ஆனந்த ஜோதி

சென்னை வாரம்: சன்மார்க்கம் பரப்பிடும் மதராஸ்!

ராமச்சந்திர வைத்தியநாத்

தமிழ்நாட்டின் மற்றெந்த நகருக்கும் இல்லாத பெருமையினை மதராஸ் பட்டணம் கொண்டிருக்கிறது. சைவ வைணவ மோதல்கள் மட்டுமின்றி, சைவ சமண சச்சரவுகளும் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் எழுந்தாலும், மதமோதலற்ற நகராக உருவாகி இன்றைய தினம் மாநகராக விளங்குகிறது.

சித்தர்களின் களம்: சித்தர்களும் சன்மார்க்கிகளும் இறைத் தூதர்களும் கால் பதிந்த பெருமை கொண்டது மதராஸ் பட்டணமாகும். பின்னாளில் இவர்களின் அடியொற்றி உருவான அமைப்புகளும் இந்நகரில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்திக் கொண்டன.

இவ்வமைப்புகளைத் தாண்டி மக்களோடு அவர்தம் அன்றாட வாழ்வில் இணைந்து நின்று காலங்காலமாய் பின்பற்றி வந்த மூடப் பழக்கவழக்கங்களுக்கு எதிராகப் போர்தொடுத்த மூசா ஷா காத்ரியும் ராமலிங்க அடிகளாரும் குணங்குடி மஸ்தான் சாஹிப்பும் களமாகக் கொண்ட பெருமையை உடையது இப்பட்டணமே.

மதமாச்சரியம் கடந்த சீடர்கள்: ‘மத பேதம் ஓதி மதி கெட்டவர்க்கு எட்டாத வான் கருணை வெள்ளமென’ பாடியவர் குணங்குடியார். மத வெறிக்கும் இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று உணர்த்திய அவர் குணங்குடியிலிருந்து சுல்தான் அப்துல் காதிராக மதராஸ் பட்டணம் வந்து, ராயபுரத்தில் உள்ள பாவா லெப்பையின் கள்ளிக் காட்டில் தங்கி யோகம் புரிந்தார்.

“மதம்அத் தளையுமற்ற மதமுற்று யானும் உம் மதமாக அருள் புரியவும்” என்று இறைஞ்சிய அவருக்கு முதன்மைச் சீடர்கள் என்று குறிப்பிட வேண்டியவர்கள் திருத்தணிகை மகா வித்வான் சரவண பெருமாள், சிவயோகி அய்யாசாமி முதலியார், வெங்கடராயப் பிள்ளை, கோவளம் அருணாசலம் முதலியார் போன்றோரே.

பராபரக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி கீர்த்தனைகள் போன்ற சாஹிப்பின் பாடல்கள் பிரபல வீணை வித்வான் வி.எஸ்.கோமதி சங்கர ஐயர் அவர்களால் ஸ்வரப்படுத்தப்பட்ட பின்னர், கர்னாடக இசை நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வந்திருக்கின்றன.

‘தீதுமத பேதங்கள் அற்றுமே எங்குமிது செல்வதும் எக்காலமோ' என்கிற வினாவினை எழுப்பிய அவரது பாடல்கள், தமிழ்நாட்டில் குறிப்பாக மதராஸ் பட்டணத்தில் இந்து - முஸ்லீம் சுமுக உறவுக்குப் பெரிதும் காரணமாக இருந்தன என்று கவிஞர் அப்துல் ரகுமான் உரைத்தது சாலப் பொருந்தும்.

சமரசம் உலாவும் சன்மார்க்கம்: ராயபுரத்திற்கு மஸ்தான் சாஹிப் பெருமை சேர்த்ததைப் போலவே ஏழு கிணறுக்குப்பெருமை சேர்த்தவர் ராமலிங்க அடிகளார். “எவ்வகைச் சார் மதங்களிலே பொய் வகைச் சாத்திரங்கள் எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வமென்று கைவ கையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்றென்றறீயிர்” என்றுரைத்த ராமலிங்கர் “சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திர சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித் தலைநின்றீர் உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே” என்று வினவுகிறார்.

சாதி அமைப்பு முறைக்கு எதிராக சன்மார்க்க நெறிமுறையை நகரில் முன்னெடுத்துச் செல்ல அவரது போதனைகளும் பாடல்களும் திருப்புமுனையை உருவாக்கியிருக்கின்றன.

பொருளாசையை விட்டொழிக்க ஏற்றத்தாழ்வுக்கு எதிராக நின்ற பட்டினத்தார், உடலே தெய்வம் என்று நுட்பமாகக்கவசமிட்ட பாம்பன் சுவாமிகள் மட்டுமின்றி பதினேழாம் நூற்றாண்டில் மதராஸுக்கு வந்து மக்களின் பிணி அகற்றிட பேருதவி செய்த சையத் மூஸா ஷா காத்ரி ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடங்களைக் கொண்டிருப்பதும் இவர்களின் பாதையைப் பின்பற்றுவோர் மதமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு விளங்கி வருவதும் பட்டணத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்.

