கடல்கள் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கும், அவற்றில் வாழும் உயிரிகள், தாவரங்கள் பற்றிய படிப்புகளுக்கும் இன்று பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக, நேஷனல் ஜியாகிரஃபிக், பிபிசி, டிஸ்கவரி தொலைக்காட்சி அலைவரிசைகளில் காண்பிக்கப்படும் ஆவணப் படங்கள், இன்றைய இளைஞர்களிடம் கடல்சார் உயிரியலாளராகும் ஆசையை உருவாக்கியுள்ளன. ஆனால் இவையெல்லாம் உயர்நிலைப் பள்ளி அளவிலேயே, பலரிடம் உதிர்ந்துவிடக்கூடிய ஆரம்பக்கட்ட ஆசைகள்தான். எந்தத் துறையையும் போன்றே, கடல்சார் உயிரியலாளராவதென்பது பெரும் சவாலையும் அதற்கேற்ற பலன்களையும் கொடுக்கும் பயணம்.
உயிரியல் படிப்புப் பின்னணியைக் கொண்டு ஒருவர் வெற்றிகரமாகவும் பாதுகாப்பானதுமான பணியைப் பெறமுடியும். உயிர்தொழில்நுட்பம் (பயோடெக்னாலஜி), மருந்தியல் (ஃபார்மகாலஜி), கடல்சார் அல்லது நிலம்சார் சூழலியல் ஆலோசனைத் துறைகளில் பணிகள் இருக்கின்றன. ஆனால் உயிரினங்களை ஆய்வு செய்வதைப் பொறுத்தவரை அதீதப் பொறுமை, உறுதி, தீராத ஆர்வம் மூன்றும் தேவை.
மீன்களைப் பிடிப்பவரா கடல் உயிரியலாளர்?
கடல் சார் உயிரியல், கடல் சார் சூழலியல், பெருங்கடலியல் (oceanography) என வெவ்வேறு பெயர்களில் கடல்சார் அறிவியல் துறை அழைக்கப்படுகிறது. ஆனால் இதில் பல சிறப்புப் பிரிவுகள் உள்ளன. கடல் சார் சூழலியலாளர், கடலில் வாழும் உயிரிகளுக்கும் அதன் சூழலுக்கும் இடையிலான உறவை ஆராய்பவர். கடல் சார் உயிரியலாளர், ஒரு குறிப்பிட்ட உயிரியின் உயிரியல் மற்றும் நடத்தையை தொடர்ந்து ஆராய்பவர். கடலியலாளர்களும் கடல்சார் விஞ்ஞானிகளும் கடலை உயிரினப் பன்மைச் சூழலாகத் தக்கவைத்திருக்கும் பாங்குகளையும் செயல்முறைகளையும் பருவநிலைகளையும் ஆராய்பவர்கள்.
மீன்களைப் பிடிக்கும் கடல் சார் உயிரியலாளர்களும் உண்டு. கடலில் அதிக இருப்பில் எத்தனை மீன் வகைகள் உள்ளன? குறைவாக இருக்கும் மீன்வகைகள் எவை? என்பதை இவர்கள் கண்டறிகிறார்கள். வளம் குன்றாத நிலையில் மீன்கள் இருக்க வேண்டுமென்பதே அதற்குக் காரணம். இவர்கள் பவளப்பாறைகள், கடலாமைகள், சுறாக்கள், கடல்வாழ் பாலூட்டிகள், நட்சத்திர மீன்களையும் ஆராய்கிறார்கள். உயிர்களின் உடலியல், வாழ்க்கை வரலாறு, உயிரினத் தொகை, இயல்புகள், மரபணுவியல், ஆரோக்கியம், சூழலியல், நோய்கள், மனிதர்களால் ஏற்படும் தாக்கங்கள், உயிர்ச் சூழல் செயல்முறைகள், பருவநிலை மாறுதலில் ஏற்படும் விளைவுகள் ஆகியவையும் கடல் சார் உயிரியலாளர்களால் ஆராயப்படுகின்றன.
கடல் சூழலுக்கு வரக்கூடிய அச்சுறுத்தல்களை அவதானித்து கடல் மேலாண்மைக்கான திட்டங்களையும் கொள்கைகளையும் வடிவமைப்பதும் இங்கே ஒரு பணிதான்.
உயிரியல் பட்டப் படிப்பு முடித்தவர்களே கடல்சார் உயிரியலாளர்களாக முடியும்.
கடலின இயற்பியல், வேதியியல், உயிரியல், சமூகப் பொருளாதார நிலைகள் என பல துறைகளை உள்ளடக்கியத் துறை இது.
