இணைப்பிதழ்கள்

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்-25: தோல்வியாளர்களே சிறந்த வழிகாட்டிகள்!

ஆர்.ஷபிமுன்னா

யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதித் தோல்வி அடைந்தவர்களிடம் இருந்து பெற்ற ஆலோசனையால் ஐ.ஏ.எஸ். ஆனேன் என்கிறார் பி.முத்துகுமாரசாமி. 2007 பேட்ச்சின் உ.பி. பிரிவு அதிகாரியான இவர் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் செயலாளராக உள்ளார்.

பயிற்சியைவிட சொந்த முயற்சி

கரூரைச் சேர்ந்த முத்துகுமாரசாமி முழுக்கத் முழுக்க தமிழ்வழிக் கல்வி மூலம் பள்ளிப் படிப்பை முடித்தார். மருத்துவம் படிக்க ஆசைப்பட்டபோது முதல் முயற்சியில் கிடைக்கவில்லை. அதிக மதிப்பெண் பெற மறுதேர்வு எழுதி 1994-ல் தேர்வாகிச் சென்னையின் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இக்கல்லூரி யூ.பி.எஸ்.சி. தேர்வாளர்களுக்குப் பெயர் பெற்றது. நாடு முழுவதிலும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்றவர்கள் அந்தக் கல்லூரிக்கு வந்து மாணவர்களை ஊக்குவிப்பது வழக்கம். இப்படித்தான் முத்துவுக்கும் யூ.பி.எஸ்.சி. எழுதும் ஆர்வம் வந்தது.

ஆனால் முதல் முறை பெயரளவுக்கு மட்டும் எழுதியதால் முதல்நிலையில்கூட வெல்ல முடியவில்லை. பின்னர், புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் விலங்குகளின் உணவு பிரிவில் முதுகலை பட்டப் படிப்பை முடித்தார். அதன் பிறகு 2003-ல் மூன்றாவது முயற்சியில் யூ.பி.எஸ்.சி. யில் தேர்வாகி ஐ.ஏ.எஸ். ஆனார்.

“கால்நடை மருத்துவம் படித்து விட்டு, முதல் இரண்டு முறை விலங்கியல், புவியியலை விருப்பப் பாடங்களாக எடுத்தது தவறு என்பதை உணர்ந்தேன். ஆகவே, மூன்றாவது முயற்சியில் இரண்டாம்நிலை தேர்வில் விலங்கியலுக்குப் பதிலாகக் கால்நடை அறிவியலை எழுதி வெற்றி பெற்றேன். சென்னையிலும் டெல்லியிலும் உள்ள பயிற்சி மையங்களில் படித்தும் அவை எனக்குக் கைகொடுக்கவில்லை. இதனால் நானே அன்றாடம் 8 முதல் 10 மணி நேரம்வரை படித்தேன்.

குறிப்பாக ஏற்கெனவே யூ.பி.எஸ்.சி. எழுதித் தோல்வி அடைந்தவர்களிடமிருந்து பல ஆலோசனைகள் பெற்றேன். தோல்வியைத் தழுவியவர்கள் செய்த தவறுகளைத் தெரிந்துகொண்டால் அவற்றைத் தவிர்க்கலாம். இது மட்டுமல்லாமல், தமிழகப் பிரிவு கண்ணன் ஐ.பி.எஸ்., அனந்தகுமார் ஐ.ஏ.எஸ்., உத்தரகண்டின் மீனாட்சி சுந்தரம் ஐ.ஏ.எஸ்., யுவராஜ் ஐ.ஏ.எஸ். ஆகிய வெற்றியாளர்களிடம் கிடைத்த ஆலோசனையும் பெரிதும் உதவியது” என்கிறார் முத்துகுமாரசாமி.

வகித்த பதவிகள்

இவரது முதல் பணி ஜான்சி மாவட்டத் துணை ஆட்சியர், பிறகு துணைத் தேர்தல் அதிகாரி. கான்பூர் நகர இணை ஆட்சியராக இருந்த பின்பு மீண்டும் ஜான்சியின் தலைமை வளர்ச்சி அதிகாரி ஆனார். இதற்கிடையே உ.பி. மாநில ஊரக வளர்ச்சித் துறை, நீர்ப்பாசனத் திட்டம், மின்சாரத் துறை ஆகியவற்றின் இயக்குநர் மற்றும் தலைவராகவும் பதவி வகித்தார். தற்போது உபி முதல்வரின் சிறப்பு செயலாளராக உள்ளார். முத்துகுமாரசாமியின் வாழ்க்கை துணையான அனிதாவும் யூ.பி.எஸ்.சி. வெற்றியாளர். அவர் ஐ.ஆர்.எஸ். (ஐ.டி.).

