சுவாமி விவேகானந்தர் சென்னையில் தங்கியிருந்த இடமே தற்போது விவேகானந்தர் இல்லம் என அழைக்கப்படுகிறது. விவேகானந்தர் தங்கியிருந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 6 முதல் 14 வரை ஒன்பது நாள்கள் விவேகானந்தர் நவராத்திரி விழா விவேகானந்தர் இல்லத்தில் நடந்தது. தினம் தினம் சொற்பொழிவுகள், பக்தி இசைப் பாடல்கள், நாமசங்கீர்த்தனம் போன்ற வெவ்வேறு கலை வடிவங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை மயிலாடுதுறை எம். சோமசுந்தரம் குழு பொம்மலாட்டம் வடிவில் நிகழ்த்தினர். ராமகிருஷ்ணருக்கு அவரின் பெற்றோர் வைத்த பெயர் கதாதரர். சிவனின் அருளைப் பெற்றவர் என்று இதற்கு அர்த்தம்.
ராமகிருஷ்ணரின் பிறப்பிலிருந்தே பொம்மலாட்டத்தை தொடங்கினர். சிவபெருமான் அருளால் நிகழும் கதாதரரின் பிறப்பு, பள்ளியில் சிவன் வேடமணிந்து கதாதரர் நடனமாடுதல், தந்தையார் காலமானவுடன் சகோதரர் ராம்குமாருடன் தட்சிணேஸ்வரம் காளி கோயிலுக்கு செல்கிறார் கதாதரர். இவை அனைத்தும் பொம்மலாட்டத்தில் நம் கண்முன் காட்சிகளாக விரிந்தன.
அண்ணன் ராம்குமார் மறைவுக்குப் பின், காளி கோயிலில் கதாதரரே பூஜை செய்யத் தொடங்குகிறார். காளியின் தரிசனம் கிடைப்பதற்காக மன்றாடுவதும் அதன் பின் நிகழும் காளியின் தரிசனமும் உயிர்ப்போடு பொம்மலாட்டத்தின் வழியாக நிகழ்த்தினர் குழுவினர்.
தனக்குத் தானே பூஜை செய்து கொள்ளும் நிலைக்குப் போகும் கதாதரர் தன் பெயரை `ராமகிருஷ்ணர்' என மாற்றிக் கொள்கிறார். சாரதாவை திருமணம் புரிந்தும் தனித்திருக்கும் ராமகிருஷ்ணரின் சிஷ்யையாகிறார் சாரதா தேவி. அவரைத் தாயாகவே வழிபடுகிறார் ராமகிருஷ்ணர்.
இளைஞரான நரேந்திரரும் ராமகிருஷ்ணரும் சந்திக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தன. நரேந்திரர் குரு ராமகிருஷ்ணருடன் பல சமயப் பணிகளைச் செய்கிறார். நிறைவாக ராமகிருஷ்ணரின் அஸ்தி கலசத்தை சுவாமி விவேகானந்தர் சுமந்து வந்து, பேலூர் மடத்தில் பிரதிஷ்டை செய்து, சுவாமி விவேகானந்தர் சீடர்களுக்கு ராமகிருஷ்ணரின் பெருமைகளை விளக்குவதோடு அந்தப் பொம்மலாட்ட நிகழ்வு இனிதே முடிந்தது.
"நாங்கள் புராணம், வரலாறு, சமூகக் கதைகள், அரசாங்க திட்டங்கள் என 46 தலைப்புகளில் பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். வெவ்வேறு பொம்மைகள் உள்ளன. கதைக்கு ஏற்றவாறு அலங்காரம் செய்வோம். நாங்கள் தயாரிக்கும் பொம்மைகள் கல்யாண முருங்கை அல்லது அத்திமரத்தில் செய்யப்படுகின்றன" என்றார் குழுவின் தலைவர் சோமசுந்தரம்.
வசனங்களை பாமர மொழியில் பேசியதுடன் குழுவின் தலைவராகவும் சோமசுந்தரம் செயல்பட்டார். சார்லஸ் (பாட்டு, வசனம், கீபோர்ட்), கே.பத்மா (பாடல், வசனம்), மோகன் (தபேலா), ராஜேந்திரன் (முதன்மைச் சூத்திரதாரி), கேசவன், பிரசாத், லாரன்ஸ் (உதவி சூத்திரதாரிகள்), கலா (அலங்காரம்) ஆகிய கலைஞர்கள் இணைந்து நடத்திய அந்தப் பொம்மலாட்ட நிகழ்ச்சி, நகரத்தில் இருக்கும் மாணவர்களிடையேயும் பக்தியைப் பரப்பியது.