தற்போது பொதுத்துறை வங்கிகள் போட்டிபோட்டுக்கொண்டு அதிகாரி பணிக்கு (Probationary Officer) இளம் பட்டதாரிகளைத் தேர்வுசெய்து வருகின்றன. வங்கிப் பணியில் சேரும் ஆர்வம் கொண்ட திறமையான இளைஞர்களைத் தேர்வுசெய்து அவர்களை வங்கியியல் சார்ந்த டிப்ளமா படிப்பை (Post Graduate Diploma in Banking and Finance) படிக்க வைத்து அப்படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களைத் தங்கள் வங்கியிலேயே பணியில் அமர்த்திக்கொள்கின்றன. அண்மையில்தான் இந்தியன் வங்கி இதுபோன்ற தேர்வுமுறைக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கியும் இத்தகைய தேர்வுமுறைக்கு அறிவிப்பு செய்திருக்கிறது.
முதுகலை டிப்ளமா படிப்பு
சிண்டிகேட் வங்கியானது மேற்குறிப்பிட்ட முறையில் வங்கி அதிகாரி பணியில் 400 காலியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்காகத் தேசிய அளவில் போட்டித்தேர்வு நடத்தப்படும். இதன் மூலம் தேர்வுசெய்யப்படும் பட்டதாரிகள் பெங்களூரு மணிபால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் என்ற கல்வி நிறுவனம் மற்றும் மங்களூர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள நிட்டில் எஜுகேஷன் இண்டர்நேஷனல் கல்வி நிறுவனத்திலும் வங்கியில் முதுகலை டிப்ளமா படிப்பில் சேர்க்கப்படுவர். இங்கு 9 மாதங்கள் படிக்க வேண்டும். அப்போது மாதம் ரூ.2500 உதவித்தொகையாக வழங்கப்படும். படிப்புக் கட்டணம் ரூ.3.5 லட்சத்தைச் சிண்டிகேட் வங்கியே கல்விக்கடனாக அளித்துவிடும்.
படித்து முடித்தவுடன் அரசு வேலை
இந்த 9 மாதப் படிப்பை முடித்தவுடன் சிண்டிகேட் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் 3 மாதம் பயிற்சி (Internship) பெற வேண்டும். அப்போது மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததும் சிண்டிகேட் வங்கியில் அதிகாரியாகப் பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு படிப்புக்காக வாங்கிய கல்விக்கடனை மாதாந்திர தவணையில் செலுத்திவிடலாம்.
படித்து முடித்த கையோடு உடனடியாக அரசு வேலைவாய்ப்பையும் வழங்க வகைசெய்யும் இந்த டிப்ளமா படிப்பில் பட்டதாரிகள் சேரலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், உடல் ஊனமுற்றோர் எனில் 55 சதவீத மதிப்பெண் போதும். வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். உரிய கல்வித் தகுதியும் வயது தகுதியும் உடைய பட்டதாரிகள் சிண்டிகேட் வங்கியின் இணையதளத்தை (>www.syndicatebank.in) பயன்படுத்தி டிசம்பர் மாதம் 28-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
என்ன கேட்பார்கள்?
தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 இடங்களில் தேர்வு நடைபெறும். ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வில் ரீசனிங், கணிதம், ஆங்கிலம், பொது அறிவு ஆகிய 4 பகுதிகளில் தலா 50 வினாக்கள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இதற்கு 2 மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாகக் குழு விவாதம், நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இறுதியாக எழுத்துத் தேர்வு மதிப்பெண், குழுவிவாதம், நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வங்கியியல் படிப்புக்குத் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவர். கூடுதல் விவரங்களைச் சிண்டிகேட் வங்கியின் இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.