ஆனந்த ஜோதி

ராமன் சொன்ன கதை தெரியுமா?

யுகன்

`எல்லாருக்கும் ராமனின் கதை தெரியும். ஆனால் ராமன் கூறிய ஒரு கதை இருக்கிறது தெரியுமா?' என்னும் பீடிகையோடு தொடங்குகிறது கதை. `எந்தக் கோயிலில், யாருடைய கதாகாலட் சேபத்தில் இதைக் கேட்டீர்கள்?' என்று தானே கேட்கிறீர்கள்! இதை நாம் கேட்டது, குழந்தைகளுக்கான

நவீன கதைசொல்லி சாதனமாக இன்றைக்கு இருக்கும் `பாட்காஸ்ட்' என்னும் செயலியில். இப்படியொரு நவீன வடிவத்தில் `ஐங்கரனின் கர்ணபரம்பரை கதை'களை கடந்த 2020-ல் சொல்லத் தொடங்கினார் அமெரிக்காவில் வாழும் நாகராஜன்.

`குழந்தைகளே' என்று பாசத்தோடு அவர் அழைத்தபடி, கதை சொல்லத் தொடங்கும்போது, குழந்தைகளோடு பெரியவர்களும் கதையோடு ஒன்றிவிடுகின்றனர்.

‘‘ராமாயணத்தில் மிக முக்கியமான யுத்த காண்டத்தில், ராமன் கூறிய அந்தக் கதை வருகிறது. ராமனின் அன்பு மனைவி சீதையைக் கவர்ந்து சென்றான் ராவணன். அவனது தம்பி விபீஷணன், தன்னுடைய அண்ணனின் அடாத செயலைக் கண்டித்து ராமனிடம் சரண் அடைய வந்தான்.

அப்போது அவனை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்று வானர அரசன் சுக்ரீவன், வானர வீரர்கள் ஜாம்பவான், அனுமன் ஆகியோருடன் ராமன் ஆலோசிக்கிறார். அனுமனைத் தவிர, அனைவரும் விபீஷணனுக்கு கருணை காட்டக் கூடாது என்கின்றனர்.

அப்போது ராமர், தன்னிடம் அடைக்கலமான மனிதனை குரங்கு கடைசி வரையில் எப்படிக் காப்பாற்றியது என்னும் கதையைக் கூறினார். ஒரு சாதாரணக் குரங்கு, சரணாகதி தத்துவம் என்னும் பெரிய விஷயத்தை செயல்படுத்தியது என்பதை எடுத்துரைத்தார். ஒரு குரங்கால் முடிந்த அந்த விஷயத்தை, ஆறறிவு உள்ள மனிதர்களாகிய நாம் பின்பற்ற வேண்டாமா? நம்மிடம் சரணடைந்த விபீஷணனைக் காக்க வேண்டியது நம் கடமை’’ என்றார்.

இந்தியா, ரஷ்யா, ஆப்பிரிக்கா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், அரபு நாடுகள், ஐரோப்பியா, இங்கிலாந்து எனப் பல நாடுகளைச் சேர்ந்த கதைகளை குழந்தைகளிடம் கொண்டு சேர்த்துள்ளார் ஐங்கரன். இவருடைய கதைகளில் மனிதாபிமானம், நகைச்சுவை, பெரியவர்களிடம் அன்பு செலுத்துதல், நம்மை நாடி வந்தவர்களுக்கு அடைக்கலம் அளித்தல் போன்ற உயர்ந்த பண்புகள் வெளிப்படுகின்றன.

‘ஐங்கரன்’ என்னும் பெயரில் கதைசொல்லியாக உலகக் குழந்தைகளிடம் அறிமுகமாகியிருக்கும் இந்த அன்பான தாத்தாவின் பெயர் நாகராஜன். 2000-வது ஆண்டில் அவருடைய ஐந்து வயது பேரனுக்கு தினமும் ஒரு கதை சொல்லவேண்டும் என்று தொடங்கினார். இப்பொழுது அவரின் பேரனுக்கும் திருமணமாகி விட்டது. ஆனால், பேரனுக்காக படித்த கதைகளை, இந்தியக் குழந்தைகள் பயன் பெறும் வகையில் பாட்காஸ்டில் சொல்ல ஆரம்பித்தார் நாகராஜன்.

"கடந்த 2020-ல் விளையாட்டாக ஆரம்பித்தது, கிட்டத்தட்ட 200 கதைகள் சொல்லி விட்டேன். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு. இதை மறுபடியும் தொடரப் போகிறேன். ஏனென்றால், 500-க்கும் மேற்பட்ட கதைகள் இன்னும் என் வசம் தயாராக இருக்கின்றன" என்கிறார் ஐங்கரன் தாத்தா. ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகளை ஸ்பாட்டிஃபை மூலம் கேட்பதற்கான
இணைப்பு: anchor.fm/raja-nagarajan.

யூடியூப் இணைப்பு: https://tinyurl.com/yctlkew

SCROLL FOR NEXT