சூழல் பாதுகாப்பு ரீதியான பிரச்சினைகள் சிக்கல் வாய்ந்தவை. அவற்றுக்கு பன்முகத் திறன் கொண்டவர்கள் சேர்ந்து தீர்வு காணவேண்டும். இத்துறையில் ஆராய்ச்சியாளர்களாக வெற்றிகரமான பயணிக்க முனைவர் பட்டம் என்பது அத்தியாவசியம். தாவரவியல், விலங்கியலைப் பிரதானப் படிப்பாகப் படிக்காத இளங்கலை, முதுகலைப் பட்டதாரிகள் கடல் சார்ந்த அனுபவமும், கணிதம் மற்றும் பகுப்பாய்வுத் திறன்களுடனும் இருப்பின் கடல் சார் அறிவியல் அல்லது அதற்கு இணையான புலங்களில் பிஎச்.டி செய்யலாம்.
உயிரியல் அல்லது சூழலியல் படிப்புகள், கடல்சார் உயிரியலாளராவதற்கு அடிப்படையானவையாகப் பரிந்துரை செய்யப்பட்டாலும் வேறு திறன்களும் கோரப்படுகின்றன. கணிப்பொறி ப்ரோக்ராமிங் லேங்வேஜ்களான ஆர், மட்லாப் முதலியவற்றில் திறன்வாய்ந்தவர்களாக இருத்தல் அவசியம். உயர்நிலைப் புள்ளியியல், பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ், மாடலிங், ஜியோக்ரஃபிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் சார்ந்த படிப்பும் இருத்தல் அவசியம். ஸ்கூபா சான்றிதழ் படிப்பு இருந்தால் நலம். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அறிவு அவசியமானது. ஏட்டுப் படிப்பு மட்டுமின்றி ஆய்வகம் மற்றும் களம் சார்ந்த திறன்களும் அவசியம்.
அரும்பு நிலையிலுள்ள விஞ்ஞானிகள் தனியாகவும் குழுவாகவும் பல்வேறு சூழல்களில் பணிபுரிவதற்கான அறிவைப் பெற்றிருத்தல் அவசியம். வெவ்வேறு சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கான அறிவையும் கருவிகளையும் உருவாக்குவதற்கான திறன் இருத்தல் வேண்டும்.
கல்வியில் சிறப்புநிலை அவசியம்
சூத்திரங்களை ஒப்பிப்பவர்களைப் பார்த்து அவர்களது சகாக்கள் வேண்டுமெனில் வியக்கலாம். ஆனால் அது சமூகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இன்றைய விஞ்ஞானிகள், அறிவியல் சாராத துறையினருடனும் கொள்கை வகுப்பவர்களிடமும் தொடர்பு கொண்டிருக்க வேண்டியது அவசியம். அதனால் ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் எளிமையாகப் பேசுவதும் எழுதுவதும் தொடர்பு கொள்வதும் அவசியமானது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கல்லூரிகளில் சேர்வதற்கு அறிவியல் மற்றும் அறிவியல் சாராத இதழ்களில் எழுதியிருப்பதும் கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது.
எங்கே படிக்கலாம்
கடல் சார் உயிரியலைப் பொறுத்தவரை அதற்கென்றே முழுமையான பல்கலைக் கழகங்களும் கல்விநிலையங்களும் இந்தியாவில் சிலவே உள்ளன. வைல்ட்லைஃப் பயாலஜி/ ஈகாலஜி, என்விரான்மெண்டல் சைன்சஸ் அண்ட் ஃபீல்ட் ஸ்கில்ஸ் ஆகியற்றை இந்தியாவில் சிறப்பாகக் கற்றுத்தரும் நிறுவனங்கள் இவை:
# நேச்சர் கன்சர்வேஷன் பவுண்டேஷன்
# நேஷனல் சென்டர் ஃபார் பயாலஜிகல் சைன்சஸ்
# அஷோகா ட்ரஸ்ட் ஃபார் ரிசர்ச் இன் ஈகாலஜி அண்ட் தி என்விரோன்மெண்ட்
# வைல்ட்லைப் கன்சர்வேஷன் சொசைட்டி
# வைல்ட்லைப் ட்ரஸ்ட் ஆப் இந்தியா
# சென்டர் பார் ஈகாலஜிகல் சைன்சஸ்
# அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்தான் மேம்பட்ட கடல் சார் விஞ்ஞானக் கல்வி மற்றும் பயிற்சிகள் சிறப்பாக அளிக்கப்படுகின்றன.
(கட்டுரையாசிரியர் கடல் சார் உயிரியலாளர்)
©தி இந்து தமிழில்: ஷங்கர்