னென்ன விகிதங்களில் இந்த குணங்கள் கலந்திருக்கின்றனவோ அதற்கேற்பவே ஒருவரின் நடத்தை இருக்கும்.

பணிவு, அடக்கம், பொறுமை, கருணை, நம்பிக்கை, எளிமை உள்ளிட்டவை சாத்வீக குணங்கள். வேட்கை, இறுமாப்பு, தன்முனைப்பு, புலன் இன்பங்களில் நாட்டம் உள்ளிட்டவை ராஜச குணங்கள். அச்சம், சோம்பல், மோகம், பொறாமை, கவலை உள்ளிட்டவை தாமச குணங்கள்.

இந்த மூன்று குணங்களில் ராஜசம் மற்றும் தாமச குணங்களை இயல்பாகக் கொண்டவர்கள் தாம் நாம் ஏற்கெனவே பார்த்த ஐஸ்வர்யார்த்திகள். இவர்கள் தற்போது பெருமாளுக்குப் பல்லாண்டு பாட பெரியாழ்வாரோடு இணைந்திருக்கிறார்கள். அப்போது அவர்களைப் பார்த்து, "கவலைப்பட வேண்டாம். உங்கள் அனைவரையும் சாத்வீக குணமுடையவர்களாக மாற்றும் வல்லமை பெருமாளுக்கு உண்டு" என்று பெரியாழ்வார் நம்பிக்கை தருகிறார்.

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்

கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல

பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே

நெய்மணம் கமழும் நல்ல சோறு, ஒருபோதும் இறைவனைப் பிரியாமல் அவனுக்குச் சேவை செய்கிற அரிய வாய்ப்பு , தாம்பூலம், கழுத்திலும் காதிலும் அணியக்கூடிய ஆபரணங்கள், உடலில் பூசிக்கொள்ள சந்தனம் ஆகியவற்றை ஐஸ்வர்யார்த்திகளுக்குத் தந்து அவர்களை சத்துவ குணம் மிக்கவர்களாய் ஆக்குகிறாராம் பெருமாள்.

உலகில் நாம் வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருட்களை தாரகம், போஷகம், போக்யம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

தாரகம் என்பது நாம் உயிர் வாழத் தேவையான அடிப்படை உணவு. அதன் எடுத்துக்காட்டு தான் 'நல்லதோர் சோறு'.

போஷகம் என்பது சுவையான மற்றும் சத்தான உணவு. அதற்கான குறியீடு நெய்.

போக்யம் என்பது ஆடம்பரம். தாம்பூலம் என்பது அதன் அடையாளம். இது இருந்தாக வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், இருந்தால் மகிழ்ச்சி.

சம்சார பந்தத்தில் இருந்தாலும், உலகியலில் ஈடுபாடு கொண்டாலும், அனுபவிக்கும் எல்லாமே அந்தப் பெருமாள் கொடுக்கின்ற பிரசாதம் தான் என்று நினைக்கின்ற பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம் இருந்தால் போதும். ஐஸ்வர்யார்த்திகளுக்கு எது தேவையோ அதை மட்டும் கொடுத்து திருமால் அவர்களை மெல்ல சாத்விக குணம் உடையவர்களாக மாற்றுவான்.

நமது மரபில் வெண்மை என்பது சாத்வீக குணத்தையும் செம்மை என்பது ராஜச குணத்தையும் கருமை என்பது தாமச குணத்தையும் குறிக்கும். எனவே, சத்துவ குணம் உடையோரை வெள்ளுயிர் என்னும் அழகான தனித்தமிழ் சொல்லால் சுட்டுகிறார் பெரியாழ்வார். அப்பழுக்கில்லாத தன்மை கொண்டவர்கள் இந்த வெள்ளுயிர்கள்.

இவர்களைத் தனது குழாமில் இணைவதற்கு அழைக்கும் போது "கூறுவனே","என்னை வெள்ளுயிராக்க" என்று தன்னையும் ஐஸ்வர்யார்த்திகளாக பாவித்து பெரியாழ்வார் பாடக் காரணம் என்ன?

"பகவல்லாவார்த்திகள், கைவல்யார்த்திகள் ஆகியோர் எண்ணிக்கையில் சிறியராம். ஐஸ்வர்யார்த்திகள் எண்ணிக்கையில் பெரியராம். ஒரு பெரிய கூட்டத்தின் குரலாக ஒரு பிரதிநிதி பேசுவது தானே வழக்கு. எனவே, இயல்பாகவே பெரும் தாயுள்ளம் கொண்ட பெரியாழ்வார் அவர்கள் சார்பாகப் பாட வேண்டும் என்பதற்காகத் தான் 'கூறுவனே', 'என்னை வெள்ளுயிராக்க' என்று பாடுகிறார் என்பது வைணவ ஆசாரியர்கள் கொடுக்கும் விளக்கம்.

- நிரஞ்சன் பாரதி, தொடர்புக்கு: niranjanbharathi@gmail.com

SCROLL FOR NEXT