இணைப்பிதழ்கள்

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்-22: பொறியியல் மாணவருக்கு எளிது!

ஆர்.ஷபிமுன்னா

யூ.பி.எஸ்.சி.யின் சி-சாட் தேர்வு முறையின் மூலம், பொறியியல் மாணவர்கள் எளிதில் தகுதி பெறலாம் என்பதற்கு உதாரணம் தமீம் அன்சாரியா, ஐ.ஏ.எஸ். 2015-ம் ஆண்டு பேட்ச்சின் உ.பி. பிரிவில் ஹர்தோய் மாவட்டத் துணை ஆட்சியராகப் பயிற்சி பெற்றுவருகிறார்.

சென்னையைச் சேர்ந்த தமீம் அன்சாரியா சைதாப்பேட்டை மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி கற்றவர் 10-ம் வகுப்பில் சென்னை மாவட்ட அளவில் இரண்டாவது இடம் பிடித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பொறியியல் பட்டம் பெற்றதும் யூ.பி.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்கினார். முதல் முயற்சியிலேயே நேர்முகத் தேர்வு வரை சென்றும் அப்போது எந்தப் பணியும் கிடைக்கவில்லை. இரண்டாவது முயற்சியில் ஐ.சி.ஏ.எஸ். (இந்தியன் சிவில் அக்கவுண்ட்ஸ் சர்வீஸ்) கிடைத்தது. ஆனால், விடாமல் மேலும் இரண்டு முறைகள் முயற்சி செய்து 314-வது ரேங்க்கில் ஐ.ஏ.எஸ். ஆனார்.

ஆர்வம் வளர்த்த அரசுப் பள்ளி

“நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து அப்பா வருடாவருடம் யூ.பி.எஸ்.சி. தேர்வில் வென்றவர்கள் பற்றிய செய்திகளை எனக்குப் படித்துக் காட்டுவார். அதேபோல ஒப்புவித்தல், விநாடி வினா, பேச்சுப்போட்டி என அனைத்திலும் உற்சாகமாகப் பங்கேற்று நான் பரிசுகள் குவித்தேன். முக்கியமாக எதையும் என் மீது திணிக்காத அரசுப் பள்ளிச் சூழல் எனக்கு வரப்பிரசாதமாக அமைந்தது” என்கிறார் தமீம்.

பொறியியல் பட்டம் பெற்ற கையோடு ஐ.டி. துறையில் வேலை கிடைத்தபோதும் யூ.பி.எஸ்.சி. வெல்ல முடிவெடுத்தார் தமீம். முதல் முயற்சியில் விருப்பப் பாடமாகப் புவியியலும் உளவியலும் தேர்ந்தெடுத்தார். ஆனால், உளவியல் பிரிவில் மதிப்பெண் குறையவே சமூகவியலைத் தேர்ந்தெடுத்தார். இரண்டாவது முயற்சிக்கு முன்பாக 2012-ல் தமிழக அரசின் குரூப்-2வில் வென்றவர் தலைமை செயலகத்தில் உதவி அலுவலக அதிகாரியாகவும் ஒரு வருடம் பணியாற்றினார்.

“உளவியல் எனக்குப் பிடித்த பாடம் என்பதால் தேர்வு நோக்கில் அல்லாமல் அதில் பிடித்ததையெல்லாம் படித்தேன். இதனால் ஏற்பட்ட குழப்பத்தால் அதில் மதிப்பெண் குறைந்தது. நாம் எடுக்கும் விருப்பப் பாடத்தில் சரியாகத் திட்டமிட்டுப் படிப்பது அவசியம் என்பது அப்போது புரிந்தது. முதல் முயற்சியிலேயே நான் நேர்முகத் தேர்வு வரை சென்றதால் அடுத்த மூன்று முறைகளிலும் அச்சமின்றித் தேர்வுகளை எதிர்கொண்டேன்” என்கிறார்.

கைகொடுத்தது திறனறிவு

சிறுவயது முதலே ஐ.ஏ.எஸ். கனவு இருந்தும் கலைப் பிரிவில் பட்டம் பெறாமல், ஏன் பொறியியல் படித்தார் என்கிற கேள்வி நான்கு முறையும் நேர்முகத் தேர்வில் தமீமிடம் கேட்கப்பட்டது. “பொறியியல் மாணவர்களுக்கு ஆப்டிடியூட் தேர்வு (திறனறி சோதனை), திட்ட அறிக்கை தயாரித்து அதைப் பற்றி விவரிப்பது, நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டுவதும் கட்டாயப் பாடமாகும். ஒரு செமஸ்டருக்கு எட்டுப் பாடங்கள் வரை பொறியியலில் படிக்கும் அனுபவம் கிடைக்கும். 2011-ல் யூ.பி.எஸ்.சி.யின் சி-சாட் முறையில், பொது அறிவுடன் ஆப்டிடியுட் தேர்வும் முதல் நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வெல்வதற்குப் பொறியியல் படிப்பில் கற்றுக்கொண்ட ஆப்டிடியூட் பெரிதும் உதவியது என்கிற பதிலைத்தான் தேர்வாளர்களிடம் சொன்னேன்” என்கிறார்.

உ.பி. மாநிலத்தைப் பொறுத்தவரை புதிய திட்டங்களைத் தீட்டுவதைக் காட்டிலும் ஏற்கெனவே உள்ளதை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற நிலைமைதான் உள்ளது. அங்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வும் மிகக் குறைவு. ஆக, திட்டங்களை முறையாக அமல்படுத்தினாலே உ.பி. முன்னேறிவிடும் என்கிற முனைப்புடன் அந்த மக்களுக்கு உழைக்கத் தொடங்கிவிட்டார் தமீம்.

SCROLL FOR NEXT