நம்முடைய வாழ்க்கை முறை, உணவு முறை, யோகம், மூச்சுப் பயிற்சி, பேராசையால் ஏற்படும் தீமைகள், கடவுள் நம்பிக்கை, தத்துவம், மருத்துவ முறைகள் போன்ற பலவற்றையும் தங்களின் பட்டறிவால் பாட்டில் சொல்லிச் சென்றிருப்பவர்கள் சித்தர்கள்.
சிவ வாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், வான்மீகர், கடுவெளிச் சித்தர், அழுகணி சித்தர், அகஸ்தியர், கொங்கண நாயனார், திருமூலர் போன்ற பல சித்தர்களின் பாடல்களையும் அதற்கான சுருக்கமான நேர்த்தியான விளக்கத்தையும் நூலாசிரியர் வழங்கியிருக்கிறார். பதினெட்டுச் சித்தர்களின் பெயர்கள், இவர்களைத் தவிர சித்தர்கள் வரிசையில் போற்றக் கூடிய தன்வந்திரி முதல் பதஞ்சலி வரையிலான பதிமூன்று சித்தர்களின் பெயர்கள், அவர்களின் சுருக்கமான வரலாறு போன்றவையும் இந்நூலில் உள்ளன.
ஆறாதாரத் தெய்வங்களை நாடு
அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு
கூறான வட்ட ஆனந்தத்திற் கூடு
கோசமைந் துங்கண்டு குன்றேறி ஆடு
- என்னும் பாடலில் ஆறு ஆதார மையங்களைக் கடந்தால் இறை நிலையை அடையலாம் என்னும் சூத்தி ரத்தை விளக்கும் பாடலாக இதை எழுதியிருப்பவர் இடைக்காட்டுச் சித்தர். இதைப் போன்ற எண்ணற்ற பாடல்களுக்கு இந்நூலில் விளக்கங் கள் உள்ளன.
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
எஸ்.சூரியமூர்த்தி
நர்மதா வெளியீடு, தொடர்புக்கு: 98402 26661.