இணைப்பிதழ்கள்

சேதி தெரியுமா? - வருமான வரி மசோதா நிறைவேறியது

ஷங்கர்

கணக்கில் காட்டப்படாத வருவாயைக் காண்பிக்காதவர்களுக்கு அதிக வரியும் அபராதமும் விதிக்கப்படும். அந்த வகையில், வருமான வரிச்சட்டம் (1961) நிதிச் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவருவதற்கான சட்டதிருத்த மசோதா மக்களவையில் நவம்பர் 29 அன்று எவ்வித விவாதமும் இன்றி நிறைவேறியது. பிரதான் மந்திரி கரீ கல்யாண் யோஜனாவைக் (2016) கொண்டுவருவதற்கான மசோதா இது. இத்திட்டத்தின் கீழ், வரி செலுத்துபவர்கள், வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் சேமித்து வைத்திருக்கும், இதுவரை காண்பிக்காத வருவாய் விவரங்களை டிசம்பர் 30-க்குள் தெரிவிக்க வேண்டும்.

அப்படித் தாமாக முன்வந்து தெரிவிப்பவர்களுக்கு அபராதமும் அவர்கள் கணக்கில் காட்டாத தொகையிலிருந்து 50 சதவீதம் பணம் வரியாகப் பிடிக்கப்படும். அந்தப் பணம் வேளாண்மை, உள்கட்டுமானம், ஆரம்பக் கல்வி, ஆரம்பச் சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் பொதுக்கழிப்பறை வசதிகளைச் செய்வதற்கு ஒதுக்கப்படும். இந்த வரி ப்ரதான் மந்திரி கரீப் கல்யாண் செஸ் வரி என்று அழைக்கப்படும். இந்த மசோதாவில், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சி செய்வோரை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்தால் அவர்களுக்கு அபராதம் உட்பட 85 சதவீதம் வரி விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு செய்யும் ஆளற்ற வானூர்திகள்

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நிலங்களின் விவரங்களைத் தொகுத்து, பேரிடர்களை அளவிடுவதற்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆளற்ற வானூர்திகளைப் பயன்படுத்தி வருகிறது. ஷில்லாங்கைச் சேர்ந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அமைப்பான நார்த் ஈஸ்டர்ன் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் சென்டர்தான் ஆளற்ற வானூர்திகளைப் பயன்படுத்தியுள்ளது. இவை அன்மேன்டு ஏரியல் வெகிக்ள்ஸ் (unmanned aerial vehicles (UAVs)) என்று அழைக்கப்படுகின்றன. இவை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விவரங்களுடன் சேர்த்துப் பேரிடர் பாதித்த இடங்களின் நிலவரங்களையும் உடனடியாகத் தரக்கூடியவை. மேகாலயாவின் இதயமென்று கருதப்படும் என்.எச்.40 தேசிய நெடுஞ்சாலை, நிலச்சரிவால் சமீபத்தில் பாதிக்கப்பட்டபோது, இந்த ஆளற்ற வானூர்திகள் மூலமாகத்தான் சேத நிலவரங்கள் மதிப்பிடப்பட்டன.

வீழ்ச்சியடையும் பாலின விகிதாசாரம்

இந்தியத் தலைமைப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட குடிமைப் பதிவு அமைப்பின் விவரங்களின்படி, இந்தியாவில் பாலின விகிதாசாரம் மென்மேலும் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. 2011-ம் ஆண்டில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 909 பெண் குழந்தைகளாக, 2013-ல் 898 பெண் குழந்தைகளும், 2014-ல் 887 பெண் குழந்தைகளுமாக இருந்தது. தற்போது பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகளை விட அதிகமாக இருக்கும் இடமாக லட்சத் தீவு உள்ளது. இங்கே ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 1043 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அந்தமான் நிகோபார் தீவுகளில் 1031-ம் அருணாசலப் பிரதேசத்தில் 993 பெண் குழந்தை களும் உள்ளனர். குறைந்தபட்சப் பெண் குழந்தைகள் உள்ள மாநிலங்களாக மணிப்பூர் (684), ராஜஸ்தான் (799) மற்றும் தமிழகம் (834) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

சாய்னா நேவால் அதிர்ச்சித் தோல்வி

மக்காவ் ஓபன் பாட்மிண்டன் கால் இறுதிப் போட்டியில், கடந்த டிசம்பர் 2-ம் தேதி இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வியடைந்தார். உலகத் தரவரிசைப் பட்டியலில் 11-ம் இடத்திலிருந்து 10-ம் இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சாய்னா, 226-வது இடத்திலுள்ள 19 வயது சீனா வீராங்கனை ஜிஹங்யிமானிடம் 17-21, 17-21 நேர் செட்டில் தோல்வியுற்றார். இத்தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் மூன்று செட்கள் விளையாடி சாய்னா நேவால் வெற்றி பெற்றிருந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர் சாய் பிரணீத் 19-21, 9-21 என்ற நேர் செட்டில் சீனாவின் ஜூன் பெங்கிடம் தோல்வியடைந்தார்.

மகளிர் கிரிக்கெட்டில் ஆசிய கோப்பை

மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இறுதி லீக் ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை கடந்த டிசம்பர் 2-ம் தேதி வீழ்த்தியது. பாங்காக்கில் நடைபெற்ற இத்தொடரின் கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. 121 ரன்கள் இலக்குடன் விளையாடத் தொடங்கிய நேபாள அணி 16.3 ஓவர்களில் வெறும் 21 ரன்களில் அத்தனை விக்கெட்களையும் பறிகொடுத்துச் சுருண்டது.

SCROLL FOR NEXT