இணைப்பிதழ்கள்

வடகிழக்கு மாநிலங்கள்: வற்றாத ஜீவநதியும் வறுமை நிறைந்த வாழ்வும்

வீ.பா.கணேசன்

இந்தியாவின் இயற்கை வளம் மிக்க மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்தவை வட கிழக்கு மாநிலங்கள். ‘ஏழு சகோதரிகள்’ என முன்பு அழைக்கப்பட்டு வந்த அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்கள். அவற்றோடு இப்போது சிக்கிம் மாநிலமும் சேர்க்கப்பட்டுவிட்டது. ஆக, இந்தியாவின் வடகிழக்குப் பகுதி இன்று ‘அஷ்டலட்சுமி’ என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலோரின் கவனத்துக்கு இந்த மாநிலங்கள் வருவதே இல்லை. இம்மாநிலங்களின் கலாசாரம், சமூக-பொருளாதரம், அரசியல் குறித்த விரிவான தொடர் இது.

வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலானவற்றின் 98 சதவீத எல்லைகள் சீனா, பங்களாதேஷ், மியான்மர் (பர்மா), பூட்டான் ஆகிய அண்டைநாடுகளைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தியா முழுவதிலுமுள்ள நீர்மின் உற்பத்திக்கான திறன் 145 ஜிகாவாட்ஸ் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் 45% (57.6 ஜிகாவாட்ஸ்) வடகிழக்கில் உள்ளது. அதிலும் 46.9 ஜிகாவாட்ஸ் உற்பத்தித் திறன் கொண்ட மாநிலம் அருணாச்சலப் பிரதேசம் (காரணம், பிரம்மபுத்ரா). இருந்தபோதிலும் இயற்கை அழகும் வளமும் நிறைந்த இப்பகுதி இன்றளவும் இந்தியாவின் ‘சவலைப் பிள்ளை’யாகவே இருக்கிறது.

தேயிலைத் தோட்டப் பிரச்சினை

முதல் பர்மா போரில் பெற்ற வெற்றிக்குப் பிறகு 1826-ல் அசாம் பிரிட்டிஷ் ஆளுகைக்குள் வந்தது. அப்போது அசாம், மணிப்பூர், திரிபுரா ஆகியவை நிர்வாகப் பிரிவுகளாக இருந்தன. மணிப்பூர், திரிபுரா மன்னராட்சியின் கீழ் பிரிட்டிஷ் ஆட்சிக்குத் ‘திறை’ செலுத்திவந்தன. இவற்றின் அரச வம்சத்தினரும் பழங்குடிப் பிரிவினரே. அசாமின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மட்டுமே பிரிட்டிஷ் நிர்வாகம் இருந்தது.

எளிதில் அணுக முடியாத மலைப் பகுதிகளில் பழங்குடிகள் தங்கள் இனக்குழுத் தலைவர்களின் பாரம்பரிய முறையிலான நிர்வாகத்தின்கீழ் வாழ்ந்தனர். அசாம் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலை ஆங்கிலேயர் அறிமுகம் செய்தபோது, பழங்குடிகள் கூலி வேலைகளில் ஈடுபட மறுத்தனர். அவர்களுக்குப் பதிலாக, பிஹார், உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நலிவடைந்த மக்களையும் அன்றைய வங்காளத்தைச் சேர்ந்த முஸ்லிம் விவசாயத் தொழிலாளர்களையும் இப்பகுதியில் தொழிலாளர்களாக ஆங்கிலேயர் குடியேற்றினார்கள். மேலும் அன்றைய சூழலில் ‘அதிகம் படித்த’வர்களான வங்காளிகளை நிர்வாக ஊழியர்களாக நியமித்தனர்.

