ஆனந்த ஜோதி

ஹம்ஸத்வனியில் சங்கமமான சுதந்திர ஒலி!

வா.ரவிக்குமார்

எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்திட வேண்டும் என்பதுதான் சுதந்திரத்தின் நோக்கம். அந்த நோக்கத்தைத் தங்களிடம் இசை படிக்கும் குழந்தைகள் (சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை) அனைவரும் பயன்பெறும் வகையில் சுதந்திர நாளில் கொண்டித்தோப்பு பகுதியிலிருக்கும் ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தில் ராகவர்ஷினி நிகழ்ச்சியாக நடத்தியது ஸ்ரீ சாந்தகுரு நுண் கலைப்பள்ளி.

அன்றைக்கு நடந்த நிகழ்ச்சி முழுவதையும் முழுக்க முழுக்க ஹம்ஸத்வனி ராகத்தை பிரதானமாகக் கொண்டு ராகவர்ஷினியாக வடிவமைத்திருந்தார் அறக்கட்டளை நிறுவனரும் இசை ஆசிரியையுமான ரேவதி கிருஷ்ணசுவாமி. கர்னாடக இசை மேதையும் மூத்த வயலின் இசைக்கலைஞருமான சங்கீத கலாநிதி எம்.சந்திரசேகரின் மாணவி ரேவதி.

``புகழ்பெற்ற கீர்த்தனைகள் பலவும் ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்திருப்பதைப் போன்றே, சிறிய குழந்தைகளும் பாடுவதற்கு உகந்த பஜனைப் பாடல்களும் அந்த ராகத்தில் உள்ளன. அதனால்தான் ஹஸ்ஸத்வனி ராகத்தை பிரதானமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சியை வடிவமைத்தோம்" என்கிறார் ரேவதி.

நாயக விநாயகா, கணேச சரணம் போன்ற பாடல்களைச்சிறிய குழந்தைகளும் ஹம்ஸத்வனி வர்ணம், பாபநாசம் சிவனின் மூலாதார மூர்த்தி, வள்ளலாரின் கலைநிறை கணபதி, தியாகராஜரின் ரகுநாயகா, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் கணபதே, திருப்புகழ், தேவாரம் பாடல்களை சீனியர் மாணவர்களும் பாடினர்.

தொடர்ந்து மூத்த நாகசுர வித்வான் டாக்டர் பழனிவேல் ஹம்ஸத்வனியிலேயே ராகம், தானம் வாசித்து, முத்துசாமி தீட்சிதரின் `வாதாபி கணபதிம்' பாடலில் `பிரணவஸ்வரூப' வரிக்கு நிரவல் வாசித்தார். ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த திரைப்பாடல்களான ரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி, காலம் மாறலாம், தேர் கொண்டு சென்றவன் யாரடி தோழி போன்ற பாடல்களை கீபோர்ட் நடராஜுடன் இணைந்து வயலினில் வாத்திய விருந்தாக ரேவதி வழங்கினார்.

இறுதியாக, ஹம்ஸத்வனியில் ராகம் பாடி வந்தனம் செய்கிறோம் குரு கிருபையினால் என்னும் வரிகளை சாகித்யமாகக் கொண்டு ரேவதி அமைத்த தில்லானாவுக்கு அருமையான நாட்டியத்தை வழங்கினார் கௌதமி மகேஷ்.

SCROLL FOR NEXT