அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்கும் உன்னதப் பணியை ஏற்றுக்கொள்பவர்கள் ஆசிரியர்கள். ‘வரலாற்றைப் படைப்பவர் ஆசிரியர்தான்’ என்றார் ‘அறிவியல் புனைகதைகளின் தந்தை’ என்றழைக்கப்படும் எச்.ஜி. வெல்ஸ். எப்போதுமே ஆசிரியர்களுக்கு உலக அளவில் தனி மதிப்புண்டு. இப்படியெல்லாம் ஆசிரியர் பணியை எப்போதுமே சிலாகித்தாலும் பெரும்பாலான சிறந்த மாணவர்கள் ஆசிரியர்கள் ஆக விரும்புவதில்லை. பள்ளி, கல்லூரிப் படிப்பில் உச்சபட்ச மதிப்பெண்களும் தனித்திறமையும் வெளிப்படுத்தும் மாணவர்களில் எத்தனை பேர் ஆசிரியராகக் கனவு காண்கிறார்கள்? தலைசிறந்த பொறியாளர்களும் மருத்துவர்களும் வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் எப்படி அவசியமோ அதே போல திறமைவாய்ந்த ஆசிரியர்கள் இன்றைய முக்கியத் தேவைகளில் ஒன்று.
உலக அளவிலேயே நல்லாசிரியர்களுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது எனச் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைக் கேட்டதும், “நான்கூட ஆசிரியர் ஆக ஆசைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய அதற்கான சூழல் வாய்க்கவில்லையே!” என நினைப்பவர்கள் இருக்கலாம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தயாரானால் நிச்சயமாக உங்களுக்குள் இருக்கும் நல்லாசிரியரை இப்போதே வெளிகொணரலாம்.
தேவையும் வரவேற்பும்
ஒரு பாடப் பிரிவில் அல்லது துறையில் நிபுணராகவும், அதை அழகாக எடுத்துரைக்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டால், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆசிரியராக முடியும். இதைச் செய்ய உங்களுக்கு வயது வரம்போ, குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்கிற எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இதற்குப் பெயர்தான் ‘ஆன்லைன் டீச்சிங். இணையம் வழியாகக் கற்பிக்கும் ஆன்லைன் டீச்சிங் முறைக்கு இன்று மிகப் பெரிய தேவையும் வரவேற்பும் உருவாகியுள்ளது.
ஆன்லைன் ஆசிரியராக யாரோ ஒருவர் உங்களுக்கு வேலை தர காத்திருக்கத் தேவை இல்லை. ஸ்கைப் (Skype), யூடியூப் (Youtube), சமூக ஊடகங்கள் (Social media), இமெயில் (Email), சாட் ரூம்ஸ் (Chat Rooms), மெசேஜ் போர்ட் (Message Board), பாட்காஸ்ட் (Podcast), வலைப்பூ (Blog) போன்ற இணைய ஊடகங்களைப் பயன்படுத்தி இலவசமாகவோ, கட்டண வசூலித்தோ கற்பிக்கலாம்.
ஆன்லைன் கற்பித்தல் நுட்பங்களைக் கற்றுக்கொண்டால் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் ஆசிரியராக முடியும். இப்படியாக, ஐ.ஐ.டி. ஜெ.ஈ.ஈ (IIT JEE) தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஒரு பொறியாளர் வழிகாட்டலாம், மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பதை ஒரு மருத்துவரே கற்பிக்கலாம், கைவினைப் பொருள்களின் செய்முறை சொல்லித்தரலாம், மொழிகளைப் பேச-படிக்கக் கற்பிக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தேவை அறிவு, அனுபவம், கொஞ்சம் தொழில்நுட்பம் மற்றும் தான் அறிந்ததைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் எண்ணம்.
ஆன்லைன் கற்பித்தல் முறைகள்
# நிகழ்நேர மெய்நிகர் வகுப்பு (Live Virtual Class) ஆசிரியரும் மாணவர்களும் வெவ்வேறு இடத்தில் இருந்தால்கூடக் கற்பித்தலைச் சாத்தியமாக்கியிருக்கிறது சாட்டிலைட் தொழில்நுட்பம். இணையம் தொடர்புடைய கணினி மூலமாக வீடியோ அழைப்புகளை (video calls) விடுத்து இந்த வகுப்பு நடைபெறும்.
அதே நேரத்தில் பாரம்பரிய வகுப்பறையில் இருப்பது போலவே ஆசிரியரும் மாணவர்களும் உடனுக்குடன் இதில் உரையாட முடியும், சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற முடியும், தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். சொல்லப்போனால், கணினியோடு இணைக்கப்பட்டிருக்கும் கேமராவின் முன்னால் ஒரு கரும்பலகையில் எழுதிக்கூடப் பாடம் நடத்தலாம். தொலைக்காட்சியில் நம்மிடம் ஒருவர் நேரடியாக உரையாடுவது போன்றதுதான் இந்த வகுப்பு.
# மேஸிவ் ஓபன் ஆன்லைன் கோர்ஸஸ் MOOCS (Massive Open Online Courses) - பதிவு செய்யப்பட்ட வகுப்பை ஆன்லைனில் பதிவிடுவதுதான் MOOCS. இந்த முறையில் பல புதிய படிப்புகள் இணையத்தில் அளிக்கப்படுகின்றன. இதற்கு ஆசிரியரும் மாணவரும் ஒரே நேரத்தில் இணையத்தில் ஆன்லைனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் விரிவுரைகளைப் பார்க்கவும் கேட்கவும் முடியும். இதன் மூலம் மிகச் சிறந்த கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியரிடம் உலகத்தின் ஏதோ முனையில் இருக்கும் மாணவர்கூடப் பாடம் கற்றுக்கொள்ள முடியும்.
# ஒரு மாணவர்- ஒரு ஆசிரியர்- வகுப்பு (One-to-one-class): ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவர் என்கிற ரீதியிலும் கற்பித்தல் நிகழலாம். பாடம் சம்பந்தமாகத் தனிப்பட்ட சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற இந்த முறை மிகவும் உதவிகரமாக இருக்கும்.
# ஒருங்கிணைந்த இணையவழி கற்பித்தல் (Integrated Online Teaching): மொபைல் ஃபோன், டேப்லெட், லேப்டாப், மேஜை கணினி உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்திக் கற்பித்தல் இப்படி அழைக்கப்படுகிறது.