இணைப்பிதழ்கள்

வடகிழக்கு மாநிலங்கள் - போராடிப் பெற்ற மணிப்பூர்!

வீ.பா.கணேசன்

இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில் வடகிழக்குப் பகுதி மூன்று பிரிவுகளாக இருந்தன. பிரிட்டிஷாரின் நேரடி ஆளுகையின் கீழிருந்தது அசாம், அதையொட்டிப் பழங்குடிகள் வசித்துவந்த மலைப் பகுதிகள் இருந்தன, அதற்குக் கப்பம் செலுத்திவந்தன மணிப்பூர், திரிபுரா அரசுகள்.

தொடரும் மோதல்!

இதர பழங்குடிகளிலிருந்து விலகி நின்று தனிப்பட்ட வகையில் வழிவழியாக அரசாட்சியின் கீழ் இருந்துவந்த பகுதிதான் மணிப்பூர். இங்குக் காலம்காலமாகவே மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கும் சமதளப் பகுதிகளில் வாழும் இதர பிரிவினருக்கும் இடையே நீடித்த பகை நிலவியது. பழங்குடிகள் திடீரென்று சமதளப் பகுதிகளின் மீது படையெடுத்துக் கொள்ளையடித்து, ஆட்களைக் கவர்ந்து சென்று அடிமைகளாக விற்பது அங்கு வழக்கமாக இருந்தது. இங்குச் சமதளப் பகுதியில் வசித்த ‘மீட்டி’ பிரிவினருடன் நாகா, லுசாய் போன்ற பகுதிகளில் வசித்த பழங்குடிகள் மோதிக்கொண்டே இருந்தனர்.

இதையொட்டி அங்கு வசித்த ஒவ்வொரு வரும் 40 நாட்களில் 10 நாட்கள் அரசருக்காகக் கட்டாயமாகச் சேவை செய்யும் ‘லாலூப்’ முறை நிலவியது. இவ்வகையில் நாட்டின் எல்லைகளில் இருந்த இதர பழங்குடிகளின் அத்துமீறல்களைத் தடுக்கும் வகையில் மணிப்பூர் அரசு, முறையான ராணுவ ஏற்பாடுகளுடன் செயல்பட்டது. 1833-ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாகத் தன் படைகளை அனுப்பி உதவி செய்து வந்த அரசாகவும் மணிப்பூர் இருந்தது. மணிப்பூரின் ராணுவ ஒத்துழைப்பே பிரிட்டிஷார் நாகா, லுசாய் மலைப் பகுதி களைக் கையகப்படுத்த உதவியது. அன்று அதன் நிரந்தர எதிரியாகப் பர்மா இருந்தது.

காக்கும் தளபதிகள்

நாட்டின் தென்பகுதி, வடபகுதி மலைப்பகுதிகளைப் பலராம் மேஜர், தங்கல் மேஜர் ஆகிய தளபதிகள் பாதுகாத்தனர். மணிப்பூர் தனி நாடாக இருந்தபோதே பலராம் மேஜர் இறந்துவிட்டார். 1891-ல் நடைபெற்ற பிரிட்டிஷாருக்கு எதிரான போரில் மணிப்பூர் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தளபதி தங்கல் மேஜர், இளவரசர் திகேந்திரஜித் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். பிரிட்டனுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியில் பங்கேற்ற இதர இளவரசர்கள் அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்டனர். அதன் பிறகு நாடு விடுதலை பெறும்வரை பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கப்பம் செலுத்தி வந்த இதர இந்தியச் சிற்றரசுகளைப் போலவே மணிப்பூரிலும் அரசாட்சி நீடித்தது.

இந்திய விடுதலைக்குப் பின்னர் மணிப்பூர் அரசர் மகாராஜா போதசந்திர சிங் 1949 செப்டம் பரில் ஷில்லாங் நகருக்குச் சென்றார். அங்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டார். அவரைப் பணிய வைக்க இந்திய ராணுவம் அசாம் பகுதியில் தயார் நிலையில் இருந்தது. ஆறு நாட்களுக்குப் பிறகு 21 செப்டம்பரில் அவர் கையெழுத்திட நேர்ந்தது. இந்த இணைப்பு அக்டோபர் 15, 1949 அன்று அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்தது.

தனிமாநிலக் கோரிக்கை!

அதுவரை மணிப்பூர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த சட்டசபை கலைக்கப்பட்டு, மேஜர் ஜெனரல் ராவல் அமர் சிங் என்ற அதிகாரியின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பின்பு துணைநிலை மாநிலமாக மாறி, நீடித்த போராட்டத்துக்குப் பிறகு 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் 1963-ல் செயல்படத் தொடங்கியது. தனிமாநிலக் கோரிக்கையை முன்வைத்து ஐக்கியத் தேசிய விடுதலை முன்னணி அமைப்பின் அமைதியான போராட்டங்களைத் தொடர்ந்து ஜனவரி 1972-ல் மணிப்பூர் தனி மாநிலமாக உருவானது.

உண்ணாவிரதப் போராளி

எனினும் இதர பகுதிகளில் நாகா, மிசோ போன்ற இனக் குழுக்கள் மத்தியில் வெடித்தெழுந்த ஆயுதக் குழுக்களைப் பின்பற்றி, 1980-களில் இந்த மாநிலத்திலும் ஆயுதக் குழுக்கள் தோன்றின. இவர்களது தனித் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்திய அரசுடன் இணைந்து செயல்படுவதில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவுகின்றன. இதையடுத்து 1980-களில் இந்த ஆயுதக் குழுக்களின் பரஸ்பரத் தாக்குதல்களை ஒடுக்கும் வகையில் ராணுவம் அழைக்கப்பட்டு, ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் நிறுவப்பட்டது. இந்தக் கறுப்புச் சட்டத்தை எதிர்த்தே இரோம் ஷர்மிளா 16 ஆண்டுகளுக்கு மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு சமீபத்தில் தனது போராட்டத்தை விலக்கிக்கொண்டார்.

குதிரை மீதிருந்துகொண்டே பந்தை அடிக்கும் போலோ விளையாட்டை நவீனப்படுத்திய பெருமை மணிப்பூரையே சேரும். இங்கு வசிக்கும் மீட்டி என்கிற வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினர் வைணவத்தைப் பின்பற்றுகிறார்கள். மீட்டிகளை அடுத்து நாகா, குகி பழங்குடி இனத்தவரும் அதிக அளவில் வசிக்கின்றனர்.

SCROLL FOR NEXT