இணைப்பிதழ்கள்

வேலை வேண்டுமா? - அஞ்சல் வங்கியில் உதவி மேலாளர் ஆகலாம்

ஜெ.கு.லிஸ்பன் குமார்

நீண்ட காலமாகத் தபால் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் இந்திய அஞ்சல் துறை முதன்முறையாக வங்கிச் சேவையில் காலடியெடுத்து வைக்கவிருக்கிறது. அது இந்திய அஞ்சல் வங்கி (India Post Payments Bank Limited) என்ற பெயரில் புதிய வங்கியைத் தொடங்கவுள்ளது. பாரத ரிசர்வ் வங்கியும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது.

இதைத் தொடர்ந்து, பணியாளர் நியமனப் பணியில் இறங்கியுள்ளது இந்திய அஞ்சல் வங்கி. முதல் கட்டமாக உதவி மேலாளர்களைத் தேர்வுசெய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மற்ற பொதுத்துறை வங்கி அதிகாரி பணிகளைப் போலவே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படவுள்ளன.

அடிப்படைத் தகுதி

இப்பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இந்திய அஞ்சல் வங்கி மத்திய அரசு நிறுவனம் என்பதால் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு எனத் தேர்வுகள் இருக்கும். இரண்டு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில்தான் நடத்தப்படும்.

என்ன கேட்பார்கள்?

முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், ரீசனிங், கணிதம் ஆகிய 3 பகுதிகளிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். ஒரு மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். மதிப்பெண் 100. விண்ணப்பதாரர் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட சதவீதம் மதிப் பெண் பெற வேண்டியது அவசியம். 2-வது நிலையான மெயின் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், கணினி அறிவு, பொது அறிவு, கணிதம் ஆகிய 5 பகுதி களிலிருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் 200.

முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு இரு தேர்வுகளிலுமே தவறான பதில்களுக்கு மைனஸ் மார்க் உண்டு. எனவே, விடையளிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறுதியாக விடை தெரியாத கேள்விகளை விட்டுவிடுவதே நல்லது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கு 100 மதிப்பெண். நேர்காணல் தேர்விலும் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இறுதியாக மெயின் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண் (80:20 விகிதாச்சாரம்) அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டுப் பணி நியமனம் நடைபெறும்.

உதவி மேலாளர் தேர்வுக்கு இந்திய அஞ்சல்துறையின் இணையதளத்தைப் பயன்படுத்தி (https://goo.gl/h43UJZ) அக்டோபர் 25-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம், தேர்வுமுறை, தேர்வுக்கான பாடத்திட்டம், இடஒதுக்கீடு வாரியாகக் காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். உதவி மேலாளர் பணிக்குச் சம்பளம் ரூ.65 ஆயிரத்துக்கு மேல் கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT