இணைப்பிதழ்கள்

சிவில் விமானப் போக்குவரத்து துறை: பறந்து செல்ல வா!

ம.சுசித்ரா

அடுத்த பத்து ஆண்டுகளில் 60 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு ஒரு குறிப்பிட்ட துறை மட்டுமே வேலை தரத் தயாராகிக்கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? சிவில் ஏவியேஷன் எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைதான் அது. ராணுவச் செயல்பாட்டுக்காக அல்லாமல் பொதுமக்கள் பயணிக்கவும், சரக்குகளை விமான மூலமாகக் கொண்டு செல்லவும் இயங்குவதுதன் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை. இதில் ‘ஸ்கில் இந்தியா’ திட்டத்தின் கீழ் நேரடியாக 10 லட்சம் பேருக்கும் அதனோடு தொடர்புடைய துறைகளில் 50 லட்சம் பேருக்கும் வேலை காத்திருக்கிறது.

இது அடுத்த பத்து ஆண்டுகளில் சாத்தியமாகும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா சமீபத்தில் கூறியுள்ளார். இந்திய இளைஞர்களின் பொருளாதார நிலைமையை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த இந்த வேலைவாய்ப்பு பெரிதும் கைகொடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும் இத்துறை விரிவடையும் என்பதால் வளர்ச்சிப் பாதையில் முக்கியம் இடம் வகிப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இந்தத் துறையில் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது என்கிறார்.

வேலைக்கு ஏற்றத் தகுதி?

இதைக் கேட்கும்போதே பறந்து செல்வது போன்ற உற்சாகம் எழுகிறதல்லவா! ஆனால், முதலில் இத்துறைக்குத் தேவையான திறன் மிக்க மனித ஆற்றலை (skilled manpower) உருவாக்குவதற்கான திட்டமும் செயல்வடிவமும் நம்மிடம் இருக்கிறதா? எந்த நாட்டிலும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் அதற்குரிய உலகத் தரம் வாய்ந்த பயிற்சியும் திறனும் அத்தியாவசியம்.

இதைச் சரியாக உணர்ந்து அக்டோபர் இறுதியில் புது டெல்லியில் நடைபெற்ற பயிலகம் ஒன்றில் சிறப்பு உரை ஆற்றிய ஜெயந்த சின்ஹா அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் துறையின் அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடியுடன் விரிவாகக் கலந்துரையாடினார். தேசியத் திறன் தகுதி கட்டமைப்பின் (National Skill Qualification Framework) கீழ் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் திறன் வளர்ப்பதற்கான விழிப்புணர்வுப் பயிலரங்கமாக அது நடைபெற்றது. அதில் விவாதிக்கப்பட்ட பல விஷயங்களில் முக்கியமானது, இன்றைய இளைஞர்களை வேலைக்குத் தகுதியானவர்களாக மாற்ற 1,500 விதமான புதிய பாடத் திட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும், எனச் சொல்லப்பட்டது.

இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளும்படியான தரமான, நிலைத்தன்மை உடைய பாடங்களைத் தேசியத் திறன் தகுதிக் கட்டமைப்பில் கொண்டுவருவதற்காகப் பெரும் முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் விவாதிக்கப்பட்டது.

கனவுத் திட்டம் நடைமுறை ஆகுமா?

எல்லாவற்றுக்கும் மேலாக, நிகழ்ச்சியின் முடிவில் சிவில் விமானத் துறைக்குத் தேவையானவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் வேலைக்குத் தகுதியானவர்களை உருவாக்கவும் எடுக்கப்பட்டிருக்கும் முக்கியமான ஒப்பந்தம் இது.

அதே நேரத்தில் புதிதாக அறிமுகமாகவிருக்கும் திறன்சார்ந்த கல்வித் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட வேண்டும். அவற்றைக் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளோடு மட்டும் இணைக்காமல் பரவலாக்க வேண்டும். திறன் வளர்க்கும் மையங்கள் தனியாகவும் அரசு அங்கீகாரத்துடன் நிறுவப்பட வேண்டும். திறன்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை போலவே மேலும் பல துறைகளிலும் கூடுதல் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் அரசாங்க வேலை எத்தனை பேருக்குக் கிடைக்கும் என்பது தெரியாது. தனியார் விமான நிறுவனங்கள்தான் வேலை தரப்போகின்றன என்றால் ஊழியர்களின் உரிமைக்கும் நலனுக்கும் உத்தரவாதம் அளிப்பதற்கான நடவடிக்கைகளும் இதனோடு சேர்த்து எடுக்கப்பட வேண்டும். இத்தனையும் ஒருங்கிணைத்து இந்தக் கனவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் எதிர்கால இந்தியாவின் படித்த இளைஞர்கள் உற்சாகமாகப் பறந்து செல்லலாம்!

SCROLL FOR NEXT