இணைப்பிதழ்கள்

கேள்வி மூலை 07: குழந்தையை ஹைப்பர் ஆக்குமா இனிப்பு?

ஆதி

“இனிப்பையோ சாக்லேட்டையோ என் குழந்தைக்குத் தந்துவிடாதீர்கள். அதற்கப்புறம் ஹைப்பர் ஆக்டிவ் (அதீதத் துறுதுறுப்பு - சுருக்கமாக ஹைப்பர்) ஆகிவிடுவார்கள். நம்மால் பிடிக்கவே முடியாது” என்று சில பெற்றோர்கள் அலுத்துக்கொண்டு குறைபட்டுக்கொள்வதைக் கேட்டிருப்போம்.

இனிப்பு, சாக்லேட்டில் உள்ள சர்க்கரை உடலுக்கு உடனடி சக்தி தருவது நாம் அறிந்ததுதான். அதீதத் துறுதுறுப்புக்கும் சர்க்கரைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆராய்வதற்காகப் பல்வேறு அறிவியல் பரிசோதனைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட இந்தப் பரிசோதனைகளில் இரண்டுக்கும் எந்தத் தொடர்பும் உறுதி செய்யப்படவில்லை.

‘பாரபட்சமான உறுதிப்படுத்துதல்' (Confirmation Bias) என்ற கோட்பாடு காரணமாக இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற நம்பிக்கை பரவலாகி இருக்கலாம். அமெரிக்காவில் உள்ள கென்டகி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு குழந்தை இனிப்பைச் சாப்பிடாத நிலையிலும், ‘உங்கள் குழந்தை இப்போது சர்க்கரையைச் சாப்பிட்டிருக்கிறது' என்று பொய்யாகச் சில பெற்றோர்களிடம் கூறியபோது, உடனே ‘தன் குழந்தை ஹைப்பராகச் செயல்படுவதாக' பல பெற்றோர்கள் கூறியது பதிவு செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் இனிப்புக்கும் ஹைப்பர் ஆக்டிவுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. அதற்காக, இனிப்பையும் சாக்லேட்டையும் குழந்தைக்கு மட்டுமல்ல, யாருக்குமே அள்ளிக் கொடுத்துவிடக் கூடாது.

ஒருவருடைய உடலில் குளுகோஸ் அல்லது உடல் இயங்குவதற்குத் தேவையான அடிப்படை சக்தி குறைந்தால், உடனடியாக அதைச் சீரமைத்து சுறுசுறுப்பாக ஆக்குவதற்கு நிச்சயமாகச் சர்க்கரையோ, இனிப்போ தேவை என்பதில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை.

SCROLL FOR NEXT