முதலமைச்சரிடம் பணி அனுபவம்

இளம் வயதிலேயே முதலமைச்சர் பதவி ஏற்ற அகிலேஷ் தன்னைப் போன்ற வயது குறைந்த அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட விரும்புபவர். இதன் காரணமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துகுமாரசாமிக்கு அதில் பலதுறைகளின் அனுபவம் ஒரே சமயத்தில் கிடைத்துவருகிறது. உ.பி.யின் 75 மாவட்டங்களில் உருவாகும் பிரச்சினைகளில் முதல்வர் உத்தரவின் பேரில் உடனுக்குடன் நேரடியாகத் தலையிட்டுத் தீர்க்கும் அனுபவமும் இதன் மூலம் கிடைக்கிறது என்கிறார் முத்துகுமாரசாமி.

அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளில் கவனம் வைத்துப் புதிய திட்டங்களுக்கு வழிவகுப்பது, செயல்படுத்துவதும் புதிய அனுபவமே. ஒரு மாநில அரசு அமலாக்கும் புதிய திட்டங்கள், கொள்கைகள், அதன் அடிப்படைக் காரணங்கள், அதன் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள் எனப் பல்வேறு வகை திறன்களை அறியும் வாய்ப்பு முத்துவுக்குக் கிடைத்துள்ளது. முதல்வர் அலுவலகத்தில் இடப்படும் உத்தரவுகளை எப்படி விரைந்து அமல்படுத்துவது, தவறுகளைக் கண்காணிப்பது, பத்திரிகைகளில் சுட்டிக்காட்டப்படும் அரசின் தவறுகளை உடனடியாகச் சரிசெய்வது போன்ற விஷயங்களிலும் இளம் வயதிலேயே அதிக அனுபவம் பெற்றுள்ளார்.

சிறு வயது முதல் வித்தியாசமான சவால்களைச் சந்தித்தவருக்கு மத்திய அரசில் மூன்று வருடம் பணியாற்றும் வாய்ப்பும் தற்போது கிடைத்துள்ளது. மியான்மர் நாட்டில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தின் வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் முதல் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பணியில் இணையத் தன்னை முதல்வர் அலுவலகம் விடுவிப்பதற்காகக் காத்திருக்கிறார் முத்துகுமாரசாமி.

புதியவர்களுக்கான யோசனை

மற்றவர்கள் படிக்கும் முறையைப் பின்பற்றாமல், தனக்கு எது சிறந்தது என்பதைத் தானேதான் கண்டறிய வேண்டும். ஏனென்றால் ஒவ்வொருவர் படிக்கும் முறை வித்தியாசமானது.

# கடந்த 10 ஆண்டுகள் கேட்கப்பட்ட கேள்விகளைப் படித்து, அவற்றைத் தொகுத்துத் தவறாமல் படிக்க வேண்டும்.

# நேர்முகத்தேர்வில் நம்முடைய சொந்த ஊர், பட்டப் படிப்பு, செய்த பணி, வாழ்ந்த சூழல் பற்றிய கேள்விகளை தவறாமல் கேட்பார்கள். இதைப் பற்றி விரிவாகத் தெரிந்து வைத்திருந்தால் நேர்முகத்தேர்வில் வெற்றி உறுதி. ஏனெனில், நாம் அளிக்கும் ஆழமான பதிலைப் பொறுத்து மதிப்பெண் கிடைக்கும்.

# அன்றாடம் எவ்வளவு நேரம் படித்தாலும் ஒரு அரை மணி நேரம் அமைதியாகத் தியானம் செய்வது நல்லது. இதன் மூலம் பதற்றம் விலகி, புத்துணர்வு பெறலாம்.

# நம்முடைய இளைஞர்கள் பலரிடம் திறமை இருந்தாலும் பேச்சுத் திறன் குறைவாக உள்ளது. பள்ளி நாட்கள் முதலே பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்வது நிச்சயம் பிற்காலத்தில் கைகொடுக்கும்.

# யூ.பி.எஸ்.சி. தேர்வுத் தயாரிப்புக்காக நாம் எவ்வளவு மெனக்கெடுகிறோமோ அது பணியிலும் கைகொடுக்கும். குறிப்பாக, பணியில் நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட சட்டதிட்டங்களை வேகமாகப் படித்துப் புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க, அது முதல் கட்டப் பயிற்சி என்றே சொல்லலாம்.

SCROLL FOR NEXT