ஆனந்த ஜோதி

ரூபமும் அரூபமும்

வா.ரவிக்குமார்

ரசிக ரஞ்சனி சபாவில் டிரினிடி கலை விழா நிகழ்வுகள் ஐந்து நாள்களுக்கு அண்மையில் நடைபெற்றன. மூத்த கர்னாடக இசைக் கலைஞர் மதுரை ஜி.எஸ்.மணிக்கும் மூத்த பரதநாட்டியக் கலைஞர் சாவித்திரி ஜகன்னாதனுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இளம் கலைஞர்களுக்குப் பல விருதுகளும் அளிக்கப்பட்டன. இசைக் கச்சேரிகள், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் இடம்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் நவ்யா நடராஜனின் நாட்டிய நிகழ்ச்சி பலரின் கவனத்தைக் கவர்ந்தது.

நமக்கு மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மரணத் தறுவாயில் இருக்கும்போது, பலவிதமான எண்ணங்கள் நம் மனதில் அலைபாயும். அப்படியொரு துயர் தன்னுடைய வாழ்விலும் வந்ததை அடியொட்டி ‘இருண்மை’ என்னும் பொருளில் இந்த நாட்டிய நிகழ்வை வடிவமைத்ததாகக் கூறினார் நவ்யா.

மனப் போராட்டத்துக்கான மருந்தாக நடனத்தைத் தேர்ந்தெடுத்த நவ்யா, இருண்மையின் பல நிலைகளை இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையேயான தத்துவங்களின் தரிசனமாக நிகழ்த்திக் காட்டியதுதான் இந்த நாட்டிய நிகழ்ச்சியின் சிறப்பு.

ரூபத்தையும் அரூபத்தையும் விளக்க ராவணன் எழுதிய சிவதாண்டவத்தையும் ஆதிசங்கரர் அருளிய நிர்வாண சதகத்தையும் முன்னெடுத்து ஆடினார். படைத்தலும் அழித்தலும் என்பதை விளக்கும் குறியீடாக சிவனின் டமரு வாத்தியத்தையும் நெற்றிக்கண் நெருப்பையும் பயன்படுத்திக் கொண்டார். காதலுக்கும் ஊடலுக்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கன்னட பெண் கவி அக்கமகாதேவியின் பாடல்களைப் பயன்படுத்தி ஆடினார். அசைவில்லாததையும் அசைவையும் அமைதியையும் நாட்டியத்தின் வழியாக விளக்கிய நவ்யா, அந்த அமைதியிலிருந்துதான் கலைகள் பிறக்கின்றன என்பதையும் தன்னுடைய அழகான அபிநயங்கள் மூலமாக மிக எளிமையாக ரசிகர்களுக்குப் புரியவைத்தார்.

அரங்கத்தில் அவருடன் இன்னொரு கதாபாத்திரமாகவே ஒளி (சூர்யா) பங்கெடுத்தது. சம்ஸ்கிருத வரிகளை அர்ஜுன் பரத்வாஜும் தமிழ்ப் பாடல்களை டாக்டர் ரகுராமனும் எழுதியிருந்தனர்.

SCROLL FOR NEXT