தொடர் போராட்டம்

19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 1947 வரை (இந்து-முஸ்லிம்) வங்காளிகளின் குடியேற்றம் இப்பகுதியில், குறிப்பாக அசாம், திரிபுராவில், தொடர்ந்து நிகழ்ந்தன. கல்வி, மருத்துவம், அரசு நிர்வாகம், நீதித் துறை எனச் சமூகத்தின் முக்கியப் பொறுப்புகளை அவர்கள் வகித்தனர். மறுபுறம் கிறித்துவ பாதிரிமார்கள் எட்டாத மலைப் பகுதிகளுக்குச் சென்று பழங்குடிகள் மத்தியில் கல்வி போதித்தனர். இதனால் இதர இனத்தவரின் (குறிப்பாக அஹோம், வங்காளி) ஆதிக்கத்தை எதிர்க்கும் கருத்துகள் உருவாகத் தொடங்கின. இதற்கு உரமூட்டும் வகையில் முதல், இரண்டாம் உலகப் போர்களில் பாரம்பரியமாகவே சண்டைக் கலையில் தேர்ச்சி பெற்ற நாகா, மிசோ இனத்தவர் பெருமளவில் பிரிட்டிஷ் படைகளில் இணைந்தனர்.

இந்தியா விடுதலை பெறவிருந்த நேரத்தில் பழங்குடி இனத்தவர், குறிப்பாக நாகா, மிசோ இனத்தவர் தங்கள் தனித்தன்மை கருதி இந்தியாவுடன் இணைய மறுத்தனர். பொதுவாகவே மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகள், இனவாரியாக, அதற்குள் அடங்கியிருந்த குழுவாரியாக, தங்களுக்குள் சண்டையிடுவதும், தோற்றவர்களைச் சிறைப்பிடிப்பதும் அடிமைப்படுத்துவதும் தொடர்கிறது. இதில் தனிநாடு கோரும் நாகா, மிசோ இனத்தவருக்குப் போட்டியாக, போடோ, குக்கி, சக்மா போன்ற இனங்களும் களத்தில் இறங்கின. மறுபுறம் மணிப்பூர், திரிபுரா அரச வம்சத்தினர் தங்கள் இனக்குழுக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கத்தில் இந்தியாவுடன் இணைந்துகொண்டனர்.

விடுதலைக்குப் பின்னர் இந்தப் போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய வடிவில் நீடித்ததைத் தொடர்ந்தே பல்வேறு கட்டங்களில் அசாம் பகுதியானது அசாம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம் என ஐந்து மாநிலங்களாயின. இவற்றோடு மணிப்பூர், திரிபுரா இணைந்து ஏழு சகோதரிகளாக இப்பகுதி உருமாறியது. பின்னர் 1980-களில் வடகிழக்கு வளர்ச்சிக்கான கவுன்சில் உருவானபோது சிக்கிம் மாநிலமும் (புவி அமைப்பில் நேரடித் தொடர்பில்லாமல் இருந்தபோதிலும்) நிர்வாக வசதிக்காகச் சேர்க்கப்பட்டு ‘அஷ்டலட்சுமி’யாக உருமாற்றம் பெற்றது.

இன்றுவரை இங்கு நீடிக்கும் இன மோதல்கள், அதனோடு தொடர்புடைய ஆயுதப் போராட்டங்கள், புதிதுபுதிதாக உருவாகும் ஒப்பந்தங்கள் இந்தியாவின் இதர பகுதிகளைச் செய்திகளாக மட்டுமே வந்தடைகின்றன. இன்றளவும் மத்திய அரசின் கையை எதிர்பார்க்கும் ‘சவலைப் பிள்ளை’களாக நீடிக்கும் இப்பகுதிக்கு இந்திய அரசு அளித்த வாக்குறுதிகள் மறக்கப்பட்டதன் விளைவாகவே, மக்களின் தேவைகள் நிறைவேறாத நிலையில், பயங்கரவாதக் குழுக்களின் களமாக, AFSPA என்ற கருப்புச் சட்டம் (விதிவிலக்காக திரிபுராவைத் தவிர) நடைமுறையில் உள்ள பகுதியாக நீடிக்கிறது.

SCROLL FOR NEXT