கியூபாவின் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ நவம்பர் 26 அன்று தனது 90-வது வயதில் ஹவானாவில் காலமானார். 49 ஆண்டுகள் பிரதமராகவும் (1959-1976) அதிபராகவும் (1976-2008) கியூபாவை ஆட்சி செய்தவர் அவர். நீண்ட காலம் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என்றப் பெருமைக்கு உரியவர். 2008-ல் உடல் நலக் குறைவால் பதவியிலிருந்து விலகினார். அதன்பின்னர் அவருடைய சகோதரரான ரவுல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபர் ஆனார்.
புரட்சி மூலமாக கியூபாவில் கம்யூனிச ஆட்சியைக் கொண்டுவந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அந்நாட்டில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர். அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். அமெரிக்காவுடனான பனிப்போரில் சோவியத்துக்கு ஆதரவு தந்தவர். அவரைக் கொல்ல அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ 638 முறை முயற்சித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமைதிக்கான நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படும் கன்ஃபூஷியஸ் அமைதிப் பரிசை சீனா 2014-ல் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு வழங்கி கவுரவித்தது.
இந்தூர்-பாட்னா ரயில் விபத்து
உத்தரப் பிரதேசத்தில் இந்தூர்- பாட்னா விரைவு ரயில் நவம்பர் 20-ம் தேதி அதிகாலை தடம்புரண்டதில் 150 பேர் பலியானார்கள். 200க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். மத்தியப் பிரதேசம் இந்தூரிலிருந்து பிஹார் மாநிலத்தின் பாட்னாவை நோக்கி விரைவு ரயில் சென்றுகொண்டிருந்த போது, உத்தரப் பிரதேசத்தில் புக்ரயான் என்னும் இடத்தில் 14 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. ராணுவ மருத்துவர்கள், ரயில்வே அதிகாரிகள், தேசியப் பேரிடர் மீட்பு படை, மாநிலப் போலீஸார் உள்ளிட்டோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் விரைவாக ஈடுபட்டனர்.
விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாகக் கூறினார். கடந்த 17 வருடங்களில் இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகளில் மிகப் பெரிய விபத்தாக இது கருதப்படுகிறது.
விஞ்ஞானி எம்.ஜி.கே. மேனன் மறைவு
உயர் ஆற்றல் அணுத்துகள் விஞ்ஞானியும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை வகுப்பாளருமான பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன், நவம்பர் 22 அன்று 88-வது வயதில் காலமானார். அவர் விஞ்ஞானி, நாடாளுமன்றவாதி, அமைச்சர் எனப் பல முகங்கள் கொண்டவர். மாம்பில்லிகலத்தில் கோவிந்த் குமார் (எம்.ஜி.கே.) மேனன், கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர். 1953-ல் இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் 25 வயதிலேயே பிஎச்.டி. முடித்தார். விஞ்ஞானி ஹோமி பாபாவின் அழைப்பின் பேரில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (டிஐஎப்ஆர்) நிறுவனத்தில் 1955-ல் சேர்ந்தார்.
1966-ல் ஹோமி பாபா காலமடைந்த பிறகு அதே நிறுவனத்தின் இயக்குநரானார். 1971-ல் இந்திய விண்வெளி ஆய்வுத் நிறுவனம் மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்த இயற்பியல் ஆய்வகத்துக்கும் கூடுதல் தலைவராகப் பொறுப்பேற்றார். திட்டக் கமிஷன் உறுப்பினர், பிரதமரின் விஞ்ஞான ஆலோசகர், 1990 முதல் 1996 வரை மாநிலங்களவை உறுப்பினர், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அமைச்சரவையில் இணை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். இவரைக் கவுரவிக்கும் விதமாக விண்கல் 7564-க்கு ‘கோகுமேனன்’ என்று பெயரிடப்பட்டது.
பெண் பத்திரிகையாளருக்கு விருது
இந்தியப் பத்திரிகையாளர் மாலினி சுப்ரமணியத்திற்கு 2016-ம் ஆண்டுக்கான சர்வதேசப் பத்திரிகை சுதந்திரத்திற்கான விருது (International Press Freedom Award) அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரோல்.இன் (Scroll.in.) இணையதளத்திற்குக் கட்டுரைகள் எழுதிவருபவர் இவர். சத்தீஸ்கர் மாநிலத்தில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் பொதுமக்களிடம் செய்யும் அத்துமீறல்கள், பெண்கள் மீதான பாலியல் ரீதியான வன்முறைகள், சட்ட விரோதக் கொலை, பத்திரிகையாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் பற்றித் தொடர்ந்து எழுதிவருகிறார்.
நக்சலைட்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியான பஸ்தார் பிராந்தியத்திலிருந்து தொடர்ந்து சுதந்திரமாகச் செய்திகளை அளித்து வந்ததற்கு நியூயார்க்கைச் சேர்ந்த ‘கமிட்டி டு ப்ரொடக்ட் ஜர்னலிஸ்ட்ஸ்’ என்ற தொண்டு நிறுவனம் இந்த விருதை வழங்குகிறது. இவருடன் ஆஸ்கர் மார்டினஸ் (எல் சல்வடார்), கேன் டுன்டர் (துருக்கி), அபு செய்த் (எகிப்து) ஆகிய பத்திரிகையாளர்களும் இந்த விருதைப் பெறுகின்றனர்.
தொடர்ந்து நிருபிக்கும் பி.வி.சிந்து
ரியோ ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத் தாரகை பி.வி.சிந்து நவம்பர் 21 அன்று ஹாங்காங்கில் நடைபெற்ற சீன ஓப்பன் சூப்பர் சீரிஸ் பெண்கள் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் பட்டம் வென்றார். உலகத் தரவரிசைப் பட்டியலில் ஒன்பதாவது இடத்திலுள்ள சீனாவின் சன்சுயிக்கும் 11-வது இடத்தில் உள்ள சிந்துவுக்கும் தொடக்கம் முதலே கடுமையான போட்டி நிலவியது. இதில் ஏழு லட்சம் டாலர் பரிசு மற்றும் கோப்பையை சிந்து வென்றார். இந்த வெற்றியை அடுத்து 27 நவம்பர் அன்று சீன தைபே வீராங்கனை தை ஸூ யிங் என்பவரிடம் இறுதிப் போட்டியில் சிந்து 15-21, 17-21 என்ற நேர் செட்களில் கடுமையாக போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
மன்மோகன் சிங் கண்டனம்
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்க நடவடிக்கையை, மாபெரும் நிர்வாகச் சீர்கேடு என்று மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நவம்பர் 24-ம் தேதி விமர்சித்தார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2 சதவீதம் குறையும் என்றார். இதற்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில்தான் அதிகபட்சமாகக் கறுப்புப் பணம் புழக்கம் ஏற்பட்டது என்று விமர்சித்தார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏழைகள், விவசாயிகள் மற்றும் சிறுவியாபாரிகள் துயரத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் கூறினார்.