இணைப்பிதழ்கள்

வேலை வேண்டுமா? - மத்திய அரசுப் பணி

ஜெ.கு.லிஸ்பன் குமார்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மத்திய சேமிப்புக் கிடங்கு கழகத்தில் (Central Warehousing Corporation) நிர்வாகப் பயிற்சியாளர் (பொது மற்றும் தொழில்நுட்பம்), உதவிப் பொறியாளர் (சிவில்), கணக்காளர், கண்காணிப்பாளர் (பொது), இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சுருக்கெழுத்தர் ஆகிய பதவிகளில் 644 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.

நிர்வாகப் பயிற்சியாளர் (பொது) பணிக்கு முதல் வகுப்புடன் கூடிய எம்.பி.ஏ. (மனித வளம் அல்லது தொழிலாளர் உறவு அல்லது விற்பனை மேலாண்மை) பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிர்வாகப் பயிற்சியாளர் (தொழில்நுட்பம்) பதவிக்கு முதல் வகுப்புடன் கூடிய எம்.எஸ்சி.விவசாயம் அல்லது எம்.எஸ்சி. விலங்கியல் எம்.எஸ்சி. உயிரி-வேதியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பூச்சியியலை (Entomology) ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். சேமிப்பு கிடங்கு மற்றும் குளிர் சங்கிலி மேலாண்மை அல்லது தர மேலாண்மை பாடத்தில் முதுகலை டிப்ளமா பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அடிப்படைத் தகுதி

உதவிப் பொறியாளர் (சிவில்) பணிக்கு பி.இ.சிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணக்காளர் பதவிக்கு பி.காம். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். கண்காணிப்பாளர் (பொது) பதவிக்கு ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம் வேண்டும். இளநிலை கண்காணிப்பாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டம் இருந்தால் போதுமானது. இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு பி.எஸ்சி. விவசாயம், விலங்கியல், வேதியியல், உயிரி-வேதியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். சுருக்கெழுத்தர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்து பயிற்சி (நிமிடத்துக்கு 80 வார்த்தைகள்) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பைப் பொறுத்தவரையில், 25, 28, 30 என பதவிக்கு தக்கவாறு மாறுபடும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறைகள்

தகுதியுள்ள நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சுருக்கெழுத்தர் ஆகிய பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மட்டும் நடத்தப்படும். இந்த பணிகளுக்கு நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது.

ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் சென்னை மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளது. உரிய கல்வித் தகுதியும், வயது வரம்புத் தகுதியும் உடையவர்கள் அக்டோபர் மாதம் 13-ம் தேதிக்குள் மத்திய சேமிப்புக் கிடங்கு கழகத்தின் இணையதளத்தை (https://cwcjobs.com/) பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு, ஆன்லைன் விண்ணப்பமுறை, தேர்வுக்கான பாடத் திட்டம், தேர்வில் தேர்ச்சி பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் முதலான விவரங்களை மேற்சொன்ன இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் தபாலில் அனுப்பப்படாது. விண்ணப்பதாரர்கள்தான் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். எனவே, விண்ணப்பதாரர்கள் அவ்வப்போது இந்த இணையதளத்தைப் பார்த்துவருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் - அக்டோபர் 13

 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் - தேர்வுக்கு ஒரு வாரம் முன்பு

ஆன்லைன் எழுத்துத் தேர்வு - அக்டோபர், நவம்பர், டிசம்பர்

SCROLL FOR NEXT