கல்லூரி மாணவர்கள் சிலருக்கு கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துவருகிறது. பிற மாணவர்கள் வெளியிடங்களுக்கு வேலை தேடி அலைவது வழக்கம். இந்த நடைமுறையை எளிமைப்படுத்தப் பல நிறுவனங்கள் முயன்றுவருகின்றன. அதில் ஒன்று ஹெச்.சி.எல். டேலன்ட் கேர் சென்டர் எனும் நிறுவனம். இது மாணவர்களுக்கு வேலைக்கான பயிற்சியை அளித்துவருகிறது.
ஹெச்.சி.எல். டேலண்ட் கேர் சென்டர்
ஹெச்.சி.எல். டேலண்ட் கேர் சென்டர், தனியார் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களை ஏற்பாடு செய்துதருகிறது. அந்தப் பணிக்குத் தேவைப்படும் தகுதியுடையவர்களாக மாணவர்களை மாற்றும் முயற்சியை இந்நிறுவனம் மேற்கொள்கிறது. இதற்குத் தேவையான பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. பொறியியல் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் பட்டம் பெற்றவர்களுக்கும் தரமான வேலை கிடைக்க அவசியமான பயிற்சியை இந்நிறுவனம் அளித்துவருகிறது. இதற்காகக் கல்லூரி வளாகங்களில் தேர்வுகளையும் வேலைவாய்ப்பு முகாம்களையும் இந்நிறுவனம் நடத்துகிறது. இவற்றில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவரின் விருப்பத்துக்கேற்ப, அவருக்குப் பிடித்த நிறுவனத்தையும் வேலையையும் தேர்வுசெய்கின்றனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வேலைக்கேற்ற பயிற்சியை அளிக்கிறார்கள்.
மாணவர்களின் குறைபாடுகள்
இன்றைய மாணவர்களிடம் இரு வகைத் திறன்கள் குறைவாக இருக்கின்றன. ஒன்று, தொடர்புகொள்ளும் விதம். மற்றொன்று மொழிசார் பிரச்சினை.
பரவலாக அனைத்துத் துறைகளிலும் பேசப்படும் மொழியாக ஆங்கிலம் இருப்பதால் ஆங்கில மொழிப் பயிற்சியை இந்நிறுவனம் முதலில் அளிக்கிறது. பிறருடன் இயல்பாக ஆங்கிலத்தில் உரையாடும் அளவுக்கு இந்தப் பயிற்சியால் மாணவர்களை மேம்படுத்துகிறார்கள். இத்துடன் ஒரு வேலைக்குத் தேவையான கணினி தொடர்பான அறிவும் பொது அறிவும் இந்தப் பயிற்சி மூலம் மாணவர்களிடம் வளர்த்தெடுக்கப்படுகிறது.
மேலும் இந்நிறுவனம், நடைமுறைப் பயிற்சிக்கு ஏற்ற சூழலை மாணவர்களுக்கு அமைத்துத் தருகிறது. வெறும் பயிற்சியளிக்கும் கூடம் போல் செயல்படாமல், வேலை செய்வதற்கு மனதளவில் மாணவர்களைத் தயார்படுத்த உதவும் உளவியல்சார் பயிற்சிகளையும் இந்நிறுவனம் அளிக்கிறது. வேலையின்போது எதிர்ப்படும் சவால்களை எப்படிச் சமாளிப்பது என்பதையும் சொல்லித்தருகிறார்கள். பயிற்சிக்கு முன்னரே வேலையை உறுதிப்படுத்துவதால், பயிற்சியின் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்திவிடுகிறார்கள். இதனால் மாணவர்கள் ஒரு துறையின் நுட்பமான விவரங்களையும் தெளிவாக அறிந்துகொண்டுவிடுகிறார்கள்.
ஒரு வேலையைக் கையில் வைத்துக்கொண்டுதான் ஒரு மாணவருக்குப் பயிற்சி தரப்படுகிறது. மேலும் இந்தப் பயிற்சியை எடுத்துக்கொள்ளும் மாணவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. ஆகவே, தேர்ந்தெடுக்கப்படும் வேலைக்கு மட்டுமல்லாமல் வேறு வேலைக்குச் செல்லும்போதும் இது உதவுகிறது.
சம்பளத்துடன் கூடிய பயிற்சி
இந்த நிறுவனம் தங்களிடம் வரும் மாணவர்களுக்குப் பயிற்சியின்போதே சம்பளத்தையும் அவர்கள் பயிற்சிக் கூடத்துக்குச் சரிவர வந்துசெல்வதற்குப் போக்குவரத்து வசதிகளையும் செய்துதருகிறது. பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதைப் போல் வீட்டுப்பாடமாகச் சில பயிற்சிகளையும் கொடுக்கிறது.
பயிற்சிக்காக வரும் மாணவர்களிடம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளுக்கேற்பப் பயிற்சிக் கட்டணங்களை வசூலித்துக்கொள்கிறது. இந்தப் பயிற்சி கூடத்தில் சேர வேண்டுமென நினைக்கும் மாணவர்களுக்கு வங்கிக் கடன் எளிதில் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பயிற்சிக்காகச் சேரும் மாணவர்களுக்குப் பயிற்சிக்காக வங்கிக் கடன் பெறுவதில் எந்த ஒரு சிரமமும் இருக்காது என்கின்றனர் நிறுவனத்தினர். இங்கு பயிற்சி முடித்துச் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தரமான பணிகளில் அமர்ந்துவிடுகிறார்கள்.
இந்த நிறுவனம் தொடங்கிச் சில ஆண்டுகளே ஆன நிலையில் முதலில் இப்பணியை ஹெச்.சி.எல். நிறுவனத்தின் உள்ளேயே ஆரம்பித்துள்ளனர். பின்னர் வங்கி, ஐ.டி. ஆகிய துறைகளைத் தேர்வு செய்து அந்தத் துறைகளுக்கான பயிற்சிகளைத் தந்துவந்துள்ளனர். இந்த நிறுவனத்தின் முக்கியக் கிளைகள் தமிழ்நாட்டில் சென்னையிலும் கொல்கத்தாவிலும் இருக்கின்றன. தற்போது அடுத்த கட்டமாக இன்னும் சில துறைகளைத் தேர்வு செய்து அதற்கென மாணவர்களுக்குப் பயிற்சியளித்துவருகின்றனர். இன்னும் சில ஆண்டுக்குள் மேலும் பல துறைகளுக்குப் பயிற்சியளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள். இந்த நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவில் பல இடங்களில் அமைக்கப்படவிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.