திருவண்ணாமலை எனும் ஆன்மீக திருத்தலம், தன்னை நாடி வருவோரின் துக்கங்களை எல்லாம் போக்க வல்லது. இங்கு வரும் பக்தர்கள் எல்லோரும் சிவனடியாரின் சொரூபங்களாவார்கள். எனவே, இங்கு பக்தர்களுக்கு அன்னமிடுவது தானங்களில் மிகச் சிறந்த தானமாகும். இத்தலத்தில் அன்னதானம் செய்வதன் சிறப்பை சீனந்தல் சிவப்பெருவாள சித்தர் என்னும் பெயருடைய சித்தரின் அருள்வாக்கின் மூலம் சாக்ஷாத் சிவபெருமானே கூறியிருக்கிறார். அந்த அற்புத வாக்கில் ஏற்பட்ட சொற்களை பக்தகோடி பெருமக்களுக்கு வழங்குவதில் பெருமைக்கொள்கிறோம்.
சீனந்தல் சிவப்பெருவாள சித்தர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் மானிட வடிவில் தோன்றியவர். அஷ்டமாசித்திகள் கைவரப்பெற்ற அஷ்டநாத பாவனங்களில் தலைசிறந்தவர். ஸ்தம்பனம், மோகனம், வசியம், உச்சாடனம், மாரகம், உத்வேஷணம், கல்பம், மகா உத்தி போன்ற எட்டு கல்ப சூத்திர நெறிகளின்படி அரிய மருந்துகளை தயாரித்து மக்களின் தீராத நோய்களை தீர்த்து வைத்தவர்.
பவுர்ணமி கிரிவலத்தில் திருவண்ணாமலையில் எண்ணற்ற சித்தர்கள் இன்றும் பல வடிவங்களில் மலையை கிரிவலம் வருகின்றனர். அந்த வகையில் சீனந்தல் சிவப்பெருவாள சித்தர் தனது பக்தி நிலைக்கு ஏற்ப தூல, சூக்கும், பாவன, அரூப வடிவுகளில் அண்ணாமலையை கிரிவலம் வருகிறார். கிரிவலத்தில் பக்தர்கள் காலில் நசுங்கிய சிறு எறும்புகளின் குரலைக் கேட்டு, அவைகளுக்கும் சிகிச்சை அளித்து வந்த மகா காருண்ய சித்தர். ஒரு முறை சிவபெருமான் கிரிவலத்தின் போது, மானிட வடிவில் இவரைச் சந்தித்து தனக்கு அடங்காத கோரப்பசி உள்ளது என்றும், அதனை அடக்க மருந்து வேண்டும் என்றும் கேட்க, சித்தரும் அவருடைய கை மணிக்கட்டு நாடியை பரீட்சித்து பார்த்தார்.
கோடியில் ஒருவருக்கே வரும் வாள (நாடி) துடிப்பு அது. இந்த வாளத்துடிப்பால் அடக்கவொண்ணா பெரும் பசி ஏற்படும். இதை தீர்க்க வேண்டுமென்றால் திருவண்ணாமலையில் பலகோடி பேர்களுக்கு அன்னதானம் செய்தவர்களுடைய கரங்களால் உணவு சமைத்து எடுத்துவந்தால் அதில் நான் தரும் பெருவாள பஸ்பத்தினை கலந்து மருந்துணவாக சாப்பிட்டால், வாள துடிப்பு பசி அடங்கிவிடும் என்கிறார் சித்தர். உடனே சிவபெருமான் பைரவரிடம் கோடி பேர்களுக்கு அன்னதானம் இட்டவர்களை பற்றிய விபரங்களை கேட்கவே, பைரவரும் பலரை குறிப்பிட்டு, தற்போது இங்கு இப்போது மனித வடிவில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து இதுவரையில் பலகோடி பேர்களுக்கு அன்னமிட்டு வருபவர் அக்னி பகவான் ஒருவரே என்று கூறி, அவரை அங்கே அழைத்து வந்து விட்டார்.
சிவபெருமானுக்கு ஆகுதி தர மறுத்த தட்சனுடைய யாகத்தில் வேள்விக்கு ஆதாரமாய் நின்று பங்கு கொண்டமையால் தன்னுடைய அக்னிப் பிரகாசம் குறைந்து அதற்கு பரிகாரம் தேடி திருவண்ணாமலையில் தாம் கிரிவலம் வந்து கோடிக்கணக்கானோருக்கு அன்னதானம் செய்து வருவதாக அக்னிபகவான் கூற, பைரவரும் மானிடராக வந்த சிவபெருமானை யாரென உரைக்காமல் அவருக்கு உணவு தயார் செய்து தருமாறு கூற, அக்னி பகவானும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். வந்தவர் யாரென்று தெரியாமல் கிரிவல பாதை ஓரத்தில் நான்கு வேதங்களும் கற்களாக, அசுவினி மற்றும் மருத்துவ தேவர்கள் விறகுகளாக, அன்னபூரணி அரிசி வார்த்திட, சாகம்பாதேவி பொருட்களை அரிந்து தர, பிரம்மா வேதாக்னி தந்திட உணவு தயாராயிற்று.
அதில், சித்தர் பெருவாள பஸ்பத்தை கலந்து தந்தார். அதனை ஏற்று உண்ட சர்வேஸ்வரனுக்கு இருந்து வந்த தீராத பசியை தீர்த்து வைத்தார். அப்போது அருணாச்சல பெருமான் அசரீரியாய் சித்தரை நோக்கி, சிவபெருவாள சித்தரே, எம்மை ஜோதியாய் அடைவீர் என்று அருளி அவரை ஆட்கொண்டார்.
அன்னதான சிவன், அக்னி பகவான் சீனந்தல் சிவப்பெருவாள சித்தர் போன்றோர் கிரிவலம் வருகின்ற, மிகவும் அபூர்வமான கிடைத்ததற்குரிய சிவனின் திருவடியில் மாதா அன்னபூரணி தேவியே சிவப்பெருவாள சித்தரை ஆசீர்வதித்த கிரிவலப்பாதையில் அன்னதானம் செய்வதால் கல்வி, வேலை, பதவி, அரசியல், ஆரோக்கியம், திருமணம், வழக்கு, குடும்ப பிரச்சினை, தொழில் போன்றவற்றில் இருந்த பிரச்சினை நீங்கி மேன்மையும், சுபமும் உண்டாகும் மற்றும் ஓட்டல், மளிகை, காய்கறி போன்றவை சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ளோர் வளம் பெறுவதற்கும் வயிறு சம்பந்தமான நோய்களால் வாடுவோர் தக்க நிவர்த்தி பெறுவதற்கும் அன்ன வேஷத்தால் சரியாக சாப்பிட முடியாதவர்களுக்கு பலன் கிடைக்கவும் அண்ணா மலையில் அன்னதானம் செய்வது மிகவும் உகந்தது.
- நிர்மலா கார்த்திவேல் மாறன்