மனிதர்களாக்கிய விவேக போதனை: 1893ல் முதன் முதலாகப் பட்டணம் வந்த விவேகானந்தரின் போதனைகளால் மதராஸ் ஈர்க்கப்பட்டது என்றே சொல்லலாம். பின்னர் சிகாகோ சொற்பொழிவுக்குப் பின்னர் 1897 முதல் இப்பட்டணம் அவரது தளமாகவே மாறியது. “வாருங்கள்! மனிதர்கள் ஆகுங்கள்! முன்னேற்றத்திற்கு எப்போதும் முட்டுக்கட்டையாக நிற்கின்ற புரோகிதக் கூட்டத்தை உதைத்துத் தள்ளுங்கள்!” என்கிற அவரது அறைகூவல் மதராஸ்வாசிகளை ஈர்த்தது.

“நூற்றாண்டு களாய்ச் சமையலறையைப் பற்றியும், நான் உங்களைத் தொடலாமா, நீங்கள் என்னைத் தொடலாமா, அப்படித் தொட்டுவிட்டால் என்ன பிராயச்சித்தம் என்பது பற்றியும் விவாதித்துக் கொண்டிருக் கிறோம்” என்று அவரால் திருவல்லிக்கேணியிலேயே பிரசங்கம் செய்ய முடிந்த தோடன்றி, அத்திசைவழியில் செயல் பாடுகளை அமைத்துக்கொள்ள திருவல்லிக்கேணி மயிலைவாசிகள் உதவிகரமாக இருந்திருக் கின்றனர் என்பதும், “சென்னையிலிருந்துதான் புதிய ஒளி இந்தியா எங்கும் பரவியாக வேண்டும், இந்த நோக்கத்துடன் நீங்கள் வேலை செய்ய வேண்டும்” என்று அவருடைய நெருங்கிய சீடர் டாக்டர் நஞ்சுண்ட ராவுக்கு கடிதம் எழுதியதும், சமத்துவமும் சகோதரத்துவமும் மதராஸின் அடிநாதமாக இருந்து வருவதையே உணர்த்துகிறது.

தான் இயற்றிய `சகலகலாவல்லி மாலை' எனும் இறை வணக்க நூலை, மொகலாய மன்னன் ஔரங்கசீப் அவையில் அரங்கேற்றிய குமர குருபரது திருப்பனந்தாள் ஆதினமும் திருவாவடுதுறை ஆதினமும் நகர மக்களின் ஆன்மிகத் தேவையைப் பூர்த்தி செய்வதோடன்றி, கல்வி, மொழி வளர்ச்சி போன்ற பண்பாட்டியல் தளங்களில், மதத்தைத் தாண்டிய மக்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தி வருவதில் முன்நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

`பூர்ணியா' எனும் பிராமணரை பிரதான அமைச்சராகக் கொண்டிருந்த திப்பு சுல்தானின் பல்வேறு மானியங்களைப் பெற்றிட்ட சிருங்கேரி மடம், காஞ்சி மடம், பன்றி மலை ஸ்வாமிகள் மடம், ஓம் சக்தி இயக்கம் போன்ற பல்வேறு அமைப்புகளும் இறை நம்பிக்கை கொண்ட மக்களிடையே, சாதி மொழி கடந்து செயல்பட்டு வருவது மதராஸின் மாண்பையே வெளிப்படுத்துகிறது.

நல்லிணக்க இயக்கங்கள்: பிரம்மகுமாரிகள் சங்கம், ராமகிருஷ்ண மடம், கௌடியா மடம், இஸ்கான் எனும் ஹரே கிருஷ்ண இயக்கம் போன்றவை சாதி பேதமற்ற செயல்பாடுகளோடு அனைவருக்கும் வழிபாட்டு உரிமை என்பதை நிலை நாட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

இவையன்றி இஸ்லாமிய கிறிஸ்துவ நெறிமுறைகளைப் பின்பற்றி வரக்கூடிய ஏராளமான அமைப்புகள் மதராஸ் மக்களிடையே இறையுணர்வை மேம்படுத்தி கல்வி, பண்பாட்டியல் துறைகளில் கவனம் செலுத்துவதோடு பட்டணத்தின் மத நல்லிணக்க மரபுகளைப் பேணிப் பாதுகாத்து வருவதும் பெருமைக்குரியது.

அன்று இறைவனை வழிபடும் பொருட்டு தில்லை சென்ற நந்தன் வழிமறிக்கப்பட்டான். இன்றோ, எந்நாளும் வழிபடும் வகையில் மதராஸில் உள்ள திருமலை எழுமலையானின் கிளைக் கோயில் உள்பட பல்வேறு ஆலயங்கள் எந்நேரமும் திறந்து வைக்கப்பட்டு மக்கள் சாதி, பேதமற்று பூஜிக்க வகை செய்துள்ளன. இதுவே பட்டணமாகும்.

கட்டுரையாளர், சென்னை வரலாற்றாசிரியர்; veeorr52@gmail.com

SCROLL FOR NEXT